தலைமை செயலகம் – விமர்சனம்

நடிப்பு: கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, பரத், ரம்யா நம்பீசன், ஆதித்யா மேனன், கனி குஸ்ருதி, நிரூப் நந்தகுமார், தர்ஷா குப்தா, சாரா பிளாக், சித்தார்த் விபின், ஒய்.ஜி.மகேந்திரா, சந்தான பாரதி, கவிதா பாரதி மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: ஜி.வசந்தபாலன்

ஒளிப்பதிவு: வொய்டு ஆங்கிள் ரவிசங்கர்

படத்தொகுப்பு: ரவிகுமார்.எம்

இசை: ஜிப்ரான், சைமன் கே.கிங்

தயாரிப்பு: ‘ராடான் மீடியா ஒர்க்ஸ் இண்டியா லிமிட்டெட்’ ராதிகா சரத்குமார், ஆர்.சரத்குமார்

ஓடிடி தளம்: ஜீ 5 ஒரிஜினல்

பத்திரிகை தொடர்பு: சதீஷ் (எய்ம்)

கடந்த 57 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் தமிழ்நாட்டு அரசியலை முதன்மையாக வைத்து, அதிலிருந்து இங்கொன்றும் அங்கொன்றுமாக சம்பவங்களை எடுத்துக் கோர்த்து, புனைவுகள் சேர்த்து, ’இந்த கதாபாத்திரம் நிஜத்தில் அவரா?’ என கேள்வி எழுந்தால், ‘இவர் அவர் இல்லை’ என்று தப்பித்துக்கொள்ளும் வகையில் கதாபாத்திரங்களை கலவையாகப் படைத்து, ’அரசியல் திரில்லர்’ ஜானரில் எட்டு எபிசோடுகளாக தயாரிக்கப்பட்டு, ‘ஜீ 5’ ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கும் மிக முக்கியமான இணையத் தொடர் (வெப் சீரிஸ்) ‘தலைமைச் செயலகம்’.

இந்த தொடரில், சமூகப் பொறுப்புள்ள பத்திரிகையாளராகவும், தமிழ்நாட்டு திராவிட முதலமைச்சரின் கட்சி ஆலோசகராகவும், பாசிடிவ் கேரக்டரில் வரும் பெண் கதாபாத்திரம் அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறது: “அம்பேத்கரிய, மார்க்சிய, பெரியாரிய சிந்தனைகள் தான் என் அரசியல்.” இதைக் கேட்டு நாம் ‘அட…’ என்கிறோம்; ஆச்சரியப்படுகிறோம். காரணம் – அம்பேத்கரிய, மார்க்சிய, பெரியாரிய சிந்தனைகளுக்கு முற்றிலும் எதிரான பாரதிய ஜனதா கட்சி சார்பில் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டுள்ள நடிகை ராதிகா சரத்குமாரும், அவரது கணவரும், நரேந்திர மோடியின் தேர்தல் பிரசார மேடையில் மூச்சைப் பிடித்துக்கொண்டு, “பாரத் மாதா கி ஜே” என்று தொண்டை கிழியக் கத்தியவருமான நடிகர் சரத்குமாரும் சேர்ந்து தங்களது ‘ராடான் மீடியா ஒர்க்ஸ்’ நிறுவனத்துக்காக தயாரித்திருக்கும் இந்த இணையத் தொடரில், அவர்களது கட்சிக் கொள்கைகளுக்கு எதிரான கருத்தியல் உள்ளது என்றால் ஆச்சரியமாக இருக்காதா?

எனில், அது தயாரிப்பு நிறுவனத்தின் கருத்தியல் அல்ல; இயக்குநர் வசந்தபாலன் நம்புகிற கருத்தியல் என புரிந்து மகிழ்கிறோம். மேலும், சரத்குமாரும், ராதிகா சரத்குமாரும் ‘அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி’ என்றொரு தனிக்கட்சி நடத்தி வந்த காலகட்டத்தில் இந்த இணைய தொடருக்கான ஸ்கிரிப்ட் ஓ.கே செய்யப்பட்டு, படமாக்கப்பட்டிருக்கும்; பாஜகவில் அதற்குப்பின் இணைந்ததால், இணைய தொடரின் கருத்தியலில் அவர்களால் கை வைக்க முடியாமல் போயிருக்கும் என்பதும் கூட புரிந்துகொள்ளக் கூடியது தான்.

