அரியவன் – விமர்சனம்

நடிப்பு: ஈஷான், ப்ரணாலி கோகரே, டேனியல் பாலாஜி, சத்யன், கல்கி ராஜா, சூப்பர்குட் சுப்பிரமணி, ரமா, ரமேஷ் சக்ரவர்த்தி, காவ்யா, நிஷ்மா, ரவி வெங்கட்ராமன்  மற்றும் பலர்

இயக்கம்: மித்ரன் ஆர்.ஜவஹர்

கதை: மாரிசெல்வன் சு

வசனம்: ஜெகஜீவன், மாரிசெல்வன் சு.

ஒளிப்பதிவு: கே.எஸ்.விஷ்ணுஸ்ரீ

பாடலிசை: ஜேம்ஸ் வசந்தன், வேத் சங்கர், கிரி நாத்

பின்னணி இசை: விவி & குழு

தயாரிப்பு: ‘எம்ஜிபி மாஸ் மீடியா’ நவீன்

பத்திரிகை தொடர்பு: சதீஷ் குமார், சிவா (டீம் எய்ம்)

தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘திருச்சிற்றம்பலம்’, ‘யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில் உருவாகியிருப்பதால், ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ‘அரியவன்’.

“மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்” என்பதை இன்னும் கூர்மையாக்கி, “மாதர் தம்மை இழிவு செய்யும் மடையர்களை உயிரோடு கொளுத்துவோம்” என வீராவேசத்துடன் முழக்கமிடும் கமர்ஷியல் திரில்லர் படமாக, தற்போதைய சமூகத்துக்குத் தேவையான படமாக வெளிவந்திருக்கிறது ‘அரியவன்’.

சில ஆண்டுகளுக்குமுன், தமிழ்நாட்டையே அதிர்ச்சியில் உறைய வைத்து அச்சத்தில் உலுக்கியெடுத்த ‘பொள்ளாச்சி பாலியல் கொடூரம்’ எனும் பயங்கர சம்பவம் நினைவிருக்கிறதா? அது போன்ற பதைபதைப்பூட்டும் சம்பவத்துடன் ‘அரியவன்’ படம் தொடங்குகிறது. அதாவது, அப்பாவிப் பெண்ணொருத்தியை காதலிப்பது போல் நடித்து, சூழ்ச்சி வலையில் சிக்க வைத்து, தனியிடத்துக்கு காரில்  அழைத்துச் செல்கிறான் ஒரு அயோக்கியன். அவனது சகாக்கள் சிலர் திடீரென அங்கு வந்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய, அதை ஒருவன் வீடியோ எடுக்கிறான். பின்னர் அந்த வீடியோவைக் காட்டி, மிரட்டி, அவளைப் பணியச் செய்து, பாலியல் தொழிலாளி ஆக்கி, பெரும்புள்ளிகளிடம் அனுப்பி, கத்தை கத்தையாக பணம் சம்பாதிக்கிறார்கள். இப்படி ஒரு பெரிய கும்பலே இயங்குகிறது. அந்த கும்பலின் தலைவராகவும், அவர்களுக்கு பயிற்சி கொடுப்பவராகவும் இருக்கிறார், செல்வமும் செல்வாக்கும் மிக்க பெரிய தாதாவான டேனியல் பாலாஜி.

மறுபுறம், திறமையான கபடி விளையாட்டு வீரராகத் திகழ்கிறார் அறிமுக நாயகன் ஈஷான். அவரும், அறிமுக நாயகி பிரணாலியும் காதலர்கள்.

0a1a

பிரணாலியின் ரூம்மேட்டான நிஷ்மா ஒருநாள் திடீரென தற்கொலை செய்யும் எண்ணத்துடன் மாடியிலிருந்து குதிக்க முயல, அவரை தடுத்துக் காப்பாற்றி விசாரிக்கிறார் பிரணாலி. தன்னை ஒருவன் காதலிப்பதாகச் சொல்லி, ஏமாற்றி, நெருக்கமாக இருந்து, அதை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, மிரட்டி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சிப்பதாகவும், அவனது பிடியிலிருந்து தப்பிக்க இயலாமல் தற்கொலை முடிவை எடுத்ததாகவும் நிஷ்மா கூறுகிறார்.

பிரணாலி தன் தோழி நிஷ்மாவுடன் சென்று அந்த போலிக்காதலனை சந்தித்து, நிஷ்மாவின் ஆபாச வீடியோவை டெலீட் செய்யுமாறு கூற, அவன் எகத்தாளமாய் கொக்கரிக்க, அவனுக்கும் நாயகன் ஈஷானுக்கும் அடிதடி சண்டை மூள்கிறது. இந்த சண்டையில் எதிர்பாராத விதமாக அந்த அயோக்கியனின் கையை வெட்டித் துண்டாக்கிவிடுகிறார் ஈஷான்.

இவ்விதம் கையை இழந்தவன் யாரென்றால், தாதா டேனியல் பாலாஜியின் தம்பி. விடுவாரா டேனியல் பாலாஜி? ”என் தம்பியின் கையை வெட்டியவனை கொல்லாமல் விட மாட்டேன்” என ஆக்ரோஷமாகக் கிளம்புகிறார்.

