ஒரு நொடி – விமர்சனம்

நடிப்பு: தமன் குமார், எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி, ஸ்ரீ ரஞ்சனி, கஜராஜ், பழ.கருப்பையா, தீபா சங்கர், நிகிதா, அருண் கார்த்திக், விக்னேஷ் ஆதித்யா, கருப்பு நம்பியார் மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: பி.மணிவர்மன்

ஒளிப்பதிவு: கே.ஜி.ரத்தீஷ்

படத்தொகுப்பு: எஸ்.குரு சூர்யா

இசை: சஞ்சய் மாணிக்கம்

தயாரிப்பு: ’மதுரை அழகர் மூவிஸ்’ அழகர்.ஜி & ’ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ்’ கே.ஜி.ரத்தீஷ்

வழங்கல்: ‘கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்’ ஜி.தனஞ்ஜெயன்

பத்திரிகை தொடர்பு: பி.ஸ்ரீ வெங்கடேஷ்

ஒரு நொடி…

படத்தின் தலைப்பே கதையின் உட்கருவைச் சொல்லிவிடுகிறது…

 திருமணத்துக்குப் பெண் பார்க்கப் போகிறீர்கள். பெண்ணைப் பார்த்த முதல் நொடியே ‘இவள் தான் என் வாழ்க்கைத் துணை’ என மனமகிழ்ந்து முடிவெடுக்கிறீர்கள். திருமணத்துக்குப்பின் உங்கள் மணவாழ்க்கை சொர்க்கமாக இருக்கலாம்; அல்லது நரகமாக இருக்கலாம். அது எப்படியிருந்தாலும், அப்படியிருப்பதற்கு பெண் பார்க்கப் போனபோது ஒரு நொடியில் நீங்கள் எடுத்த முடிவுதான் காரணம் என்பதை ஒப்புக்கொள்வீர்கள் அல்லவா? அதுபோல தான் நம் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் ஒரு நொடியில் எடுத்த முடிவுகள் தான் நம்மை உயர்த்தியுள்ளன; அல்லது தாழ்த்தியுள்ளன; என்றென்றைக்குமாக நம் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுள்ளன. அனைவருக்கும் பொதுவான இந்த பேருண்மையை அடிப்படையாக வைத்து, சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் ஜானரில் ‘ஒரு நொடி’ திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் பி.மணிவர்மன்.

மதுரையை அடுத்த அலங்காநல்லூரில் வசிக்கும் சேகரன் (எம்.எஸ்.பாஸ்கர்), தனது மகள் திருமணத்தைத் தடபுடலாக நடத்துவதற்காக, கந்துவட்டிக்காரரான கரிமேடு தியாகுவிடம் (வேல ராமமூர்த்தி) தன்னுடைய நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்குகிறார். ஆறு மாதங்களில் அவர் சுமார் எட்டு லட்சம் ரூபாய் பணத்தைத் தயார் செய்துகொண்டு, கடனைத் திருப்பிக் கொடுத்து நிலத்தை மீட்பதற்காக, பணத்துடன் போன சமயத்தில் காணாமல் போய்விடுகிறார்.

”கணவரைக் காணவில்லை” என்று சேகரனின் மனைவி சகுந்தலா (ஸ்ரீ ரஞ்சனி) போலீஸில் புகார் கொடுக்கிறார். இந்த விவகாரத்தை புலன்விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரிதி இளமாறன் (தமன் குமார்), “யார் மேலாவது சந்தேகம் இருக்கா?” என்று கேட்க, கந்துவட்டிக்காரரான கரிமேடு தியாகு மேல் சந்தேகம் இருப்பதாக சகுந்தலா சொல்ல, அடுத்த கணமே ஆக்ஷனில் இறங்குகிறார் இன்ஸ்பெக்டர் பரிதி இளமாறன். கரிமேடு தியாகுவையும், அவரது கையாட்களையும் கைது செய்கிறார். இது அப்பகுதி எம்.எல்.ஏ.வான திருஞானமூர்த்தியை (பழ.கருப்பையா) கோபப்படுத்துகிறது.

சேகரன் காணாமல் போன விவகாரத்தில் கரிமேடு தியாகு சம்பந்தப்பட்டிருப்பதாக போலீஸால் நிரூபிக்க இயலாத நிலையில், அப்பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் பணிபுரியும் பார்வதி ( நிகிதா) என்ற இளம்பெண் எதிர்பாராத விதமாக மர்மமான முறையில் படுகொலை செய்யப்படுகிறார். பிரேதப் பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வருகிறது.

