அடியே – விமர்சனம்

நடிப்பு: ஜி.வி.பிரகாஷ் குமார், கௌரி ஜி.கிஷன், வெங்கட் பிரபு, மதும்கேஷ், ஆர்ஜே விஜய், ஸ்வேதா வேணுகோபால் மற்றும் பலர்

இயக்கம்: விக்னேஷ் கார்த்திக்

ஒளிப்பதிவு: கோகுல் பினாய்

படத்தொகுப்பு: யு.முத்தயன்

இசை: ஜஸ்டின் பிரபாகரன்

தயாரிப்பு;  ’MAALI AND MANVI’ பிரபா பிரேம்குமார்

வெளியீடு: எஸ் பிக்சர்ஸ்

பத்திரிகை தொடர்பு: யுவராஜ் (யுவி கம்யூனிகேஷன்ஸ்)

திரைப்படக் கதைகளை ‘யதார்த்தத்துக்கு நெருக்கமான கதைகள்’, ‘யதார்த்தத்துக்குத் தூரமான கதைகள்’ என இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். உலகெங்கிலும் பெருமளவுக்கு ‘யதார்த்தத்துக்கு நெருக்கமான கதைகளே’ படமாக்கப்படுகின்றன; என்றாலும், ஒரு மாறுதலுக்காக, பரீட்சார்த்த முயற்சியாக, யதார்த்தத்திலிருந்து வெகுதூரம் விலகிச் செல்லும் அதீத கற்பனைக் கதைகளும் அவ்வப்போது படமாக்கப்படுகின்றன. இவை அதனதன் தன்மைக்கேற்ப ‘சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதைகள்’, ‘பாரா-நார்மல் கதைகள்’, ‘ஃபேண்ட்ஸி கதைகள்’, ‘மல்டி யுனிவர்ஸ் – ஆல்டர்நேட் ரியாலிட்டி கதைகள்’ என்றெல்லாம் வகைப்படுத்தப்படுகின்றன. அந்த வகையில், தமிழில், ‘மல்டி யுனிவர்ஸ் – ஆல்டர்நேட் ரியாலிட்டி’ என்ற கருத்தாக்கத்தை உள்ளடக்கிய திரைப்படமாக செல்வராகவனின் ‘இரண்டாம் உலகம்’ ஏற்கெனவே வெளிவந்திருக்கிறது. இப்போது அதே கருத்தாக்கத்தில் – ஆனால் ‘இரண்டாம் உலகம்’ படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஜனரஞ்சகமான ட்ரீட்மெண்ட்டில் – காதலும், காமெடியும் கலந்த கலகலப்பான திரைப்படமாக உருவாகி வெளிவந்திருக்கிறது ‘அடியே’.

0a1e

வாழப் பிடிக்காமல் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் இருக்கும் நாயகன் ஜீவா (ஜி.வி.பிரகாஷ் குமார்), பள்ளிப்பருவத்தில் தான் ஒருதலையாய் காதலித்த – இப்போது பிரபல பின்னணிப் பாடகியாகத் திகழ்கிற – நாயகி செந்தாழினியை (கௌரி ஜி.கிஷனை) தொலைக்காட்சியில் பார்க்கிறார். செந்தாழினி தனது பேட்டியில், ”பள்ளியில் படிக்கும்போது, நான் பாடுவதை ஊக்குவிக்கும் விதமாக கடிதம் எழுதி, எனக்குத் தெரியாமல் என் புத்தகப் பையில் வைத்த, முகம் தெரியாத மாணவன் மீது எனக்கு கிரஷ். அவனை இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன்” என்று உருக்கமாகக் கூறுகிறார். இதைக் கேட்கும் ஜீவாவுக்கு வாழ்க்கையில் பிடிப்பு ஏற்படுகிறது. காரணம், செந்தாழினி தேடிக்கொண்டிருக்கும் நபர் ஜீவா தான். இதையும், தன் காதலையும் செந்தாழினியிடம் சொல்லிவிட வேண்டும் என்ற துடிப்பில் அவரை சந்திக்க முயற்சிகள் மேற்கொள்கிறார் ஜீவா. அந்த நேரத்தில் பயங்கர விபத்தில் சிக்கி மயக்கமடைகிறார்.

கண் விழிக்கும்போது, அவர் வேறொரு உலகத்தில் (இரண்டாம் உலகத்தில்) இருக்கிறார். இந்த புது உலகத்தில் – அவரது பெயர் உட்பட – எல்லாமே மாறியிருக்கிறது. இங்கு அவரை ’அர்ஜுன் பிரபாகரன்’ என்று அழைக்கிறார்கள். அவர் வசிக்கும் சென்னையை ‘மெட்ராஸ்’ என்கிறார்கள். இந்த மெட்ராஸில் காஷ்மீர் போல பட்டப்பகலிலும் பனிமழை  பொழிகிறது. இதன் வானத்தில் பறக்கும் தட்டுகள் பறக்கின்றன. மெட்ரோ ரயில் சாலையில் ஓடுகிறது. வெங்கட் பிரபு தன் பெயரை ’கௌதம் மேனன்’ என்கிறார். வேகப்பந்து வீச்சாளராக இருக்கிறார் மணிரத்னம். ஐ.பி.எல். பெங்களூரு அணியின் கேப்டனாக தோனி இருக்கிறார். கூல் சுரேஷ் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளியாக இருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் டான்ஸ் மாஸ்டராகவும், பிரபு தேவா இசையமைப்பாளராகவும், விஜயகாந்த் பிரதமராகவும் இருக்கிறார்கள். தமிழ்மொழி தேசிய மொழியாக இருக்கிறது. தமிழை திணிக்கக் கூடாது என்று போராட்டம் நடக்கிறது. இதுபோல் இன்னும் நிறைய நிறைய வினோதங்கள், விசித்திரங்கள். எல்லாவற்றையும் விட, முதல் உலகத்தில் அவர் ஒருதலையாய் காதலித்த செந்தாழினி இந்த இரண்டாம் உலகத்தில் அவருக்கு மனைவியாக இருக்கிறார்.

