ரத்னம் – விமர்சனம்

நடிப்பு: விஷால், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, விஜயகுமார், டெல்லி கணேஷ், யோகிபாபு, கௌதம் வாசுதேவ் மேனன், ஜெயபிரகாஷ், முரளி சர்மா, ஹரீஷ் பெராடி, முத்துக்குமார், நான் கடவுள் ராஜேந்திரன்,  கஜராஜ், விடிவி கணேஷ், ஒய்.ஜி.மகேந்திரன், மோகன்ராம், சி.ரங்கநாதன், கணேஷ் வெங்கட்ராம், கும்கி அஸ்வின், அஞ்சலி தேவி, துளசி மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: ஹரி

ஒளிப்பதிவு: எம்.சுகுமார்

படத்தொகுப்பு: டி.எஸ்.ஜாய்

இசை: தேவி ஸ்ரீ பிரசாத்

தயாரிப்பு: ’ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ்’ கார்த்திகேயன் சந்தானம் & ஜீ ஸ்டுடியோஸ்

பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்

1950களில் சென்னை மாகாணம் மொழிவாரியாக துண்டாடப்பட்டபோது, சித்தூர், திருப்பதி, காளகஸ்தி, நெல்லூர் என 40 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட தமிழ்ப்பகுதிகள் ஆந்திராவால் அபகரித்துக் கொள்ளப்பட்டன. பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி, காளஹஸ்தி  கோயில்களில் தமிழ் கல்வெட்டுகள், பட்டயங்கள் இருந்தும் அவை வலுக்கட்டாயமாக ஆந்திராவோடு இணைக்கப்பட்டன. இதனால் இப்பகுதிகளில் சொந்தமாக நிலம் வைத்திருந்த பல தமிழ்க்குடும்பங்கள் சொல்லொண்ணா துயரில் ஆழ்த்தப்பட்டன. இந்த வரலாற்று சோகம் பற்றிய சிறு குறிப்பு பின்னணியில் ஒலிக்க, ‘ரத்னம்’ படம் ஆரம்பமாகிறது.

அடுத்து, 1994ஆம் ஆண்டுக்கு காட்சி மாறுகிறது. திருப்பதி மலைப்பாதையில் ஒளிந்திருக்கும் மூன்று  வழிப்பறி கொள்ளையர்கள், பயணிகள் பேருந்து ஒன்றை திட்டமிட்டுக் கவிழ்த்து, விபத்துக்குள்ளாக்கி, குற்றுயிரும் குலையுயிருமாக ரத்த வெள்ளத்தில் கிடக்கும் பயணிகளிடமிருந்து பணத்தையும், நகைகளையும் கொடூரமாக கொள்ளையடித்துச் செல்கிறார்கள். இச்சம்பவத்தில் 26 பயணிகள் பரிதாபமாக உயிரிழக்கிறார்கள்.

அடுத்து, வேலூர் காய்கறி மார்க்கெட். பாலியல் தொழிலின் தலைவி தலைமையிலான ரவுடிக்கும்பல் ஒன்று, கவுன்சிலர் பன்னீர்செல்வத்தை (சமுத்திரக்கனி) படுகொலை செய்ய ஆயுதங்களுடன் சுற்றி வளைக்கிறது. வாழை இலைகள் வெட்டிக்கொண்டிருக்கும் சிறுவன் ரத்னம், இதைப் பார்த்து, கத்தியுடன் ஓடிவந்து, பாலியல் தொழிலின் தலைவியைக் குத்திச் சாய்த்து, கவுன்சிலர் பன்னீர்செல்வத்தைக் காப்பாற்றுகிறான்.

கொலைக்குற்றத்துக்காக கைது செய்யப்படும் சிறுவன் ரத்னம், சிறார் கூர்நோக்கு இல்லத்துக்கு (சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு) அனுப்பப்படுகிறான். தண்டனைக் காலம் முடிந்து ரத்னம் விடலைப் பையனாக வெளியே வரும்போது, பன்னீர்செல்வம் வேலூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக உயர்ந்திருக்கிறார். தாய் – தந்தை இல்லாத அநாதையான ரத்னத்தை தன் சொந்தப் பிள்ளை போலவே பாசத்தைக் கொட்டி வளர்க்கிறார் பன்னீர்செல்வம். விடலை ரத்னம் வளர்ந்து இளைஞர் ரத்னம் (விஷால்) ஆகிறார்.

