“குற்ற பின்னணி கொண்டவரின் பணத்தை நம்பி வாழ வேண்டிய நிர்பந்தம் எனக்கு இல்லை”: இயக்குநர் – நடிகர் அமீர் ஆவேசம்!

’ஆன்டி இண்டியன்’ படத்தை தொடர்ந்து மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. இந்தப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ளார் ஆதம்பாவா.

அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் அமீர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் நடித்துள்ளார். இவர்களுடன் ஆனந்த்ராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ்கபூர், சுப்ரமணிய சிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இப்படம் மூலம் வெற்றிகரமாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் வித்யாசாகர். Pvr inox பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது. வரும் மே-10ஆம் தேதி உலகெங்கிலும் இப்படம் வெளியாக இருக்கிறது. இந்தநிலையில் இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நாயகன் அமீர், நாயகி சாந்தினி, இயக்குநர் ஆதம்பாவா உள்ளிட்ட படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் பொன்வண்ணன், இயக்குநர்கள் கரு.பழனியப்பன், எஸ்.ஆர்.பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில்

இயக்குனர் அமீர் பேசும்போது, “என்னுடைய திரை பயணம் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து, அரசியல் பயணம் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து நான் சந்தித்திராத ஒரு புதிய மேடை இது. இந்த சூழலில் நான் யார் என யோசித்தால், ராமாயணத்தில் வரும் சீதையும் நானும் கிட்டத்தட்ட உடன் பிறந்தவர்கள் போல தான். அவர் அக்னியில் மிதந்து தன்னுடைய கற்பை நிரூபித்தார். அவராவது ஒரு முறை நிரூபித்தார்.. நான் வாரா வாரம் நிரூபித்துக் கொண்டே இருக்கிறேன். மாய வலை பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்த போது தான் பருத்திவீரன் பிரச்சனை துவங்கியது. அதன் பிறகு இப்போது வேறு ஒரு பிரச்சனையுடன் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. என்னை சுற்றி என்ன நடக்கிறது ? ஒன்றுமே புரியவில்லை.

கோகுலம் ஸ்டுடியோவில் இறைவன் மிக பெரியவன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இன்னும் எட்டு நாட்கள் படப்பிடிப்பிற்காக செட் ஒன்றை போட்டு ஒரு நாள் படப்பிடிப்பு நடத்தினோம். மறுநாள் மாலையில் இருந்து இந்த பிரச்சனை துவங்கியது. தன்னிலை விளக்கமாக ஒரு அறிக்கை ஒன்று கொடுக்கலாமா என கரு. பழனியப்பனிடம் கேட்டேன்… அப்படி ஒரு அறிக்கை கொடுத்த பிறகு எங்கிருந்து அதற்கு எதிர்ப்பு வருகிறது என பார்த்தால் கடந்த 15 வருடங்களில் என்னை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாத ஆட்கள் எல்லாம் வெளியே வர ஆரம்பிக்கிறார்கள்.

பத்திரிக்கையாளர்கள் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. என்னிடம் நேரில் தொடர்பு கொண்டு பேசும் அளவிற்கு அவர்களுடன் நட்பு இருக்கிறது. ஆனால் இன்று ஊடகங்கள் பெருகிவிட்ட நிலையில், சிலர் வயிற்றுப் பசிக்காக ஏதேதோ செய்ய வேண்டி இருக்கிறது.

 இறைவன் மிக பெரியவன் தயாரிப்பாளருடன் எனக்கு தொடர்பு இருக்கிறதா என்றால், ஆமாம் இருக்கிறது என்று சொல்வேன். ஆனால் அவர் மீது சாற்றப்பட்ட குற்றத்துடன் எனக்கு தொடர்பு இருக்கிறதா என்று கேட்டால் இல்லைடா வெண்ணைகளா என்று சொல்வேன். அந்த தைரியமும் திமிரும் எப்போதும் என்னிடம் இருந்துகொண்டே இருக்கிறது. சந்தேக நிழல் என் மீது விழுவதில் தவறு இல்லை.. ஆனால் நீங்களாகவே தீர்ப்பு எழுதுகிறீர்களே, அது தான் ரொம்ப ஆபத்தானது. உங்களுக்கு யார் அந்த அதிகாரம் கொடுத்தது ?