இவை எல்லாம் கனவா, நனவா என்று புரியாமல் குழம்பித் தவிக்கையில், திடீரென்று மீண்டும் முதல் உலகத்துக்குள் வந்துவிடுகிறார். இப்போது அவர் காதலித்த செந்தாழினி, அவரது நண்பன் மைக்கேலின் (மதும்கேஷ்) காதலியாக இருக்கிறார். இருவருக்கும் திருமணம் ஏற்பாடாகி இருக்கிறது.

இப்படி இரண்டு உலகங்களுக்கு இடையில் சிக்கித் தவிக்கும் ஜீவா, இந்த அவஸ்தையிலிருந்து மீண்டாரா? தான் ஒருதலையாய் காதலித்த செந்தாழினியை கரம் பிடித்தாரா? என்ற கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக விடையளிக்கிறது ‘அடியே’ திரைப்படத்தின் மீதிக்கதை.

0a1c

முதல் உலகத்தில் ஜீவா என்ற பெயரிலும், இரண்டாம் உலகத்தில் அர்ஜுன் பிரபாகரன் என்ற பெயரிலும் அறியப்படும் நாயகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ் குமார். பள்ளி மாணவனாக  தாடி மீசை இல்லாமலும், வேலை தேடும் இளைஞனாக தாடி மீசையுடனும் இரண்டு தோற்றங்களில் வருகிறார். ஒற்றை நபராக முழுப்படத்தையும் தோளில் சுமந்திருக்கிறார். ஒருதலைக் காதலில் உருகுவது, காதலை நாயகியிடம் சொல்லத் துடிப்பது, இரண்டாம் உலகத்தின் விசித்திரமான மாற்றங்களால் ஒன்றும் புரியாமல் குழம்புவது, தான் காதலிக்கும் நாயகி தன் நண்பனின் காதலியாக இருப்பதை அறிந்து கையறு நிலையில் தவிப்பது என தனது கதாபாத்திரம் கோரும் அத்தனை உணர்ச்சிகளையும் துல்லியமாக நடிப்பில் வெளிப்படுத்தியுள்ளார்.

நாயகி செந்தாழினியாக வரும் கௌரி ஜி.கிஷன் திரையில் அழகாக இருக்கிறார். நடிப்பில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. அலட்டல் இல்லாமல் அருமையான சின்னச் சின்ன முகபாவங்களுடன் தன் கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்.

கௌதம் மேனனாக நடித்திருக்கும் வெங்கட் பிரபு கேலியும் கிண்டலுமாக அவ்வப்போது நகைச்சுவை வெடிகளைக் கொளுத்திப் போட்டிருக்கிறார். அவர் தன்னையே (வெங்கட் பிரபுவையே)  நக்கலடித்து நார் நாராய் கிழிப்பது காமெடியின் உச்சம்.

நாயகனின் நண்பனாக நடித்திருக்கும் ஆர்ஜே விஜய், முதல் உலகத்தில் வாசிம் அக்ரம் என்ற பெயரிலும், அவரே இரண்டாம் உலகத்தில் வக்கார் யூனுஸ் என்ற பெயரிலும் வந்து, பார்வையாளர்களின் கோணத்தில் நாயகனை பயங்கரமாக கலாய்த்து திரையரங்கை கலகலக்க வைக்கிறார்.

நாயகனின் இன்னொரு நண்பனான மைக்கேலாக நடித்திருக்கும் மதும்கேஷ், திடீரென நாயகியின் காதலனாக வந்து, கதையில் திருப்பத்தை ஏற்படுத்தும் நடிப்பை வழங்கியிருக்கிறார்.

’மல்டி யுனிவர்ஸ் – ஆல்டர்நேட் ரியாலிட்டி’ என்ற சிக்கலான ஜானரை, மிகவும் கவனமாக கையாண்டு, காதலையும் காமெடியையும் கலந்து, அனைத்துத் தரப்பினரும் குழப்பமில்லாமல் சுலபமாக புரிந்து ரசித்து மகிழத்தக்க சுவாரஸ்யமான படமாக இதை கொடுத்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக். சிறப்பான காட்சிகளாலும், அருமையான வசனங்களாலும் பார்வையாளர்களைக் கட்டிப்போட்டு, நேரம் போவதே தெரியாத அளவுக்கு விறுவிறுப்பாக படத்தை நகர்த்திச் சென்றுள்ளார். பாராட்டுகள்.

கோகுல் பினாயின் வண்ணமயமான ஒளிப்பதிவும், ஜஸ்டின் பிரபாகரனின் இனிமையான பாடலிசை மற்றும் காட்சிகளுக்கு வலு சேர்க்கும் பின்னணி இசையும் இயக்குனருக்கும், படத்தின் வெற்றிக்கும் உறுதுணையாக இருந்துள்ளன.

‘அடியே’ – திரும்பத் திரும்ப கண்டு களிக்கலாம்!