ஐந்துமுனை போட்டி: கட்சிகள், அவை போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை, சின்னங்கள் இறுதி நிலவரம்!

தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு, வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 88,937 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இறுதி நிலவரப்படி 3585 ஆண்கள் 411 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 2 பேர் என மொத்தம் 3,998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், பன்னீர்செல்வம் – பழனிசாமி ஆகியோரின் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி, மு.க.ஸ்டாலினின் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. தலைமையிலான கூட்டணி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி என பிரதானமாக ஐந்துமுனை போட்டி நிலவுகிறது.

முனை 1:- இரட்டை இலை சின்னத்தில் அதிமுக 179 தொகுதிகளிலும், தமிழ் மாநில காங்கிரஸ் 6 தொகுதிகளிலும், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம், மூவேந்தர் முன்னேற்ற கழகம், பசும்பொன் தேசிய கழகம், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் ஆகியவை தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன, அதாவது இரட்டை இலை சின்னம் 191 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தவிர, இக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சி மாம்பழம் சின்னத்தில் 23 தொகுதிகளிலும், பாரதிய ஜனதா கட்சி தாமரை சின்னத்தில் 20 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

முனை 2: உதயசூரியன் சின்னத்தில் திமுக 173 தொகுதிகளிலும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் 6 தொகுதிகளிலும், கொங்கு மக்கள் தேசிய கட்சி 3 தொகுதிகளிலும், மனிதநேய மக்கள் கட்சி 2 தொகுதிகளிலும், ஆதிதமிழர் பேரவை, மக்கள் விடுதலை கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆகியவை தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன. அதாவது உதயசூரியன் சின்னம் 188 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி கை சின்னத்தில் 25 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் 6 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கதிர் அரிவாள் சின்னத்தில் 6 தொகுதிகளிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி பானை சின்னத்தில் 6 தொகுதிகளிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஏணி சின்னத்தில் 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

முனை 3: குக்கர் சின்னத்தில் அமமுக 161 தொகுதிகளிலும், எஸ்.டி.பி.ஐ. கட்சி 6 தொகுதிகளிலும், கோகுல மக்கள் கட்சி, மருதுசேனை சங்கம், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி, மக்களரசு கட்சி ஆகியவை தலா 1 தொகுதியிலும் போட்டியிடுகின்றன. அதாவது குக்கர் சின்னம் 171 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க. முரசு சின்னத்தில் 60 தொகுதிகளிலும்,  ஓவைசி கட்சி பட்டம் சின்னத்தில் 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

முனை 4: டார்ச்லைட் சின்னத்தில் மக்கள் நீதி மய்யம் 133 தொகுதிகளிலும், சமத்துவ மக்கள் கட்சி 35 தொகுதிகளிலும், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி 11 தொகுதிகளிலும், ஜனநாயக திராவிட முன்னேற்ற கழகம் 2 தொகுதிகளிலும், தலித் முன்னேற்ற கழகம் ,  புதிய விடுதலை கட்சி, குறிஞ்சி வீரர்கள் கட்சி, வஞ்சித் பகுஜன் அகாதி, பிரகதிஷில் சமாஜ்வாதி உள்ளிட்ட 6 கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன. அதாவது, டார்ச்லைட் சின்னம் 187 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இக்கூட்டணியில் உள்ள இந்திய ஜனநாயக கட்சி ஆட்டோ சின்னத்தில் 35 தொகுதிகள், கரும்பலகை சின்னத்தில் 4 தொகுதிகள், பிரஷ் சின்னத்தில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதா தளம் பெண்விவசாயி சின்னத்தில் 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

முனை 5: கரும்புவிவசாயி சின்னத்தில் சீமானின் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது.