படிக்காத பக்கங்கள் – விமர்சனம்

நடிப்பு: யாஷிகா ஆனந்த், பிரிஜின், ஜார்ஜ் மரியான், முத்துக்குமார், ஆதவ் பாலாஜி, லொள்ளுசபா மனோகர், தர்ஷினி மற்றும் பலர்

இயக்கம்: செல்வம் மாதப்பன்

ஒளிப்பதிவு: டாலி

படத்தொகுப்பு: மூர்த்தி, சரண் சண்முகம்

பாடலிசை: ஜெஸ்ஸி கிஃப்ட்

பின்னணி இசை: எஸ்.எஸ்.தேவ்

தயாரிப்பு: எஸ் மூவி பார்க் & பவுர்ணமி பிக்சர்ஸ்

தயாரிப்பாளர்கள்: முத்துக்குமார் & செல்வம்

பத்திரிகை தொடர்பு: குணா

காதலனை நம்பி ஒரு பெண் (தர்ஷினி) நெருக்கமாக இருக்க,  அது இன்னொருவனின் செல்போனில் இருந்து வாட்ஸ் அப் வீடியோவாக அந்த பெண்ணுக்கே வருகிறது. அவன் பணம் கேட்பதோடு பலரிடம் படுக்கச் சொல்ல, அவர்களை சந்திக்கும் அந்தப் பெண், காதலனாக நடித்து ஏமாற்றியவனிடம் நியாயம் கேட்க,  அவரை அடித்துக் கொல்கின்றனர். 

நடிகை ஸ்ரீஜா (யாஷிகா ஆனந்த்) ஒரு படப்பிடிப்புக்காக ஏற்காடு வந்திருக்க, அவரை பேட்டி காண வரும் லோக்கல் டிவி ரிப்போர்ட்டர் (முத்துக்குமார்) அவரோடு உறவு கொண்டு அதை வீடியோவாக எடுக்க முயல, அந்த முயற்சியில்  ஹோட்டல் பேரரை அவன் கொல்லும்போது தான் அவனது கொடூரம்  புரிகிறது . 

அவனிடம் இணங்குவது போல நடிக்கும் நடிகை ஸ்ரீஜா ஒரு நிலையில் அவனையே அடித்து வீழ்த்துகிறார். “நீ என்ன குறி வச்சு வரலடா… நான்தான் உன்னை குறி வச்சு வர வச்சேன்” என்கிறார். ஏன், எதற்கு, எப்படி,  அப்புறம் என்ன நடந்தது என்பதே ‘படிக்காத பக்கங்கள்’ திரைப்படம் . 

பெண்களை நம்ப வைத்து உறவு கொள்ளும்போது ஆபாசப்படம் எடுத்து அதை வைத்து மிரட்டி அவர்களிடம் பணம் பிடுங்குவதோடு பலரிடமும் காமத்துக்கு அனுப்பி அதை வைத்து பல வகையிலும் பணம் அதிகாரம் என்று வாழும் கும்பல் பற்றிய படம் . 

பொள்ளாச்சி பாலியல் குற்றங்களின் இன்ஸ்பிரேஷனில் எழுதி இருக்கிறார்கள். 

யாஷிகா ஆனந்த் நடிகை ஸ்ரீஜா என்ற கதாபாத்திரத்தில் நடிகையாகவே வந்து சிறப்பான நடிப்பை தந்திருக்கிறார். படத்தை ஒட்டுமொத்தமாக தாங்கி இந்த படிக்காத பக்கங்களை படிக்கத்தக்க வகையில் அழகாக கொடுத்திருக்கிறார். கவர்ச்சியிலும் நடிப்பிலும் மிரட்டி இருக்கிறார்.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் பிரஜின் இடைவேளை நெருங்கும்போது தான் வருகிறார். வந்த பிறகு, கச்சிதமான நடிப்பில் கவர்கிறார். நாயகிக்கு உதவும் கேரக்டரில் தன்னால் முடிந்த உதவியை செய்து இருக்கிறார்.

இவர்களுடன் வில்லன் கும்பலைச் சேர்ந்த முத்து, எம்எல்ஏ உள்ளிட்ட பலரும் கதைக்கு ஏற்ப பயணித்து இருக்கின்றனர்.

சைக்கோ வில்லன் முத்துக்குமார் மிரட்டி இருக்கிறார். அதுபோல ஆதவ் பாலாஜி, ஜார்ஜ் மரியான் உள்ளிட்டோரும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கின்றனர்.

இசையமைப்பாளர் ஜெஸ்ஸி கிப்ட் இசையமைத்துள்ளார். பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு பயணிக்கிறது.

திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் டாலி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் மூர்த்தி மற்றும் சரண் ஷண்முகம் எடிட்டிங் செய்துள்ளனர்.

படத்தை இரண்டு மணி நேரத்திற்குள் எடிட்டிங் செய்து செய்திருக்கின்றனர். இதை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். அதுபோல படத்தின் ஒளிப்பதிவும் பாராட்டத்தக்க வகையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை எஸ் மூவி பார்க் & பவுர்ணமி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

பொதுவாகவே நாம் சில செய்திகளை நாளிதழ்களில் படிக்கும்போது ஒரு விபத்து, ஒரு கற்பழிப்பு, ஒரு கொலை என்ற சம்பவங்களை படிப்போம். இவை அனைத்தும் பெரிய எழுத்துக்களில் தலைப்பு செய்தியாக வந்திருக்கும். ஆனால் அதை அடுத்து ஒரு சில தினங்களில் இது தொடர்பான கைது விசாரணை அல்லது முன்ஜாமீன் வழக்கு வாபஸ் என்ற செய்திகள் சிறிய செய்தியாக போடப்பட்டிருக்கும்.

ஆனால் இவைதான் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இதை படிக்காத பக்கங்கள் என்ற பெயரில் வசனங்களாக வைத்திருக்கிறார் இயக்குனர் செல்வம் மாதப்பன். நாம் படித்த பக்கங்களை விட படிக்காத பக்கங்கள் நிறைய இருக்கிறது, அதை படிக்க வேண்டும் என்ற சிந்தனையில் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

ஆக, இந்த படிக்காத பக்கங்கள்… படிக்க வேண்டிய பக்கங்கள்..!