’உயிர் தமிழுக்கு’ நாயகியுடன் மோதிரம் பந்தயம் கட்டி தோற்ற இமான் அண்ணாச்சி!

’ஆன்டி இண்டியன்’ படத்தை தொடர்ந்து மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. இந்தப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ளார் ஆதம்பாவா.

அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் அமீர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் நடித்துள்ளார். இவர்களுடன் ஆனந்த்ராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ்கபூர், சுப்ரமணிய சிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இப்படம் மூலம் வெற்றிகரமாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் வித்யாசாகர். Pvr inox பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது. வரும் மே-10ஆம் தேதி உலகெங்கிலும் இப்படம் வெளியாக இருக்கிறது. இந்தநிலையில் இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்தநிகழ்வில் நாயகன் அமீர், நாயகி சாந்தினி, இயக்குநர் ஆதம்பாவா உள்ளிட்ட படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் பொன்வண்ணன், இயக்குநர்கள் கரு.பழனியப்பன், எஸ்.ஆர்.பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில்

நாயகி சாந்தினி ஸ்ரீதரன் பேசும்போது, “இந்த படத்தின் ஹீரோ அமீர், இயக்குனர் ஆதம்பாவா உள்ளிட்ட அனைவருடனும் படப்பிடிப்பு தளத்தில் செம ஜாலியாக இருந்தது. ஒரு குடும்பமாகத்தான் இந்த படக்குழுவை நான் உணர்ந்தேன். நிச்சயமாக இந்த படம் உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என கூறினார்.

நடிகர் இமான் அண்ணாச்சி பேசும்போது, “நகைச்சுவை கலந்த ஒரு காதல் கதையை இயக்குனர் ஆதம்பாவா இதில் கொடுத்துள்ளார். படத்தில் அமீருடன் கூடவே வரும் கதாபாத்திரத்தில் நீங்கள் நடிக்கிறீர்கள் என இயக்குனர் ஆதம்பாவா கூறினார். ஆனாலும் பருத்திவீரன் படத்தில் ஒரு காட்சி சரியாக வரவில்லை என்றால் பல டேக்குகள் எடுப்பார் என கேள்விபபட்டுள்ளேன். என்னுடன் அவர் சரியாக பழகுவாரா என்கிற ஒரு சந்தேகம் இருந்தது. ஆனால் ஒரே நாளில் என் எண்ணத்தை மாற்றிவிட்டார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பாடல்களில் புரட்சித்தலைவர் பற்றிய பாடல் இனி அவருக்கான தேசிய கீதம் ஆக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.

படம் முடிவதற்குள் கதாநாயகி சாந்தினி தமிழில் நன்றாக பேசிவிட்டால் ஒரு மோதிரம் தருவதாக கூறி இருந்தேன். இப்போது நன்றாக பேசியுள்ளார். படம் ரிலீஸ் ஆன பிறகு அந்த பாக்கியை செட்டில் பண்ணி விடுகிறேன்” என்றார்.

நடிகர் கஞ்சா கருப்பு பேசும்போது, “அமீர் அண்ணன் படங்களில் எனக்கு நல்ல வேடங்கள் கொடுத்து நடிக்க வைத்தார். வாழவந்தான் என எனக்கு ஒரு பட்டம் கொடுத்து நல்லா வாழ்ந்துக்கடா என்று கூறினார். அவருக்கு நான் புரட்சி வேந்தன் என்கிற ஒரு பட்டத்தை இந்த இடத்தில் கொடுக்கிறேன்” என்றார்.