இந்த தொடர் ஜார்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகம் உள்ள நிலக்கரி சுரங்கப் பிரதேசத்தில் ஆரம்பமாகிறது. இங்கு சுரங்க மாஃபியா கும்பல் ஒன்று ஒரு பெண்ணைக் கட்டி வைத்து அடித்து, ரத்தக் காயப்படுத்தி, சித்ரவதை செய்கிறது. இதை பொறுக்க முடியாத அப்பெண் ஒரு கட்டத்தில் கையில் சிக்கிய கத்தியை எடுத்து அந்த மாஃபியா கும்பலை மொத்தமாக வெட்டிச் சாய்த்து தப்பிச் செல்கிறார்.

காட்சி தமிழ்நாட்டுக்கு மாறுகிறது. இங்கு முதலமைச்சராக இருக்கும் அருணாச்சலம் (கிஷோர்) மீது, ஒன்றியத்தை ஆளும் டெல்லிவாலாக்களின் சூழ்ச்சி காரணமாக ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, வழக்கு 15 வருடங்களாக நடைபெற்று வருகிறது. ஐதராபாத் உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் இந்த வழக்கில், சாட்சியங்கள் அனைத்தும் முதலமைச்சர் அருணாச்சலத்துக்கு எதிராக இருக்கும் நிலையில் தீர்ப்பு தள்ளி வைக்கப்படுகிறது.

இதற்கிடையில், சமூகப் பொறுப்புள்ள பத்திரிகையாளராகவும், முதலமைச்சரிடம் நெருங்கிப் பழகும் நண்பராகவும், ஆளுங்கட்சியின் ஆலோசகராகவும் கொற்றவை (ஸ்ரேயா ரெட்டி) திகழ்கிறார். இவருக்கும், முதலமைச்சருக்கும் இடையிலான நட்பை தப்பாகப் புரிந்துகொண்டு கேவலமாக்க் கருதும் கொற்றவையின் மகள் மாயா, தன் அம்மாவை வெறுத்து தான்தோன்றித்தனமாகத் திரிகிறார்.

மற்றொரு பக்கம், ஊழல் வழக்கில் முதலமைச்சர் அருணாச்சலத்துக்கு எதிராக தீர்ப்பு வந்து, அவர் சிறை செல்ல நேர்ந்தால், அடுத்த முதலமைச்சர் யார் என்ற விவாதம் கிளம்ப ஆரம்பிக்கிறது. முதலமைச்சரின் மூத்த மகளும் அமைச்சருமான அமுதவல்லி (ரம்யா நம்பீசன்), முதலமைச்சரின் இளைய மகளின் கணவர் ஹரிஹரன் (நிரூப் நந்தகுமார்) ஆகிய இருவரும் முதல்வர் நாற்காலியைக் கைப்பற்ற ரகசியமாக வியூகம் வகுக்கிறார்கள். எதிர்க்கட்சியினரோ முதலமைச்சர் சிறையில் அடைக்கப்படும் நாளை எதிர்பார்த்து ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில், ஜார்கண்ட் மாநில மாஃபியா கும்பல் படுகொலை, நக்சலைட்டுகளை ஒழிக்க ஆலோசனை கூறுவதற்காக ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட குழுவில் இடம் பெற்ற முன்னாள் எம்.பி.க்கள் படுகொலை போன்றவற்றைச் செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்ட துர்கா என்ற பெண்ணைக் கைது செய்ய சி.பி.ஐ. அதிகாரி (ஆதித்யா மேனன்) தேடுதல் வேட்டையில் இறங்குகிறார். அதே நேரம் காவல்துறையின் கையாளாக இருந்த முக்கிய நபரைக் கொன்ற கொலையாளி துர்காவைக் கண்டுபிடித்து கைது செய்ய தமிழக காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் (பரத், தர்ஷா குப்தா) தீவிர முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.

