”ரஜினிக்கு ஏற்பட்ட மாற்றம் போல அமீருக்கும் நிகழும்”: ‘உயிர் தமிழுக்கு’ விழாவில் கரு.பழனியப்பன்!

’ஆன்டி இண்டியன்’ படத்தை தொடர்ந்து மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. இந்தப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ளார் ஆதம்பாவா.

அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் அமீர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் நடித்துள்ளார். இவர்களுடன் ஆனந்த்ராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ்கபூர், சுப்ரமணிய சிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இப்படம் மூலம் வெற்றிகரமாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் வித்யாசாகர். Pvr inox பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது. வரும் மே-10ஆம் தேதி உலகெங்கிலும் இப்படம் வெளியாக இருக்கிறது. இந்தநிலையில் இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்தநிகழ்வில் நாயகன் அமீர், நாயகி சாந்தினி, இயக்குநர் ஆதம்பாவா உள்ளிட்ட படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் பொன்வண்ணன், இயக்குநர்கள் கரு.பழனியப்பன், எஸ்.ஆர்.பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இயக்குநர் கரு.பழனியப்பன் பேசும்போது, “இயக்குநர் ஆதம் பாவாவின் பேச்சு எப்படி சிரிக்க சிரிக்க இருந்ததோ அதேபோலத்தான் இந்த படமும் இருக்கும். நான் சினிமாவிற்குள் வந்த காலகட்டத்தில் தன்னுடைய இஸ்லாமிய பெயரை மறைக்காமல் அதே பெயரில் படம் இயக்கிய அமீரை பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது. இரவு நேரத்தில் யாரோ ஒருவர் குரல் தழும்ப பேசினாலே அடுத்த அரை மணி நேரத்தில் அவருக்கு ஏதோ பிரச்சனை, தான் அவருடன் சென்று நிற்க வேண்டும் என கிளம்பி வந்துவிடுவார் அமீர். அவரை பார்த்து தான் இப்போதும் நான் அதை பின்பற்றுகிறேன். இந்த மேடையில் எஸ்.பி ஜனநாதன் இருந்தால் நன்றாக இருந்திருக்கும். எங்கள் மூவருக்கு எப்போதுமே எந்த ஒரு எதிர்பார்ப்பும் இருந்ததில்லை.

தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் கதையில் தம்பிக்கு எந்த ஊரு படத்தில் ரஜினிகாந்த் நடித்தபோது இந்த படம் நமக்கு செட் ஆகுமா என்கிற சந்தேகம் அவருக்கு இருந்தது. ஒரு கட்டத்தில் அதை தயாரிப்பாளரிடமும் கேட்டு விட்டார். ஆனால் பஞ்ச அருணாசலம் இந்த படம் தோல்வியடைந்தால் எனக்குத்தான் நட்டம்.. உனக்கு என்ன பிரச்சனை..? ஆனால் இந்த படம் வெற்றி பெற்றால் இனி நீ கடைசியாக நடிக்கும் படம் வரை 15 நிமிடம் காமெடி பண்ணிவிட்டு தான் மற்ற வேலைகளை பார்க்க முடியும் என்று கூறினார். அது இப்போது வரை தொடர்கிறது. அப்படித்தான் சீரியஸான அமீரை, இயக்குநர் ஆதம்பாவா, என்னுடைய படத்தில் நீங்கள் காமெடியாக தான் நடிக்கிறீர்கள்.. இது வெகுஜனத்தால் ரசிக்கப்படும் என முழுதாக நம்பி அவரை முழுதாக மாற்றி இருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு ஆதம்பாவா முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கும் இயக்குநராக மாறிவிடுவார்” என்று கூறினார்.

இந்த நிகழ்வில் நடிகரும் இயக்குனருமான சரவண சக்தி பேசும்போது, “அமீர் அண்ணன் நடிக்க ஆரம்பிப்பதற்கு முன்பே நானும் இயக்குனர் ஆதம்பாவாவும் அவரிடம் கதை சொல்வதற்காக சென்றோம். ஆனால் அன்று அவரை சந்திக்கவே முடியவில்லை. இன்று அவரை வைத்து படம் இயக்கும் அளவிற்கு நண்பர் ஆதம்பாவா உயர்ந்திருக்கிறார். ஆளில்லாத சிக்னலில் கூட அத்துமீறி சென்று விடக்கூடாது என நினைக்கிற ஒரு மனிதர் தான் அமீர் அண்ணன்.. அவரது சுய ஒழுக்கத்தை பார்த்து நான் பல விஷயங்களை திருத்திக் கொண்டேன்” என்று கூறினார்.

இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் பேசும்போது, “அமீர் அண்ணன் எனது மானசீக குருநாதர். வாழ்க்கையில் ஏதாவது ஒரு இக்கட்டான பிரச்சனை என்றால் கூட துணையாக வந்து நில்லுங்கள் என அழைக்கும் முதல் நபர் என்றால் அது அமீர் அண்ணன் தான். அப்படி வெளியே தெரியாத பல தருணங்களில் அவரிடம் சென்று நின்று இருக்கிறேன்.. எந்தவித நிபந்தனையும் இன்றி அன்புக்காக மட்டுமே அவரும் வருவார். என்னுடைய பல பட விழாக்களில் கடைசி நேரத்தில் அழைத்தால் கூட தனது வேலையை ஒத்தி வைத்துவிட்டு தவறாமல் வந்து விடுவார். அதனால் இந்த படத்தின் விழாவிற்கு என்னை அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் வரவேண்டும் என நான் முடிவு செய்து வைத்திருந்தேன். ஆனால் என்னை மறக்காமல் அவர் அழைத்து விட்டார். உடனே வருகிறேன் எனக் கூறிவிட்டேன். இதுபோன்ற ஒரு சூழலில் அவர் அருகில் என்னை போன்றவர்கள் இருக்க வேண்டியதை ஒரு கடமையாக நினைக்கிறேன். அவருடன் இருந்த சில பேர் அவரை விட்டு இப்போது சென்று விட்டார்கள் என வெளியில் சில பேர் கூறி வருகிறார்கள். ஆனால் யாரும் அவரை விட்டு எங்கேயும் போகவில்லை. அவருடனேயேதான் இருக்கிறோம்.