0a1c

வில்லன் டேனியல் பாலாஜிக்கும், நாயகன் ஈஷானுக்குமான பயங்கர மோதல் என்னென்ன வடிவங்களை எடுத்தது? டேனியல் பாலாஜியும் அவரது கும்பலும் அழித்து ஒழிக்கப்பட்டனரா? அவர்களிடம் சிக்கிச் சீரழிந்த பெண்கள் மீட்கப்பட்டனரா? பெண்களுக்கு எதிரான இத்தைகைய கொடுமைகளுக்கு என்ன தான் தீர்வு? என்பன போன்ற கேள்விகளுக்கு விறுவிறுப்பாக விடை அளிக்கிறது ‘அரியவன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

ஜீவா என்ற கதாபாத்திரத்தில் கபடி விளையாட்டு வீரராக வருகிறார் அறிமுக நாயகன் ஈஷான். தமிழ் ரசிகர்களுக்குப் பிடித்தமான மாநிறம், ஆக்சன் ஹீரோவுக்குத் தேவையான நல்ல உயரம், தொளதொள சதை போடாத கட்டுக்கோப்பான உடம்பு என கம்பீரமான மாஸ் ஹீரோவுக்குத் தேவையான அனைத்துத் தகுதிகளுடனும் திரையில் ஜொலிக்கிறார். கடினமாக உழைத்திருக்கிறார். அதிரடிஆக்சன், காதல், நடனம், செண்டிமெண்ட் என அனைத்துக் காட்சிகளிலும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நம்பிக்கைக்கும், வரவேற்புக்கும் உரிய அறிமுக நாயகனாக இருக்கும் ஈஷான், தொடர்ந்து நடிப்புப் பயிற்சி மேற்கொண்டால், தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு தனியிடத்தைப் பிடித்துக்கொள்வார் என்பது  நிச்சயம்.

நேத்ரா என்ற கதாபாத்திரத்தில் நாயகனின் காதலியாக வரும் பிரணாலி அழகாக இருக்கிறார். அருமையாக நடித்திருக்கிறார். காதலில் உருகுவது, தோழிக்கு உதவுவது, அநியாத்தைத் துணிந்து தட்டிக் கேட்பது ஆகிய பண்புகளுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் நாயகி கதாபாத்திரத்துக்குள் கச்சிதமாகப் பொருந்தி, பொருத்தமான நடிப்பை வழங்கி சபாஷ் பெறுகிறார்.

அப்பாவி இளம்பெண்களை காதலில் வீழ்த்தி, ஆபாச வீடியோ எடுத்து, மிரட்டி, அவர்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் கொடிய கும்பலின் கொடூரத் தலைவனாக வருகிறார் டேனியல் பாலாஜி. நீண்ட இடைவெளிக்குப்பின் அச்சுறுத்தும் அசாதாரண வில்லனாக வந்து அசத்தியிருக்கிறார். அவரது நடை, உடை, பாவனையோடு, அவருக்கான பயங்கர பின்னணி இசையும் சேர்ந்துகொண்டு மிரட்டி பார்வையாளர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது.

நாயகனின் அப்பாவாக நடித்திருக்கும் சூப்பர்குட் சுப்பிரமணியும், அம்மாவாக நடித்திருக்கும் ரமாவும் நடுத்தர வர்க்கத்துக் குடும்பத் தம்பதியரின் உணர்வுகளைத் துல்லியமாக பிரதிபலித்திருக்கிறார்கள்.

சத்யன், நிஷ்மா உள்ளிட்ட ஏனையோரும் தத்தமது பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

கொலைக்கு அஞ்சாத டெரர் வில்லன், வில்லனது தம்பியின் கையையே துண்டிக்கும் டெரர் நாயகன் என டெரரான இரண்டு முக்கிய கதாபாத்திரங்களை வைத்து பரபரப்பாகவும் சுவாரஸ்யமாகவும் படத்தை போரடிக்காமல் நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குனர் மித்ரன் ஆர்.ஜவஹர். இன்றைய சமூகத்தின் மிக முக்கியமான பிரச்சனை இப்படத்தின் மையக்கரு என்பதால், இயக்குனர் தனது வழக்கமான காமெடி இழையோடும் திரைக்கதை பாணியை ஒதுக்கிவிட்டு, சீரியஸான, சமூகப் பொறுப்புணர்வுடன் கூடிய ஆக்‌ஷன் பாணியைக் கடைப்பிடித்திருப்பது நன்று. பெண்கள் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு தீர்வு காண ஒரு ரட்சகன் அல்லது ஹீரோ வருவான் என்று காத்திருக்காமல், தாங்களே தீர்வு காணத் துணிவதாக படத்தை முடித்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டு.

விஷ்ணு ஸ்ரீயின் ஒளிப்பதிவும், ஜேம்ஸ் வசந்தன் உள்ளிட்ட இசையமைப்பாளர்களின் இசையும் படத்துக்கு மிகப் பெரிய பக்கபலம்.

’அரியவன்’ – அரிதானவன்! அவசியமானவன்! கண்டு களிக்கலாம்! கொண்டாடலாம்!