2007ல் பருத்திவீரன் முடித்த சமயத்தில் கமல், ரஜினி சார் ஆகியோர் என்னுடன் படம் பண்ண வேண்டும் என்றார்கள். ஆனால் ஹீரோக்களுடன் பயணிக்காமல் நான் எனக்காக ஒரு பாதையை தேர்ந்தெடுத்து எனக்கான வாழ்க்கையை வாழ வேண்டும் என வாழ்ந்து கொண்டிருக்கிறேன். பணம் சம்பாதிப்பதா என் நோக்கம் ? ஜாபர் ஒருத்தன் தான் தமிழ்நாட்டிலேயே பணக்காரனா? ஜாபர் வந்த பிறகு தான் இவரது வாழ்க்கையை மாறிவிட்டது என்கிறார்கள். 2014ல் தான் அவர் வந்தார். ஆனால் விருமாண்டி ரிலீஸ் ஆன சமயத்திலேயே கொடைக்கானலில் ராம் படப்பிடிப்பு நடந்தபோது மதுரைக்கு இரண்டு லட்சம் செலவு செய்து படம் பார்க்க வந்தவன் நான்.. என்னைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கு ? உதவி இயக்குனர்களாக நானும் பாலாவும் சினிமாவுக்கு வந்தபோது கஷ்டப்பட்டவர்கள் என்பதால் ஏதோ சென்னைக்கு பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் போல நினைத்துக் கொள்கிறார்கள். சினிமாவிற்கு வந்ததால் வீட்டில் காசு வாங்காமல் சுயமரியாதையுடன் வந்தவர்கள் நாங்கள்..

ஒரு குற்றவாளி, அவருடன் உங்களுக்கு என்ன தொடர்பு இருக்கிறது என்று கேட்டால் பதில் சொல்ல போகிறோம். ஆனால் உங்களுக்கு இந்த வருமானம் எப்படி வந்தது என கேட்பதற்கு இவர்கள் என்ன வருமான  வரித்துறையினரா ? காண்ட்ராக்டர் ஆக இருக்கும் என்னுடைய அண்ணன் ஒரு சொத்து வாங்கினாலே இந்த பணம் எப்படி வந்தது என நான் அவரிடம் கேட்க முடியாது. நான் இறை நம்பிக்கை கொண்டவன். கரு பழனியப்பன் ஒரு பெரியாரிஸ்ட்.. ஜனநாதன் ஒரு கம்யூனிஸ்ட்.. மூன்று பேரும் ஒன்றாக சுற்றிய காலகட்டத்தில் கூட நீ எப்படி பணம் சம்பாதிக்கிறாய் என ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டதில்லை. பணம் சம்பாதிக்கவா இந்த திரையுலகத்திற்கு வந்தேன் ? அதற்காக நான் வரவில்லை.. என் வாழ்க்கையை என் விருப்பம் போல வாழ வேண்டும் என இந்த நிமிடம் வரைக்கும் நான் ஆசைப்படுகிறேன்.

கடந்த பத்து நாட்களாக ஒவ்வொரு விசாரணைக்கும் சென்று கொண்டு இருக்கிறேன். இடையில் ஷாப்பிங் சென்று எனக்கு பிடித்த ஆடைகளை நான் வாங்குகிறேன். வேறு எந்த பழக்கங்களும் எனக்கு இல்லை. இன்னொருவருடைய பணத்தை நம்பி, அதுவும் ஒரு குற்றப் பின்னணி கொண்டவரின் பணத்தை நம்பி வாழ வேண்டிய நிர்பந்தம் எனக்கு ஏற்படவில்லை. அப்படி ஒரு வாழ்க்கையை வாழ நான் விரும்பவும் மாட்டேன். இதை உங்களிடம் கூறி நான் நிரபராதி, என்னை நம்புங்கள் என்பதற்காகவும் இதை கூறவில்லை.

