“பீட்டா’வை இந்தியாவில் இருந்து அப்புறப்படுத்துங்கள்”: பாரதிராஜா கோரிக்கை!

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மதுரை அவனியாபுரத்தில் போராட்டம் நடத்திய இயக்குநர் வ.கெளதமன் உள்ளிட்டோரை தாக்கிய காவல்துறைக்கு இயக்குநர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், பீட்டா அமைப்பை இந்தியாவிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கை:

“என் இனிய தமிழ் மக்களே..!

இந்த சொல்லுக்கு அர்த்தம் இருக்க கூடாதோ..?

என் இனிய என்பதற்குப் பதிலாக ரோசமுள்ள, வீரமுள்ள, மானமுள்ள தமிழ் மக்களே..! என்று கூறத் தவறிவிட்டேனோ என்று கூடத் தோன்றுகிறது.

எல்லா நிகழ்வுகளிலும் இனிய தமிழ் மகனாக இருப்பதுனாலேயோ, என்னவோ, ஈ, எறும்புகள் கூட நம்மை மொய்க்க ஆரம்பித்துவிடுகிறது. “தேசியம்..” என்ற ஒரு வார்த்தைக்குள் மயங்கி, நாங்கள், எங்களை நாங்களே அடிமையாக்கி விட்டோமோ என்ற ஐயப்பாடு தோன்றுகிறது..!

தமிழனை.. தமிழனே ஆள வேண்டும்..

பிற மாநிலங்களுக்கு எந்த நியாயமோ, அந்த நியாயம், தமிழ் மக்களுக்கும் வேண்டும். மண்ணின் மைந்தர்களே ஆள வேண்டும் என்று விரும்புவது தவறா..? தேசிய ஒருமைப்பாட்டின் சட்டதிட்டங்களுக்கும், ஜனநாயகத்திற்கும் நாங்கள் கட்டுப்பட்டுத்தான் நடக்க விரும்புகிறோம். ஆனால், எங்கள் கைகளுக்கு விலங்குமாட்டி எங்கள் கண்களுக்கு கருப்புத் துணிபோட்டு அடிமையாக்க விரும்புவது என்ன நாகரிகம்?

எங்கள் பரம்பரை வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு. 5000 ஆண்டுகளுக்கு முந்தைய வீர விளையாட்டு ஏறு தழுவுதல். சடுகுடு என்று நாங்கள் பெயரிட்ட ‘கபடி’ விளையாட்டை ஒலிம்பிக்கில் சேர்த்துக் கொள்கிறீர்களே. அதன் இன்னொரு பரிமாணமம் தான் ஏறு தழுவுதல்.

ஒருவன் காளையைப் போல் சீறி விளையாட, 7 பேர் சேர்ந்து அவனை அடக்கி பிடிக்கும் வீர விளையட்டு கபடி. இந்த வீர விளையாட்டின் இன்னொரு பரிமாணமம் தான் ஏறு தழுவுதல்.

நாகரீகமாக மிகவும் பொறுமையாக இருந்த எங்கள் மக்களின் கண்கள் திறக்கப்பட்டு, தற்போதுதான் தங்களில் கலாச்சார பண்பாட்டை, தொன்மையான எங்கள் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை மீட்டெடுக்க கண் திறந்திருக்கிறார்கள். அதன் விளைவு தமிழகமே பொங்கி எழுந்து நிற்கிறது. அதன் ஒரு நிகழ்வாக மதுரை அவனியாபுரத்தில் நடந்த சுய எழுச்சிக் கூட்டத்தில் எங்கள் திரைப்படம் சார்ந்த ஒரு தமிழ் தன்மானம் உள்ள இயக்குநர் கெளதமன் கலந்திருக்கிறான்.

