பாவப்பட்ட ஜீவன்கள் துணை நடிகர் – நடிகைகள்!

ஷூட்டிங்கில் உதவி இயக்குனர்களுக்கு அடுத்தபடியாக பாவப்பட்ட ஜீவன்கள் துணை நடிகர் – நடிகைகள்தான்.

ஒரே ஒரு டயலாக் பேசுவதற்காக, காலையிலிருந்து தனக்கான காட்சி வரும்வரை காத்திருந்துவிட்டு, “ஆமாங்க, நான் பார்த்தேன்” என ஏதாவது ஒரு ஒற்றை வசனத்தை பேசிவிட்டுச் செல்லும் இவர்கள், ஒருநாள் பெரிய நடிகர் ஆகிவிடுவோம் என்ற நம்பிக்கையிலேயே வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்.

ஷூட்டிங்கில் உதவி இயக்குனர்களிடம் “எப்போ சீன்?”, “டயலாக் உண்டா?”, “குளோசப் உண்டா.?”, “இருவத்திமூணு வருச ஆர்டிஸ்ட் தம்பி.. இப்ப ஒரு படத்துல ஹீரோயினுக்கு அப்பாவா கமிட் ஆயிருக்கேன். நல்லா பேர் கிடைக்கும். பாப்பம்…. அதுக்கப்புறம் கடவுள் விட்ட வழி” என்பார்கள்.

தெரிந்த முகமாக இருந்தால் இவர்களுக்கு 1000ல் இருந்து 2500 வரை கிடைக்கும் அதிலும் ஏஜெண்ட் கமிஷனில் கட் ஆகிவிடும்.

கூட்டமாக நின்று கோஷம் போடுவதற்கும், பஞ்சாயத்து, ஆஸ்பத்திரி, கோர்ட், போலீஸ் ஸ்டேஷன் என கூட்டம் நிறைந்த காட்சிகளை படப்பிடிக்கும்போது குறுக்கும் மறுக்குமாக நடக்கவும், ஓடவும், பேசிக்கொண்டிருக்கவும் பயன்படுத்தப்படும் அட்மாஸ்பியர் எனப்படும் கிரௌட் ஆர்ட்டிஸ்ட்கள் இன்னும் பாவப்பட்டவர்கள். “400 ரூவான்னு சொல்லி இட்டுனு வந்து 250 ரூவாதான் கொடுப்பாரு ஏஜெண்ட்” என்று நரைத்த தலையை சொறிந்துகொண்டே தங்களுக்குள் பேசிக்கொள்வார்கள்.

அரக்கோணத்திலிருந்து முதல் ரயில் பிடித்தும், செங்கல்பட்டில் இருந்தும், இன்னும் தூரமான இடங்களில் இருந்தும் வரும் இவர்கள் வடபழநி பேருந்து நிலையத்தில் காலை 6 மணிக்கு அசெம்பிள் ஆகிவிடுவார்கள். அங்கு வரும் ஏஜெண்ட்கள் தங்கள் ஷூட்டிங்கிற்கு தேவைப்படும் ஆட்களை ஸ்பாட்டுக்கு வர சொல்லி விடுவார்கள். கூப்பிட ஆளின்றி, அன்றைய பிழைப்பு இழந்து, சோகமாக வீட்டிற்கு செல்லும் துணை நடிகர்களின் வேதனையான முகபாவனையை நீங்கள் பார்த்ததுண்டா?

எம்ஜிஆர் காலத்தில் துணை நடிகராக அறிமுகமாகி, இன்றும் இளம் நடிகர்களில் படங்களில் நூற்றில் ஒருவராக நிற்கும் மோகன் தாத்தாவை உங்களுக்கு தெரியுமா?

கொஞ்சம் கொஞ்சமாக கூட்டத்தில் நின்று, ஒருசில டயலாக் பேசி, தடுமாறி குளோசப்பில் வருவதற்கு போராடும் துணை நடிகர்கள் வாழ்வு துயரம் நிறைந்தது.

கஸ்தூரி பாட்டியும் அதுபோலத்தான் யாரோ ஒரு ஏஜெண்ட் சொல்லி ஒருநாளைய பிழைப்புக்காக கட்சி விளம்பரங்களில் நடித்திருக்கிறார். வெறும் 1500 பேசி அதிலும் பாதி கமிஷனில் கட் ஆகி பிழைப்புக்காக நடித்திருக்கிறார்.

இப்படிப்பட்ட எளிய மனிதர்களை கிண்டல் செய்வதில் அப்படி என்ன சந்தோஷம் கிடைத்துவிடப் போகிறது?

எல்லாவற்றையும் நக்கலாக பார்க்கும் மனோபாவம் ஏனோ இன்று இளைஞர்களிடம் தலைவிரித்து ஆடுகிறது. ஆனால் கஸ்தூரி பாட்டி போன்றவர்கள், கதை கேட்டு நடிக்கும் பெரிய நடிகைகள் அல்ல. அன்றைய பிழைப்புக்காக நடிக்கும் பாவப்பட்ட துணை நடிகைகள்.

வெகு எளிதாக மீம்ஸ் கிரியேட் செய்தும், கமெண்ட் செய்தும், ஸ்டேட்டஸ் போட்டும் தங்களது கிண்டல் உணர்வை, நையாண்டித்தனத்தை காட்டிக்கொள்ளும் நண்பர்கள், அவர்களின் கிண்டல்களால் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளானவர்கள் பற்றியும், கண்ணீருக்கு ஆளானவர்கள் பற்றியும் என்ன கவலைப்பட போகிறார்கள்?

– செந்தில் ஜெகன்னாதன்