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று அவநம்பிக்கையுடன் நினைக்காமல், எனக்கு ஏன் இது நடந்தது என்று இறை நம்பிக்கையுடன் யோசிக்க கூடியவன் நான். இந்த இடத்தில் இருந்து இன்னும் என்னை சரி செய்து கொள்ள வேண்டிய பொறுப்பு இருக்கிறது. அதனால் அதை நோக்கித்தான் நான் பயணிக்கிறேன். என்னைப் பற்றி பல தகவல்கள் கிடைத்தது என யூடியூப் சேனலில் பலவாறாக பேசிய ஒரு நபருக்கு, அவரை தேனியில் கைது செய்ய வரப்போகிறார்கள் என்கிற தகவல் மட்டும் எப்படி தெரியாமல் போனது ? அந்த நபர் சொல்லும் பொய் செய்தியை தினசரி 2 லட்சம் பேர் பார்க்கிறார்கள். பல பேர் கமெண்ட்டுகளில் அமீரை எப்போது கைது செய்யப் போகிறீர்கள் என கேட்கிறார்கள். சிறை என்ன எனக்கு புதிதா ? நான் அப்போதும் தயாராக இருந்தேன். இப்போதும் தயாராக இருக்கிறேன்.. ஆனால் நான் வெறுக்கின்ற ஒரு குற்றத்தில் என்னை தொடர்பு படுத்துவதை தான் குற்ற உணர்ச்சியுடன் உணர்கிறேன். எனக்குள்ளும் வேதனை இருக்கிறது.

சமூகத்தை சீரழிப்பது போதை. அதை நான் வெறுக்கிறேன். என்னுடைய உதவியாளர்கள் சிகரெட் பிடித்தாலே என்னுடைய அலுவலகத்திற்குள் நுழைய விட மாட்டேன். கரு பழனியப்பனும் ஜனநாதனும் என் முன்பாக சிகரெட் பிடிக்காமல் கீழே சென்று பிடித்துவிட்டு வருவார்கள். அப்படி நான் வெறுக்கின்ற ஒரு விஷயத்தில் என்னை தொடர்புப்படுத்தும் போது, அது என்னை மட்டும் அல்ல அதனால் என்னுடைய குடும்பத்தையும் பாதிக்கிறது. என்னுடைய பிள்ளைகள் வேலைக்கு போகும் இடத்திலும் கல்லூரி செல்லும் இடத்திலும் பாதிக்கிறது. என்னை சந்தேகப்படாதீர்கள் என்று நான் சொல்லவில்லை. விசாரியுங்கள்.. நன்றாக கேள்வி கேளுங்கள். ஆனால் நீங்களாக தீர்ப்பு எழுதாதீர்கள்.. கடுமையான விசாரணைகளை சந்தித்து விட்டு தான் இங்கே வந்து நிற்கிறேன். இத்தனை ஆண்டு வாழ்க்கையில் நான் சந்தித்திராத ஒரு புது அனுபவம். விசாரணை செய்த அதிகாரிகளை பொறுத்த வரை அவர்கள் என்னை கண்ணியமாகத்தான்  நடத்தினார்கள். என் மனது வலிக்கின்ற மாதிரியான கேள்விகளை கேட்டார்கள் என்பது உண்மைதான். ஓரிடத்தில் கலங்கிப் போய் நின்றேன் என்பதும் உண்மை. ஆனால் அவர்களுக்கு என்னை காயப்படுத்த வேண்டும் என்கிற நோக்கம் கிடையாது. அது அவர்களுடைய வழக்கமான கடமை. பின் எப்படி குற்றவாளியை கண்டுபிடிப்பது ?

இந்த வழக்கு சம்பந்தப்பட்ட விவரங்கள் அதிகாரிகளை தவிர வேறு யாருக்கும் தெரியாது ? வேறு யார் சொன்னாலும் நம்பாதீர்கள். இந்த வழக்கு குறித்த விவரங்களை நான் சேகரித்து கொண்டிருந்த சமயத்தில் ரமலான் நோன்பிற்காக என் குடும்பத்தினர் ஊருக்கு சென்று விட்டார்கள். ஒரு நாள் காலையில் நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது விழித்து பார்த்தால் திடீரென அமலாக்கத் துறையினர் என் முன்னாடி துப்பாக்கியை நீட்டிக் கொண்டு நின்றார்கள். அதன் பிறகு என்னுடைய அலுவலகத்திற்கு வந்தார்கள். அதை முடித்துவிட்டு தான் ரமலான் நோன்புக்காக மதுரைக்கு சென்று வந்தேன்.