நாங்கள் எங்கள் உணர்ச்சிகளைக் கொட்டுவது எங்கள் கடமை. காவல் துறையே, சட்டம், ஒழுங்கை காப்பாற்றுவது உங்கள் கடமை. போலீஸ் உங்கள் நண்பன் என்று சொல்கிறீர்களே. சட்ட மீறலுக்கு நீங்கள் கைது செய்து சட்டத்தின் முன்னாள் நிறுத்தினால் தவறில்லை. ஆனால் காவல் துறைக்கு அராஜகத்தை கற்றுக் கொடுத்தது யார்?. மத்திய அரசாகட்டும் மாநில அரசாகட்டும் அரசு என்பது சட்டங்களை தீட்டுவதற்கும் திட்டங்களை வகுப்பதற்கும், மக்களை காப்பதற்குமே உருவாக்கப்பட்டது தான். அரசும் அரசியலும். மக்களின் கலாச்சார விளையாட்டில் தலையிட உரிமை இல்லை.

மன்னராட்சி காலத்திலும் சரி, மக்களாட்சி காலத்திலும் சரி. மக்களின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பேணி பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. ‘ஜல்லிக்கட்டை’ மிருகவதை என்று சொல்லி ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தமிழர்களின் வாழ்வியலான கலாச்சாரத்தின் பண்பாட்டின் அடையாளச் சின்னம் மீது போர் தொடுத்தீர்கள்.

தமிழர்களின் வேதனைகளையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த மரபு சார்ந்த அறவழியில் எங்களின் போராட்டத்தை வெளிப்படுத்தினோம். மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறை. அறவழியில் போராடியவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு, போராட்டக்காரர்களை லத்தியால் வெறிகொண்டு தாக்கியும், பூட்ஸ் காலால் எட்டி மிதித்தும், ஒட்டுமொத்த தமிழர்கள் மீதும் மனிதவதையை செயல்படுத்தி இருக்கிறீர்கள்.

போராடுவது மக்களின் மரபு. போராட்டத்தில் மக்கள் உணர்ச்சி பெருக்கில் சில சிறு தவறுகள் செய்தால் கண்ணீர் புகை வீசி போராட்டத்தை கலைக்கலாம். மரபு வழியில் போராடிய இளைஞன் மீது காவல்துறை மிரட்டியும் லத்தியால் அடித்தும், எட்டி மிதித்தும் இழுத்துச் செல்வதை பார்க்கும்போது ஒட்டுமொத்த தமிழர்களின் மீதான தாக்குதலாக மனிதவதையாக நாங்கள் பார்க்கிறோம்.

கொலை, கொள்ளை, ஊழல் என்று சமூக விரோதமாக செயல்பட்டவர்களையே காவல்துறை அடிக்கக் கூடாது, துன்புறுத்தக் கூடாது என்று குற்றவாளிகளின் உயிர்க்கு இந்த தேசமும், இந்திய அரசியலமைப்பு சட்டமும் காவல் துறையும் பாதுகாப்பு கொடுக்கின்றது. இப்படி இருக்க கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் காக்க மரபு சார்ந்த அறவழியில் போராடுபவர்களை மிருக வெறிகொண்டு தாக்க எங்கிருந்து வந்தது இந்த உத்தரவு? காக்கி சட்டை அணிந்துவிட்டால் உங்களுக்குள் இருக்கும். தமிழர்களின் கலாச்சாரமும் பண்பாடும் அழிந்துவிட்டது என்று அர்த்தமா? அல்லது நீங்கள் தமிழர்கள் இல்லையா..?

சட்டம் எல்லோருக்கும் பொதுவானால், எங்களின் போராட்டம் மீது வன்முறை கட்டவிழ்த்து விட்டு சட்டத்தை மீறிய காவல்துறை மீது நீதிமன்றமும், அரசும் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? எடுக்க வேண்டும். நீங்கள் தொடுத்திருக்கும் இந்த ரத்தவெறி தாக்குதல், ஒட்டு மொத்த தமிழர்கள் மீதும் தொடுத்திருக்கிற தாக்குதல். மானமும், வீரமும், பண்பாடும், கலாச்சாரமும் தமிழர்களின் வாழ்வியலோடு கலந்த உயிர் மூச்சு.

இதைக் காப்பதற்காக யாருக்காகவும் எப்பொழுதும், தமிழர்கள் அடிபணிய மாட்டோம். இதையும் மீறி எங்களை அடக்கி அடிமைப்படுத்த நினைத்தால், தமிழர்களின் வீரத்தையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் நீங்கள் சோதித்துப் பார்க்கிறீர்களோ என்ற ஐயப்பாடு எங்களுக்குள் எழுகிறது.

