பலத்த எதிர்ப்பு எதிரொலி: “பீட்டா” நடிகை த்ரிஷா ட்விட்டரைவிட்டு ஓட்டம்!

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் கடுமையான எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் எதிர்கொண்டு வந்த “பீட்டா” விளம்பர நடிகை த்ரிஷா, தனது ட்விட்டர் பக்கத்தை முடக்கி வெளியேறினார்.

ஜல்லிக்கட்டு தடை விவகாரம் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களையும் விவாதங்களையும் தீவிரப்படுத்தியுள்ளது. சட்டரீதியில் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டுள்ளதற்கு முக்கிய காரணமாக இருப்பது, ‘பீட்டா’  என்ற அமெரிக்க தன்னார்வ அமைப்பு.

இந்த பீட்டா அமைப்பில் உறுப்பினராகவும், இந்த அமைப்பை தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியாவில் பிரபலப்படுத்தும் விளம்பர தூதராகவும் உள்ள “பீட்டா” நடிகை த்ரிஷாவிடம், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அவரது நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது.

மேலும், த்ரிஷா நடிக்கும் ‘கர்ஜனை’ என்ற படத்தின் படப்பிடிப்பு சிவகங்கை அருகே நடைபெற்றபோது, ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் அங்கு போராட்டம் நடத்தியதால், படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

த்ரிஷாவுக்கு எதிராக இரங்கல் போஸ்டர்களும் வடிவமைத்து வெளியிட்டன. இதனால், அவர் கடும் அதிருப்தி அடைந்தார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிடும்போது, “பீட்டா அமைப்பில் இருந்தாலும் நான் ஒருபோதும் ஜல்லிக்கட்டுக்கு எதிராகப் பேசியதில்லை. இதற்காக ஒரு பெண்ணையும் அவரது குடும்பத்தினரையும் மரியாதை குறைவாக நடத்துவதுதான் தமிழ்ப் பண்பாடா? இது போன்ற செயலில் ஈடுபடுபவர்கள் தங்களைத் தமிழர்கள் என்று அழைத்துக் கொள்ளவும் தமிழ்ப் பண்பாடு பற்றி பேசவும் வெட்கப்பட வேண்டும்” என்று கடுமையாக சாடினார் த்ரிஷா.

த்ரிஷாவுக்கு திரையுலகைச் சேர்ந்த நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் செல்வராகவன், பாடகிகள் சின்மயி, பாவனா உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்தனர்.

கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “த்ரிஷாவை காயபப்டுத்துவதை தயவுசெய்து நிறுத்துங்கள். அவருக்கும் நமக்குமுள்ள வேற்றுமை ஊரறியட்டும். கன்னியும் வாழ நம் காளையும் வாழ வழி செய்வோம். தர்க்கம் தொடர்க நேசத்துடன். கண்ணியத்துக்கு எப்போதும் என் ஆதரவு உண்டு. தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட வேண்டாம். அவதூறு செய்வதன் மூலம் நமது தரப்பை வலுவிழக்கச் செய்ய வேண்டாம். சாதாரண மனிதர்களை விட்டுவிட்டு, முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளவர்களுக்கு எதிராக போராடுங்கள். தம்பி கவுதமன் நடத்துவது போராட்டம். புரிந்தும் துணிந்தும் செய்த செயல் சட்டம் – ஒழுங்கு குலையாமலாவது சிறக்கட்டும். மற்றபடி கண்ணியம் காப்பது கடமை” என்று தெரிவித்தார்.

பெண்மையை “போற்றும்”(!) படங்களை மட்டுமே இயக்கியிருக்கும் செல்வராகவன், “மீனாட்சிக்கு கோயில் கட்டி பெண்மைக்கு அன்றே பெருமை சேர்த்த குலம் மாறி, இன்று வாய்க்கு வந்த வார்த்தைகளால் மனம் வலித்து கனக்கின்றது. போராட்டங்கள் பல்வேறு வகையில் நடத்தப்படலாம். அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்பட வேண்டும். வாய்மொழியாகவும் உடல்மொழியாகவும் மற்றவரை தவறாக பேச வேண்டாம்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் த்ரிஷாவுக்கு ஆதரவாக தெரிவித்தார்.

த்ரிஷா தனக்கு ஆதரவாக வந்த இந்த ட்வீட்களால் ஊக்கம் பெற்று அவற்றை ரி-ட்வீட் செய்து வந்தார். இந்த நிலையில், “நான் ஒரு தமிழச்சி. நான் பீட்டா அமைப்பை ஆதரிக்கிறேன். மிருகங்களை கொடுமைப்படுத்துவது பழங்கால முறை என்பது பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை. ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும்” என்று த்ரிஷாவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து ஒரு ட்வீட் வெளியானது.

 த்ரிஷாவின் ட்விட்டர் பகக்த்தில் வெளியான இந்த ஜல்லிக்கட்டு எதிர்ப்பு ட்வீட்டை தொடர்ந்து, பலரும் அவருடைய ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு வசைபாட ஆரம்பித்தினர்.

அதன்பின், “இதனை நான் ட்வீட் செய்யவில்லை. என் ட்விட்டர் கணக்கில் யாரோ ஊடுருவி விட்டார்கள்” என்று விளக்கம் அளித்தார் த்ரிஷா.

அதற்கு பிறகும் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், “எனது ட்விட்டர் கணக்கை விட்டு வெளியேறுகிறேன். விரைவில் எனது அடுத்த கட்ட திட்டம் குறித்து தெரிவிப்பேன்” என்று த்ரிஷா ட்வீட் செய்துவிட்டு, தனது ட்விட்டர் கணக்கை முடக்கிவிட்டு வெளியேறினார்.

“பீட்டா” விளம்பர நடிகை த்ரிஷாவின் கணக்கில் எவரேனும் ஊடுருவினார்களா, உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து உறுதியாக தெரியாத நிலையில், அது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியவண்ணம் உள்ளன.