“ஜனங்கள்ல 40 சதவிகிதம் பேர் தான் நல்லவங்க. மீதி 60 சதவிகிதம் பேர் கெட்டவங்க. இந்த 40 சதவிகிதம் நல்லவங்களை 60 சதவிகிதம் கெட்டவங்ககிட்ட இருந்து காப்பாத்துறது தான் என் வேலை” என்று நல்லவர்களுக்கு பாதுகாவலராகவும், கெட்டவர்களுக்கு எமனாகவும் வாழ்ந்துவரும் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ இட்ட வேலை எதுவானாலும், அதை தட்டாமல் செய்யும் அவரது கையாளாகத் திகழ்கிறார் ரத்னம். அதாவது, பன்னீர்செல்வம் யாரை காப்பாற்றச் சொல்லுகிறாரோ அவரை உயிரைப் பணயம் வைத்தாவது காப்பாற்றிவிடுவார். யாரை தீர்த்துக்கட்டச் சொல்கிறாரோ, அவரை எத்தனை ரிஸ்க் இருந்தாலும் அதைத் தாண்டிப்போய் தீர்த்துக்கட்டி விடுவார். “நான் கூலிக்காக கொலை பண்றவன் இல்ல; கொள்கைக்காக கொலை பண்றவன்” என்று தன்னைப் பற்றி தானே பிரகடனம் செய்துகொள்வார் ரத்னம்.

இந்நிலையில், டாக்டராகும் கனவுடன் நான்காவது முறையாக நீட் தேர்வு எழுதுவதற்காக வெளியூரிலிருந்து வேலூர் வந்து சேருகிறார், பி.எஸ்.சி நர்சிங் படித்துள்ள மல்லிகா (பிரியா பவானி சங்கர்). அவர் தன் தோழியுடன் டூவீலரில் செல்லும்போது அவரை தற்செயலாகப் பார்க்கும் ரத்னம், ‘இந்த பெண்ணை இதற்குமுன் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே’ என்று எண்ணி குழம்புகிறார். அதே குழப்பத்துடன் அவரை காரில் பின்தொடர்கிறார். அப்போது ஒரு ரவுடிக்கும்பல் மல்லிகாவைக் கொலை செய்ய ஆயுதங்களுடன் திடீரென பாய்கிறது. குறுக்கே புகுந்து அவர்களைத் தடுக்கும் ரத்னம், சரமாரியாக வெட்டி விரட்டி மல்லிகாவைக் காப்பாற்றுகிறார்.

இதனால் மல்லிகாவின் உள்ளத்தில் உயர்ந்த இடத்தைப் பிடிக்கும் ரத்னம், மல்லிகா வேலூரில் இருக்கும் வரை மட்டுமல்ல, சொந்த ஊருக்குப் போகும்போதும் பாதுகாவலராக உடன் செல்கிறார். இவர்கள் மல்லிகாவின் வீடு போய் சேரும் நேரம், ரவுடிக்கும்பல் அங்கும் கொலைவெறித் தாக்குதல் நடத்துகிறது.

ஆந்திரா – தமிழ்நாடு எல்லையான நகரியில் அட்டூழியம் செய்து கொண்டிருக்கும் ராயுடு சகோதரர்களான பீமா ராயுடு (முரளி சர்மா), சுப்பா ராயுடு (ஹரீஷ் பெராடி), ராகவா ராயுடு ( முத்துக்குமார்) ஆகியோர் தான் ரவுடிகளை ஏவி மல்லிகாவைக் கொல்ல முயற்சி செய்கிறார்கள் என்பது ரத்னத்துக்குத் தெரிய வருகிறது  மல்லிகாவின் பிரச்சனையை தன் பிரச்சனையாக கையிலெடுக்கும் ரத்னம், ராயுடு சகோதர்ர்களையும், அவர்களது ரவுடிக்கும்பலையும் வீழ்த்த வீறு கொண்டு புறப்படுகிறார்.

ராயுடு சகோதரர்கள் மல்லிகாவை ஏன் கொல்ல முயற்சி செய்கிறார்கள்? அவர்களிடமிருந்து, தான் காதலிக்காத மல்லிகாவை ரத்னம் ஏன் காப்பாற்ற விரும்புகிறார்?  தனது தாறுமாறான அதிரடி ஆக்‌ஷன் மூலம் ராயுடு கும்பலின் அட்டகாசத்தை ரத்னம் எப்படி அடக்கி ஒடுக்குகிறார்? என்பன போன்ற கேள்விகளுக்கு ரத்தம் தெறிக்கத் தெறிக்க விடை அளிக்கிறது ‘ரத்னம்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

நாயகன் ரத்னம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஷால். ’கூலிக்காக அல்லாமல் கொள்கைக்காக கொலை செய்யும் ரவுடி’ கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தி, சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் ரவுடிகளைப் பொளந்துகட்டி அதகளம் செய்யும் விஷால், அம்மாவை நினைத்து உருகும் செண்டிமெண்ட் காட்சிகளில் பார்வையாளர்களைக் கண் கலங்க வைத்துவிடுகிறார். ‘மார்க் ஆண்டனி’யைத் தொடர்ந்து விஷாலுக்கு நல்ல கௌரவம் சேர்க்கும் படமாக இது இருக்கும் என்பது நிச்சயம்.