எனக்கு முதலில் வந்த சம்மனை கூட எனது வழக்கறிஞர் மூலமாக நான் சொன்ன பிறகுதான் வெளியே தெரிந்தது.. ஆனால் தங்களுக்கு ஏதோ டெல்லி வட்டாரத்தில் இருந்த சோர்ஸ் மூலமாக தகவல் வந்தது என்பது போல பலர் பேசினார்கள்.. இப்போது சொல்கிறேன், எனக்கு இன்னொரு சம்மன் கூட வந்திருக்கிறது. புலனாய்வு புலிகள் என்று சொல்லிக் கொள்கிற பலருக்கு இது இன்னும் தெரியாது. இந்த சம்மனுக்கும் நேரில் சென்று பத்தரை மணி நேரம் விசாரணையை முடித்துவிட்டு தான் இங்கே வந்திருக்கிறேன். அதிகாரிகள் அவர்களது கடமையை செய்கிறார்கள்.. நான் அதற்கு முதல் நாளில் இருந்தே ஒத்துழைக்கிறேன்.. இந்த வழக்கை முடித்து விட்டு தான் எங்கேயும் வெளியே செல்வேன்.. நான் கூறும் கருத்துக்களை உங்களால் எதிர்கொள்ள முடியவில்லை.. அதனால் என்னை குற்றவாளி ஆக்குகிறீர்கள்.. அதனாலேயே ஏன் நான் குற்றவாளி ஆகிவிட முடியுமா ?

 இந்த காலகட்டம் உண்மையிலேயே கடுமையான காலகட்டம் தான். என்னை சுற்றி இருந்த பல நண்பர்கள், உறவினர்கள் ரொம்ப தூரமாக சென்று விட்டனர். என்னிடம் இருந்த 2000 தொலைபேசி எண்களில் 1950 பேரிடம் இருந்து அழைப்பு வருவதே இல்லை. ஒரு மரத்தின் அருகில் வெடி சத்தம் கேட்டதும் பறவைகள் அனைத்தும் சிதறி ஓடும். அதன்பிறகு வெகு சில பறவைகள் மட்டுமே மீண்டும் திரும்பி வரும். அதுபோலத்தான் என் வாழ்க்கையிலும் சில நண்பர்கள் மட்டுமே தேடி வந்தார்கள். ஆனால் இன்னும் பலர் சந்தேகப்பட்டுக் கொண்டு தூரமாகவே நிற்கிறார்கள். அவர்களை எல்லாம் தயவுசெய்து இங்கே வந்துவிடாதீர்கள், அங்கேயே நின்றுவிடுங்கள் என கேட்டுக்கொள்கிறேன். என் வாழ்க்கையை தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அதனால் இந்த வழக்கு, பிரச்சனைகள் எல்லாம் இதுவும் கடந்து போகும் என்று தான் நினைக்கிறேன்,

இந்த படம் பற்றி சொன்னால் பெரிய கலை நயத்துடன் காவியமாக இருக்கும் என்று எதிர்பார்த்து எல்லாம் வர வேண்டாம். ஆனால் உங்களை ஜாலியாக சிரிக்க வைக்கும் என்பது மட்டும் உறுதி. ஒரு சிக்கலான காலகட்டத்தில் இந்த திரைப்படத்தை திரையரங்குகளுக்கு கொண்டு வருவதற்கு முயற்சி எடுத்த தயாரிப்பாளர், இயக்குனர் ஆதம்பாவாவுக்கு நன்றி” என்று கூறினார்

அடுத்து பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அமீரிடம், “பத்து வருடங்களாக உங்கள் நண்பராக ஒருவர் இருந்திருக்கிறார்.. ஆனால் அவரிடம் எப்படி இவ்வளவு பணம் வந்திருக்கிறது என்று உங்களுக்கு சந்தேகம் வரவே இல்லையா” என்று கேட்கப்பட்டது.

“இந்த கேள்வியை நீங்கள் லைக்கா நிறுவனம் சுபாஷ்கரனிடம் எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா? ஒரு கார்ப்பரேட் நிறுவனம் வந்தால் அவர்களிடம் கேள்வி கேட்க மாட்டீர்கள். ஒரு தனி நபர் எனும்போது கேள்வி கேட்பீர்கள் என்றால் என்ன நியாயம் ? அவர் மீதும் லண்டனில் ஒரு குற்றப்பதிவு இருக்கிறது. ஆனால் அது பற்றி ரஜினி, விஜய் யாராவது  கேட்டார்களா ? என்னிடம் மட்டும் ஏன் கேட்கிறீர்கள் ? சமரசம் இல்லாத என்னுடைய வாழ்க்கை தான் இவ்வளவு பெரிய சிக்கலை ஏற்படுத்துகிறது என நான் நம்புகிறேன். ஆனாலும் அதை நான் விரும்பி ஏற்றுக் கொள்கிறேன். நான் பிறருக்கு தொல்லை தருகிறேனா என்று பாருங்கள். இத்தனை ஆண்டுகளில் அப்படி ஏதாவது செய்தி வந்திருக்கிறதா?” என்றார்.