போராட்டக்காரர்களோ, குற்றவாளிகளோ அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டியது காவல் துறையின் கடமையும் பொறுப்பும் ஆகும். நாங்கள் வன்முறையாளர்கள் கிடையாது. தமிழர்கள் மீது தாக்குதல் செய்த காவல்துறையை கண்டிக்கிறோம். இந்த உலகில் மனிதநேயம் போற்றி பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் ஒட்டுமொத்த தமிழர்கள் சார்பாக உங்களை வன்மையாக கண்டிக்கிறோம்.

இந்த தேசம் பல மாநிலங்களை மொழிகளை கலாச்சாரத்தைக் கொண்ட ஒரு நாடு. இந்த தேசத்தின் ஏதோ ஒரு மூலையில் தினமும் மனிதன் சாதியாலும், மதத்தாலும் துன்புறுத்தப்படுகிறான், கொலை செய்யப்படுகிறான். சக மனிதனை வதைக்கின்ற இந்த செயலுக்கு மொழி, இனம் தாண்டி எந்த ஒரு சக மனிதனும் இதுவரை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததில்லை. வேடிக்கையாளனாக மட்டுமே பங்கெடுத்திருக்கிறான் இந்தியன்.

இப்படிப்பட்ட இந்திய தேசத்தில் பீட்டா என்ற ஒரு அமைப்பு. அதன் நோக்கமும் செயல்பாடும் மிருகங்களை துன்புறுத்தக் கூடாது காட்சிப்படுத்த கூடாது என்று சொல்கின்ற இந்த பீட்டா அமைப்பு வெளிநாட்டவர்களால் உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பின் தலைவர்கள் இந்தியர். ஆனால் அவர்களின் கொள்கையும், செயல்பாடும் வெளிநாட்டவர்களின் பொருளாதார சுரண்டலுக்கு துணைப்போவது தான்.

இந்த தேசத்தில் ஒரு அறிவு முதல், ஐந்து அறிவு வரை உள்ள ஜீவன்களுக்கு அவற்றிற்காக யார் வேண்டுமானாலும் குரல் கொடுக்கலாம், தப்பில்லை. ஆனால் ஆதி மனிதனின் முதல் உணவு மீனிலிருந்து இந்த இருபதாம் நூற்றாண்டு வரை மிருகங்களை உணவாக கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக பண்பாட்டின் அடையாளமாக இந்த உலகத்திற்கு வெளிப்படுத்தியிருக்கிறான். அதன் வெளிப்பாடே காளைகளை பூட்டி விவசாயத்திற்கு பழக்கப்படுத்தினோம்.

காவல் துறையில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க நாய்களை பழக்கப்படுத்தினோம். இந்திய ராணுவத்தில் குதிரைகளை பழக்கப்படுத்தினோம். பாலைவனத்தில் மனிதனையும் பொருளையும் சுமந்து செல்ல ஒட்டகத்தை பழக்கப்படுத்தினோம். விலங்குகளையும், பறவைகளையும் கூண்டுக்குள் அடைத்து வைத்து மனிதனுக்கு காட்சிப் பொருளாக பழக்கப்படுத்தினோம்.

ஆறறிவு மனிதனின் வாழ்க்கைக்கும் சந்தோஷத்திற்கும் பல துன்பங்களையும் தாங்கிக் கொண்டன. ஐந்தறிவு ஜீவன்களை பயன்படுத்தியதை, இந்திய பண்பாடும் கலாச்சாரமும் புராணங்களும் இதிகாசங்களும் தவறு என்று சொல்லவில்லை. ஏனென்றால் உயிர்வாழும் ஜீவன்களில் ஆதிமனிதன் முதல் முதன்மையாக முன்னுரிமை கொடுத்தது மனித உயிரினத்திற்கு மட்டும் தான்.

