திருவாரூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் பூண்டி கலைவாணன்: அதிகாரபூர்வ அறிவிப்பு

தி.மு.க. தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி காலமானதைத் தொடர்ந்து காலியாக இருக்கும் திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு வருகிற (ஜனவரி) 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இண்டிய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று (03-01-2019) தொடங்கியது.

இந்நிலையில், இத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக அக்கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலாளராக 2007ஆம் ஆண்டு முதல் பதவி வகித்துவரும் பூண்டி கலைவாணன் போட்டியிடுவார் என்று தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அதிகாரபூர்வமாக இன்று அறிவித்தார்.

0a1b

திருவாரூர் தொகுதியில் கருணாநிதி போட்டியிட்ட இரண்டு முறையும் அவரது தலைமைத் தேர்தல் ஏஜெண்டாக இருந்தவர் பூண்டி கலைவாணன். மேலும், கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக தொகுதிக்கு வர இயலாத நிலை ஏற்பட்டபோது, அவர் சார்பில் தொகுதிப் பணிகள் அனைத்தையும் பூண்டி கலைவாணன் திறம்பட செய்து தொகுதி மக்களின் நன்மதிப்பைப் பெற்றிருப்பவர்.

அந்த வகையில் இவர் தி.மு.க.வின் வலிமையான வேட்பாளர் என்பதோடு, இத்தொகுதியில் தி.மு.க.வின் தோழமைக் கட்சிகளான இடதுசாரிக் கட்சிகள் மற்றும் திராவிடர் கழகம் ஆகியவற்றுக்கு கணிசமான வாக்குகள் இருப்பதால் பூண்டி கலைவாணனுக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் என்று அரசியல் நோக்கர்கள் கணிக்கிறார்கள்.

இத்தொகுதியில் ஆளும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது நாளை அறிவிக்கப்பட இருக்கிறது. டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க. சார்பில் அக்கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் எஸ்.காமராஜூம், சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில் அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் சாகுல் அமீதும் போட்டியிடுவார்கள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.

ஆக, தற்போதைய நிலவரப்படி இத்தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., அ.ம.மு.க., நா.த.க என நான்குமுனைப் போட்டி இருக்கும் என தெரிகிறது.