நாயகி மல்லிகா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் பிரியா பவானி சங்கர். படத்தில் நாயகனுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ, அதற்கு இம்மியளவும் குறையாத முக்கியத்துவம் உள்ள வேடத்தில் அருமையாக நடித்து பார்வையாளர்களின் இதயங்களில் இடம் பிடித்துவிடுகிறார். மல்லிகா வேடம் தவிர கதைக்கருவாக அமைந்துள்ள இன்னொரு வேடத்திலும் தோன்றி ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் பிரியா பவானி சங்கர். அது என்ன வேடம்…? சஸ்பென்ஸ்…! வெள்ளித்திரையில் காண்க…!

 நல்லவர்களைப் பாதுகாத்து, கெட்டவர்களை தண்டிக்கும் வேலூர் தொகுதி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வமாக வரும் சமுத்திரக்கனி வழக்கம் போல தனது அனுபவ நடிப்பை வழங்கியிருக்கிறார். ஆனால், அவர் அணிந்திருக்கும் சட்டை தான், அவருடைய கதாபாத்திரத்துக்குப் பொருத்தமில்லாமல், முதுகெலும்பு இல்லாத ஒரு சந்தர்ப்பவாத நிஜ அரசியல்வாதியை நினைவூட்டுவதாக இருப்பது முரண்.

 நாயகனின் நண்பராக, பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.வின் டாஸ்மார்க் பாரை நிர்வகிக்கும் மானேஜராக மூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் வரும் யோகிபாபு ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார்.

பீமா ராயுடுவாக வரும் முரளி சர்மா, சுப்பா ராயுடுவாக வரும் ஹரீஷ் பெராடி, ராகவா ராயுடுவாக வரும் முத்துக்குமார் ஆகியோர் வில்லத்தனத்தில் மிரட்டி, கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

விஜயகுமார், ஜெயப்பிரகாஷ், துளசி, கஜராஜ், ஒய்.ஜி.மகேந்திரன், கணேஷ் வெங்கட்ராம், கும்கி அஸ்வின்,  கௌரவ வேடத்தில் நடித்திருக்கும் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட ஏனையோரும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை குறைவில்லாமல் கொடுத்திருக்கிறார்கள்.

‘தாமிரபரணி’, ‘பூஜை’ ஆகிய படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக விஷாலுடன் இந்த படத்தில் கைகோர்த்திருக்கிறார் இயக்குநர் ஹரி. நாயகனுக்கும் நாயகிக்கும் இடையிலான உறவில் முற்றிலும் வித்தியாசமான – யாருமே எதிர்பார்க்காத – புதுமை சேர்த்து, காதலோ, டூயட்டோ இல்லாமல் திரைக்கதை அமைத்து, அதிரடி ஆக்‌ஷன் மற்றும் சேசிங் காட்சிகளை அடுத்தடுத்து இணைத்து, படத்தை தன்னுடைய ஸ்டைலில் விறுவிறுப்பாக, சுவாரஸ்யமாக ஜெட் வேகத்தில் பறக்கவிட்டிருக்கிறார் இயக்குநர் ஹரி. வழக்கமாக ஹரி படங்களில் உள்ளத்தைத் தொடும் செண்டிமெண்ட் டிராக் இருக்கும். அந்த வகையில் இதில் வரும் அம்மா செண்டிமெண்ட் படத்துக்கும், இயக்குநருக்கும் பாராட்டை பெற்றுத் தரும்.

ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளை மெய்சிலிர்க்கும் வண்ணம் காட்சிப்படுத்தி அசத்தியிருக்கிறார். ஒரு ஆக்‌ஷன் காட்சி முழுவதையும் ஒரே ஷாட்டில் எடுத்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.

தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் ஓ.கே ரகம். பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளது.. ’ரத்னம்’ – அட்டகாசமான அதிரடி ஆக்‌ஷன் விருந்து! அனைத்துத் தரப்பினரும் கண்டு களிக்கலாம்!