அதன் வெளிப்பாடே அண்டை மாநிலமான கேரளத்தில் யானையை வைத்து அவர்களின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் வெளிப்படுத்துகிறார்கள். இதே போன்று மற்ற மாநிலத்திலும் அவரவர் தங்களுடைய கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்துகிறார்கள். தமிழர்களாகிய நாங்கள் எங்கள் விவசாயத்திற்கும், உழவுக்கும் துணை நின்று எங்களை வாழவைத்த காளைக்கு எங்களின் நன்றியையும் மண் சார்ந்த கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் வீரத்தையும் வெளிப்படுத்தும் தமிழர்களின் திருநாளான ஏறு தழுவுதலை நீங்கள் எப்படி மிருகவ்தை என்று சொல்லலாம்.

காளைகளை அடக்கும் வீர விளையாட்டில் மனிதர்கள் இறந்து போயிருக்கிறோம். இதுவரை எந்த ஒரு காளையும் இறந்து போனதாக தமிழர்களின் சரித்திரத்தில் இல்லை. இந்தியாவில் மற்ற மாநிலங்களில் அவர்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும்போது வேடிக்கைப் பார்த்துவிட்டு எங்களின் கலாச்சாரத்தின் மீது மட்டும் தடை விதித்து எங்களின் பண்பாட்டை சிதைப்பதற்கு துடிக்கும் உங்களின் உண்மையான நோக்கம் தான் என்ன? மிருகங்கள் வதைபடுகிறது துன்பப்படுகிறது என்றால் மாட்டைக் கொன்று அதன் இறைச்சியை அந்நிய தேசத்திற்கு இந்த தேசம் ஏற்றுமதி செய்வது, மிருகவதை கிடையாதா? அதற்கு நீங்கள் தடை கேட்டது உண்டா? கோழி, மீன், ஆடு என்று எத்தனையோ உயிர்கள் கொலை செய்யப்பட்டு அவை மனிதனுக்கு விருந்தாக்கப்படுவது உயிர்வதை இல்லையா? அதற்கு நீங்கள் தடை கேட்டது உண்டா.

இந்தியாவில் எத்தனையோ சம்பவங்களும், பண்பாட்டு கலாச்சாரமும் கடைப்பிடிக்கப்பட்டு வரும்போது எங்களின் தமிழர்களின் கலாச்சார பண்பாட்டில் மட்டும் தடை கேட்பது, அதற்காக உரத்து குரல் கொடுப்பது எங்களை மிரட்டுவதும் இந்தியாவில் எங்களை அடிமைப்படுத்தும் நிகழ்வாகவே ஒட்டுமொத்த தமிழர்களும் நினைக்கிறோம். கொந்தளிக்கிறோம். எங்களின் உண்மையான போராட்டத்தின் குணமும், செயல்பாடும் காலம் பதில் சொல்லும்.

எந்த ஒரு நாடும், இன்னொரு நாட்டுக்குள் நுழைந்து அதன் கலாச்சாரத்தில் தலையிட குரல் கொடுக்க உரிமையில்லை. ஒரு பன்னாட்டு அமைப்பை சேர்ந்த பீட்டா என்ற அமைப்பு இந்தியாவின் கலாச்சாரத்தின் மீது போர் தொடுக்கவும், அதை அழிக்கவும் இந்திய அரசும், நீதிமன்றமும், அரசியல் தலைவர்களும், காவல் துறையும் அதற்கு எப்படி துணை போகலாம்?

முதலில் அந்நிய தேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் பீட்டா போன்ற ஒரு அமைப்பு இனியும் வந்துவிடா வண்ணம், இந்தியா விழிப்போடு இருந்து இந்தியாவின் கலாச்சாரத்தை காக்க வேண்டிய தருணம் வந்துவிட்டதாக நினைக்கிறோம்.

உலகில் உள்ள இனங்களில், தமிழ் இனம் தான் பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும், சகிப்புதன்மைக்கும் முன்னோடிகள் அப்படிப்பட்ட தமிழ் மக்களை வேல்கொண்டு பாய்ச்சி எங்களை காயப்படுத்தாதீர்கள்.

மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். பீட்டா என்ற அமைப்பை இந்திய தேசத்தில் இருந்து அப்புறப்படுத்துங்கள்.

இவ்வாறு பாரதிராஜா கூறியுள்ளார்.