இதற்கிடையில், ஊழல் வழக்கில் தீர்ப்பு வந்து, தான் சிறை செல்ல நேர்ந்தால், அடுத்த முதலமைச்சர் யார் என்ற விவரத்தை முதலமைச்சர் அருணாச்சலம், ரகசியமாக ஒரு கடித்த்தில் எழுதி, சீல் வைத்து, அதை கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரது முன்னிலையிலும் கட்சியின் பொதுச்செயலாளரிடம் (சந்தான பாரதி) ஒப்படைக்கிறார்.

இறுதியில் ஊழல் வழக்கின் தீர்ப்பு முதலமைச்சர் அருணாச்சலத்துக்கு சாதகமாக வந்ததா? பாதகமாக வந்ததா? முதலமைச்சர் பதவியில் அருணாச்சலம் நீடித்தாரா? அல்லது புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட்டாரா? கொலையாளி துர்கா யார்? அவரது பின்னணி என்ன? அவரைத் தேடி அலைந்த சி.பி.ஐ மற்றும் தமிழக காவல்துறையிடம் அவர் சிக்கினாரா, இல்லையா? என்பன போன்ற கேள்விகளுக்கு எதிர்பாராத திருப்பங்களுடன் விடை அளிக்கிறது ‘தலைமை செயலகம்’ இணையத் தொடரின் மீதிக்கதை.

தமிழ்நாட்டின் திராவிட முதலமைச்சர் அருணாச்சலமாக முக்கிய கதாபாத்திரத்தில் வரும் கிஷோர், முதலமைச்சரின் மூத்த மகளாக, அமைச்சர் அமுதவல்லியாக வரும் ரம்யா நம்பிசன், முதலமைச்சரின் இரண்டாவது மகளின் கணவர் ஹரிஹரனாக வரும் நிரூப் நந்தகுமார், பத்திரிகையாளராக, ஆளுங்கட்சியின் ஆலோசகர் கொற்றவையாக வரும் ஸ்ரேயா ரெட்டி, சிபிஐ அதிகாரியாக வரும் ஆதித்யா மேனன், தமிழக காவல்துறை அதிகாரியாக வரும் பரத், அவரது காதலியாக வரும் தர்ஷா குப்தா, மற்றும் கனி குஸ்ருதி, சாரா பிளாக் , சித்தார்த் விபின், ஒய்.ஜி.மகேந்திரா, சந்தான பாரதி, கவிதா பாரதி, நமோ நாராயணா உள்ளிட்ட அனைத்து நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரமாகவே மாறி  இயல்பான நடிப்பை சிறப்பாக நடித்துள்ளார்கள்.

தமிழ்நாட்டு திராவிட அரசியலை, அது வகிக்கும் வரலாற்றுப் பாத்திரத்தை மிக நன்றாக புரிந்துகொண்டு, தெளிவான கதை, திரைக்கதை அமைத்து, கொண்டாடத் தக்க வசனங்களுடன், அனைத்துத் தரப்பினரும் பார்த்து, ரசித்து, மகிழும் வகையில் இந்த அரசியல் திரில்லரை உயிரோட்டத்துடன் இயக்கியிருக்கிறார் வசந்தபாலன். அவருக்கு நமது பாராட்டுகள்.

வொய்டு ஆங்கிள் ரவிஷங்கரின் நேர்த்தியான ஒளிப்பதிவும், ஜிப்ரனின் பொருத்தமான இசையும் இயக்குநரின் கதை சொல்லலுக்கு உறுதுணையாக இருந்துள்ளன.

‘தலைமை செயலகம்’ – உலகெங்கும் வாழும் அனைத்துத் தமிழர்களும் அவசியம் கண்டு களிக்க வேண்டிய இணையத் தொடர்!