அடுத்து தயாரிப்பாளர், இயக்குநர் ஆதம்பாவா இந்நிகழ்வில் பேசும்போது, “என்னை உயிர் தமிழுக்கு படம் மூலம் இயக்குநராக்கி அழகு பார்த்த எனது குரு, மக்கள் போராளி அமீர் சாருக்கு நன்றி. அவருடைய மௌனம் பேசியதே பட இசை வெளியீட்டு விழா தான் எனது சினிமா வாழ்க்கையின் முதல் என்ட்ரி. எனக்கு விவரம் தெரிந்து அவரை நாற்பது வருடங்களாக எனக்கு தெரியும். நான் சினிமாவில் உதவி இயக்குநராக நுழைய முடிவெடுத்தபோது எங்களது உறவினர் மூலமாக இயக்குநர் பாலாவிடம் சேர்த்துவிட சொன்னேன். பாலாவும் என்னை சென்னைக்கு வரச் சொல்லிவிட்டார். காரை எடுத்துக் கொண்டு சென்னைக்கு வந்த உதவி இயக்குநர் நானாகத்தான் இருக்கும். அண்ணா நகரில் உள்ள பாலாவின் அலுவலகத்திற்கு சென்றிருந்தேன்.. அவர் மாடியில் இருந்தாலும் பல மணி நேரம் கீழே காத்திருந்தேன். அப்போது நான் கடவுள் பட வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அதில் முதலில் பேசப்பட்ட அந்த மிகப்பெரிய ஹீரோ அந்த சமயத்தில் அங்கே வந்தார். ஆனால் அங்கே சாப்பிட சொல்லாமல் கூட பல மணி நேர காத்திருப்பு ஏற்பட்டதால் அங்கிருந்து கிளம்பிவிட்டேன். ஆனால் பாலா எனக்கு வைத்த பரீட்சை அது என்று உறவினர் கூறினாலும் பாலாவிடம் வேலை பார்க்கும் எண்ணத்தை மாற்றிக் கொண்டு அமீரிடம் சேர்த்து விடுமாறு உறவினரிடம் கூறினேன்.

அந்த சமயத்தில் பருத்திவீரன் படத்திற்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தன. நான் அமீரை பார்க்க சென்றதும் அவர் எனக்காக காத்திருப்பார், நான் வந்ததுமே பருத்திவீரன் ஸ்கிரிப்ட்டை கொடுத்து படித்துவிட்டு வா என்று கூறி மதியம் என்னுடன் டிஸ்கஷன் செய்வார் என்கிற நினைப்பில் சென்றேன். ஆனால் அமீரும் என்னை வரச் சொல்லிவிட்டு பல மணி நேரம் காக்க வைத்தார். அதன் பிறகு வெளியே வந்தவர் என்னை பார்த்து விட்டு ஒன்றும் சொல்லாமல் சென்று விட்டார். இந்த இரண்டு இடங்களிலும் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் நானே தனியாக ஒரு அலுவலகத்தை துவங்கினேன்.

அதன் பிறகு இயக்குனர் சரவண சக்தியுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. சினிமாவில் என்னவெல்லாம் பண்ணக்கூடாது என்பதை இங்கிருந்து கற்றுக் கொண்டேன். ஆனாலும் இந்த படம் இவ்வளவு நேர்த்தியாக வந்ததற்கு கூடவே இருந்து வழி நடத்திய அமீர் சார் தான் காரணம். இன்று கூட இந்த படத்தை பார்த்த கதாநாயகி சாந்தினி இப்படி ஒரு படத்திலா நான் நடித்தேன் என ஆச்சரியப்பட்டார். அந்த அளவிற்கு இந்த படத்தை எடுத்து முடித்து ரிலீசுக்கு கொண்டு வந்து விட்டோம்.

ஆனால் இந்த சமயத்தில் மதுரையில் பாஷாவாக சென்னையில் மாணிக்கமாக இருந்த அமீரை இப்போது தாவூத் இப்ராஹீமாக மாற்றி விட்டார்கள். அதனால் இந்த படத்தின் வியாபாரமே பாதிக்கப்பட்டது. அமீரால் உருவாக்கப்பட்ட ஒரு தயாரிப்பாளரே இந்த படத்தின் ரிலீஸை எவ்வளவு தடுக்க முடியுமோ அந்த அளவிற்கு வேலை பார்த்தார். ஆனால் என்னிடம் நன்றாக தான் பேசுவார். அவர் இந்த படத்தை பற்றி பேசிய ஆதாரம் என்னிடம் இருக்கிறது. ஆனால் காலம் தான் அவருக்கு பதில் சொல்லும்.