சேகரன் மாயம், பார்வதி படுகொலை என்ற இரண்டு மர்ம சம்பவங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? சேகரன் ஏன் மாயம் ஆனார்? அவரது கதி என்ன? பார்வதி படுகொலையின் பின்னணி என்ன? குற்றவாளி யார்? படத்தின் டைட்டிலான ‘ஒரு நொடி’, எந்த கதாபாத்திரம் சம்பந்தப்பட்டது? என்பன போன்ற சஸ்பென்ஸான பல மர்மமுடிச்சுகளுக்கான விடைகளை இன்ஸ்பெக்டர் பரிதி இளமாறன் புலனாய்வு செய்து வெளிப்படுத்துவது தான் ‘ஒரு நொடி’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகனாக, போலீஸ் இன்ஸ்பெக்டர் பரிதி இளமாறனாக தமன் குமார் நடித்திருக்கிறார். போலீஸ் அதிகாரிக்குத் தேவையான நல்ல உயரம், நல்ல உடற்கட்டு, கூர்மையான பார்வை ஆகிய இயற்கையான அம்சங்களுடன், மிடுக்காக, கம்பீரமாக படம் முழுக்க வலம் வருகிறார். தனது கதாபாத்திரத்தை நன்கு உணர்ந்து, அதற்குத் தேவையான சிறப்பான நடிப்பை வழங்கி, நியாயம் செய்திருக்கிறார். எதிர்காலத்தில் பல பட வாய்ப்புகள் அவரைத் தேடிவருவது நிச்சயம்.

படத்தில் சிறிதுநேரம் வந்து அதன்பின் மாயமாகிவிடும் சேகரன் கதாபாத்திரத்தில் வரும் எம்.எஸ்.பாஸ்கரும், அவரது மனைவி சகுந்தலா கதாபாத்திரத்தில் வரும் ஸ்ரீ ரஞ்சனியும் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

கந்துவட்டிக்கார கரிமேடு தியாகுவாக வரும் வேல ராம்மூர்த்தி, நகைக்கடையில் பணிபுரியும் பார்வதியாக வரும் நிகிதா, அவரது அம்மா பொன்னாத்தாவாக வரும் தீபா சங்கர், எம்.எல்.ஏ திருஞானமூர்த்தியாக வரும் பழ.கருப்பையா, முடி திருத்தும் கலைஞர் விநாயகமாக வரும் விக்னேஷ் ஆதித்யா, மற்றும் ஜீவாவாக வரும் அருண் கார்த்திக், யோகலிங்கமாக வரும் கஜராஜ், மாணிக்கமாக வரும் கருப்பு நம்பியார் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குள் கச்சிதமாகப் பொருந்தி, அருமையாக நடித்து, கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

பி.மணிவர்மன் இப்படத்தை சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் ஜானரில் எழுதி இயக்கியிருக்கிறார். சஸ்பென்ஸை எங்கும் பலவீனப்படுத்தாமல் இறுதி வரை கட்டிக் காப்பதில் வெற்றி பெற்றுள்ளார். இந்த ஜானரில் ஏற்கெனவே ஏராளமான படங்கள் வெளிவந்துள்ள போதிலும், இப்படத்தை போரடிக்காமல், சுவாரஸ்யமாக, விறுவிறுப்பாக, உணர்வுப்பூர்வமாக நகர்த்திச் சென்றுள்ளார். கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமான நடிப்புக் கலைஞர்களைத் தேர்வு செய்ததிலும், அவர்களிடம் நடிப்பை வாங்கியதிலும் இயக்குநரின் திறமை பளிச்சிடுகிறது. யூகிக்க முடியாத கிளைமாக்ஸ், இயக்குநரின் எழுத்துத் திறமைக்கு சான்றாக உள்ளது. பாராட்டுகள் மணிவர்மன்.

சஞ்சய் மாணிக்கம் இசையில், சிவசங்கர், ஜெகன் கவிராஜ், உதயா அன்பழகன் ஆகியோரது வரிகளில், பாடல்கள் இனிமை. பின்னணி இசை, காட்சிகளுக்கு வலு சேர்க்கும் வண்ணம் பயணித்திருக்கிறது.

கே.ஜி.ரத்தீஷின் ஒளிப்பதிவு படத்துக்கு அழகு சேர்த்துள்ளது. எஸ்.குரு சூர்யாவின் படத்தொகுப்பு படத்தின் விறுவிறுப்பைக் கூட்டியுள்ளது.

‘ஒரு நொடி’ – அவசியம் பாருங்கள்! உங்களை ஆச்சரியப்படுத்தும் புது அனுபவமாக இருக்கும்!