இந்த படத்தின் டிரைலர், பாடல்களை பார்க்கும்போது அமீர் சாருக்கு இது இரண்டாவது ரவுண்டு ஆரம்பிப்பது போன்று எனக்கு தோன்றுகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து பி அண்ட் சி சென்டர்களுக்கான கதைகள் அமீர் அண்ணனை நோக்கி நிறைய வரும். அதை தவிர்க்காமல் அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் பல ஹீரோக்கள் தற்போது பான் இந்தியாவை நோக்கி நகர்ந்து விட்டார்கள். மண் சார்ந்த கதைகளுக்காக மக்கள் காத்திருக்கிறார்கள். அமீர் அண்ணன் அப்படிப்பட்ட படங்களில் நடிக்க வேண்டும்” என்று பேசினார்.

நடிகர் பொன்வண்ணன் பேசும்போது, “சினிமாவுக்கு வருவதற்கு முன் நல்லவர்களாக இருந்து இங்கே வந்து பாதை மாறியவர்கள் பலர் உண்டு. ஆனால் சினிமா துறைக்கு வருவதற்கு முன்பு எல்லாத் தவறுகளையும் பண்ணியவர்தான் அமீர். ஆனால் சினிமா துறைக்குள் நுழைந்தபோது மிகச் சிறந்த ஆன்மீகவாதியாகவும் தனிமனித ஒழுக்கம் கொண்டவராகவும் அப்படியே மாறிவிட்டார். மதுரையில் ஒரு வாழ்க்கை, மதுரைக்குப் பிறகு ஒரு வாழ்க்கை என ஒரு பாட்ஷா போல அமீர் எப்போதும் ஒரு நேர்மையுடன் தான் பயணிக்க விரும்பி இருக்கிறார். பணத்திற்காக மற்றும் வேறு எதற்காகவும் அவர் தனது தனிமனித ஒழுக்கத்தை விட்டுக் கொடுத்தது இல்லை. அதனால் தான் காலம் இன்று அவருக்கு ஒரு செக் வைக்கும்போது அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அவர் மீது கூறப்படும் எந்த ஒரு தவறுக்கும் அவர் நிச்சயம் உடந்தையாக இருந்திருக்க மாட்டார். இப்படி ஒரு எதிர்பாராத தாக்குதல் வரும்போது நம்மில் பலர் நிலை குலைந்து போய் விடுவோம். ஆனால் அவர் மிக நிதானமாக தன் மீது உள்ள மிகப்பெரிய நம்பிக்கையோடு அதை கடந்து சென்ற விதம் பிரமிக்க வைக்கிறது. ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட இந்தக் கதையில் எனது கதாபாத்திரமும் இருந்தது. நானும் சில நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தேன். ஆனால் கிராமத்திலிருந்து நகரத்திற்கு என கதை மிகப்பெரிய அளவில் மாற்றம் அடைந்தபோது எங்களது கதாபாத்திரங்கள் அதிலிருந்து விடுபட்டு விட்டன. ஆனால் ஆதம்பாவா ஒரு தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் மிகப்பெரிய போராட்டத்திற்கு இடையில் இந்த படத்தை முழுமையான படமாக உருவாக்கியுள்ளார்” என்று கூறினார். கவிஞர் சினேகன் பேசும்போது, “இந்த படம் முடிந்த பிறகு தான் இந்த படத்திற்குள்ளே நான் வந்தேன். இந்த படத்திற்கு புரமோஷன் பாடல் ஒன்றை தயார் செய்ய வேண்டும் என ஆதம்பாவா இந்த படத்தின் காட்சிகள் பலவற்றை போட்டுக் காட்டினார். அவற்றைப் பார்த்தபோது மீண்டும் ஒரு அமைதிப்படை படம் மாதிரி இது அமைந்திருக்கிறது என தோன்றியது. அமைதிப்படைக்குப் பிறகு ஒரு அரசியல் நக்கல் கலந்த படம் வரவில்லையே என்கிற குறையை இந்த உயிர் தமிழுக்கு போக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதிகப்படியான படைப்புகளை கொடுக்காவிட்டாலும் ஆளுமையான படைப்புகளை கொடுத்து அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார் அமீர். சத்யராஜ் சொன்னது போல சொல்ல வேண்டும் என்றால் ‘பாண்டியர் பரம்பரையில் ஒரு எம்எல்ஏ’ என்பது போல நடித்துள்ளார் அமீர். நிரபராதியாக இருந்து விட்டால் எங்கேயுமே அச்சப்பட தேவையில்லை. ஓடி ஒளிய வேண்டிய தேவை இல்லை. ஒரு மனிதன் அமைதியாக இருப்பதனாலேயே என்ன வேண்டுமானாலும் இந்த உலகம் பேசுமா என்கிற பெரிய வருத்தம் இருக்கிறது. அமீரும் ஆதம்பாவாவும் இந்த படத்தில் துணிந்து இருக்கிறார்கள். நிச்சயம் வெல்வார்கள்” என்று கூறினார்.