தமிழ் சமூகத்திற்காக சிறைக்கு சென்றவர் அண்ணன் அமீர். அவருடன் கூடவே சிறைக்கு சென்ற சீமான் இன்று ஒரு கட்சித் தலைவராக இருக்கிறார். ஆனால் சினிமா மீது இருக்கும் காதலால் இங்கேயே இருந்து கொண்டு பத்து வருடம் அந்த வழக்குக்காகவே அலைந்தார். அவரை விடுதலை செய்த நீதிபதியே, இதற்காக நீங்கள் பயந்து விட வேண்டாம், தொடர்ந்து மக்களுக்காக குரல் கொடுங்கள் என்று நற்சான்றிதழ் கொடுத்தார். தமிழக மக்களின் இதயங்களில் இருக்கிறார் அமீர். மக்கள் போராளி அமீர் என்கிற ஒரு புத்தகமே எழுதிக் கொண்டிருக்கிறேன். விரைவில் அது வெளியாக இருக்கிறது.

மக்களுக்கான எல்லா போராட்டங்களிலும் எப்போதும் முன்னால் நின்றிருக்கும் இவருக்கு இந்த மக்கள் போராளி பட்டத்தை கொடுக்கவில்லை என்றால் வேறு யாருக்கு கொடுப்பது ? அரசியல் நையாண்டி பின்னணியில் இழையோடினாலும் முழுக்க காதல் படம் தான் இது. சிவகார்த்திகேயனுக்கு டப் கொடுத்திருக்கிறார் அமீர் அண்ணன். அவர் அடுத்தடுத்து எந்த மாதிரி கதைகளை படமாக்க போகிறார் என்பது எனக்கு தெரியும். அவரை வேலை செய்ய விடுங்கள்.. மக்களுக்கு பயனுள்ள திரைப்படங்கள் வரும்..

கதாநாயகி சாந்தினி தயாரிப்பாளருக்கு எந்த வித கஷ்டமும் கொடுக்காத ஒரு நடிகை.. மன்னன் விஜயசாந்தி, சவாலே சமாளி ஜெயலலிதா போல இதில் அமீருக்கு இணையாக காதலியின் கதாபாத்திரமும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமா அவரை பயன்படுத்திக் கொள்ளும் என நினைக்கிறேன். இந்த படத்தில் படம் முழுவதும் வரும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இமான் அண்ணாச்சிக்கு இதில் ஃபுல் மீல்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. இனி பல படங்களில் இது போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க அவருக்கு அழைப்பு வரும். கஞ்சா கருப்புவும் பல காட்சிகளில் காமெடியில் பட்டையை கிளப்பி இருக்கிறார். பல பிரச்சினைகள் காரணமாக இந்த படத்தின் வியாபாரம் பாதிக்கப்பட்டு தற்போது மீண்டும் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இந்த படத்தை நீங்கள் தான் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

தயாரிப்பாளர், இயக்குநர் ஆதம்பாவா பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசும்போது, “காலில் விழாத அரசியல்வாதிகள் யாராவது இருக்கிறார்களா? சுயமரியாதை கட்சியாக இருக்கட்டும்.. பகுத்தறிவு பேசுகின்ற கட்சியாக இருக்கட்டும்.. அங்கேயே தலைவர்களின் கால்களில் விழுவதை நீங்கள் எல்லாம் பார்த்திருக்கிறீர்கள்.. அந்த நேரத்தில் அந்த காட்சி எடுக்கும்போது அப்படி ஒரு வசனம் மனதில் தோன்றியது. அதை படமாக்கி இருக்கிறோம். அதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. அதில் சம்பந்தப்பட்டதாக நீங்கள் யாரை நினைக்கிறீர்களோ அவர்களே பார்த்தால் கூட சிரித்துக் கொண்டே சென்று விடுவார்கள். இந்த படத்தை வெளியிட விடாமல் தடுப்பவர்கள் யார் என நான் பெயர் குறிப்பிட விரும்பவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் ஏதாவது பேசட்டும்.. அதற்கு நான் அப்போது பதில் சொல்கிறேன்” என்றார்.