ஓ மை கடவுளே – விமர்சனம்

நட்போடு காதலையும் மோதலையும் கலந்து பிசைந்துசெய்த படமாக “ஓ மை கடவுளே’ மிகப் பொருத்தமாக காதலர் தினத்தன்று திரைக்கு வந்திருக்கிறது.

அசோக் செல்வன், ரித்திகா சிங், ஷா ரா மூவரும் சின்ன வயதில் இருந்தே நண்பர்கள். ‘என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா?’ என திடீரென ஒருநாள் அசோக் செல்வனிடம் கேட்கிறார் ரித்திகா சிங். அவரும் சம்மதம் சொல்கிறார். ஆனால், இத்தனை வருடங்களாக நண்பியாகப் பழகிய ரித்திகா சிங்கை, அவரால் மனைவியாகப் பார்க்க முடியவில்லை.

இன்னொரு பக்கம், அவர்களின் பள்ளி சீனியரான வாணி போஜனை நீண்ட நாட்கள் கழித்துச் சந்திக்கிறார் அசோக் செல்வன். அவர்கள் இருவரும் ஜோவியலாகப் பழகுவது, ரித்திகா சிங்குக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே, திருமணமான ஒரு வருடத்துக்குள்ளேயே இருவரும் விவாகரத்து செய்ய முடிவெடுக்கின்றனர்.

குடும்பநல நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராகும்போது, திடீரென கடவுளைச் சந்திக்கும் வாய்ப்பு அசோக் செல்வனுக்குக் கிடைக்கிறது. தான் அவசரப்பட்டு திருமணத்துக்குச் சம்மதித்துவிட்டோமோ என்று புலம்பும் அவருக்கு, அந்த முடிவை மாற்றிக்கொள்ள ஒரு வாய்ப்பு (டிக்கெட்) தருகின்றனர் கடவுள் விஜய் சேதுபதியும், மற்றொரு கடவுள் ரமேஷ் திலக்கும்.

அந்த வாய்ப்பை, அசோக் செல்வன் எப்படிப் பயன்படுத்திக் கொண்டார்? அவர்களுக்கு விவாகரத்து கிடைத்ததா? என்பது மீதிக்கதை.

நண்பியை, மனைவியாகக் காதலுடன் பார்க்க முடியாமல் தடுமாறும் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அசோக் செல்வன். ரித்திகா சிங்கை அவர் முத்தமிடச் சென்று, திடீரென சிரிப்பது போன்ற சின்னச் சின்ன இடங்கள் ரசிக்க வைக்கின்றன. ரித்திகா சிங்கின் இன்னொரு முகத்தைத் தெரிந்துகொண்டு, அவருக்காக உருகும் இடத்தில் ஸ்கோர் செய்கிறார். ஒட்டுமொத்தமாக நடிப்பில் இன்னும் கொஞ்சம் மெருகேற்றியிருந்தால், இன்னும் கூட படத்தைக் கொண்டாடியிருக்கலாம்.

கணவனான நண்பனுடன் ரொமான்ஸ் செய்ய முயன்று, ‘ஃபோர்ஸ் பண்ண வேண்டாம். அதுவா நடக்கும்போது பார்த்துக்கலாம்’ என எதார்த்தைப் புரிந்துகொள்ளும் அனு கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார் ரித்திகா சிங். அவர் வசன உச்சரிப்பு – டப்பிங்கில் சிறிய சொதப்பல் இருந்தாலும், உணர்வுகளை அப்படியே முகத்தில் கடத்தி, வசனமே தேவையில்லை என்பதுபோல கதாபாத்திரத்தின் நிஜத்தன்மையை உணர்த்தியிருக்கிறார்.

மீராக்காவாக (மீரா அக்கா) வாணி போஜனின் இயல்பான நடிப்பு ரசிக்க வைக்கிறது. முதல் படத்திலேயே பாராட்டத்தக்க விதத்தில் நடித்துள்ளார். ஷா ராவின் நடிப்பு கொஞ்சம் எரிச்சலாக இருந்தது என்றாலும், அதுதான் அவர் இயல்பு என்பதால் பொறுத்துக்கொள்ள முடிந்தது.

கடவுளாக நடித்துள்ள விஜய் சேதுபதி, தன் வழக்கமான/இயல்பான நடிப்பால் கவர்கிறார். அவருடன் துணைக் கடவுளாக வரும் ரமேஷ் திலக்கும் தன் பங்கை சரியாகச் செய்துள்ளார். நல்லவேளை, இருவருக்கும் கடவுள் வேஷம் போட்டுக் கடுப்பேற்றாமல், சாதாரண மனிதர்களைப் போல இயல்பாக நடிக்கவைத்துள்ளனர். கவுதம் வாசுதேவ் மேன்ன் திரைப்பட இயக்குனராகவே ஒரேயொரு காட்சியில் வந்துபோகிறார்.  எம்.எஸ்.பாஸ்கர், கஜராஜ், சந்தோஷ் பிரதாப், ஆகியோரும் கதாபாத்திரத்துக்குத் தேவையானதைத் தந்துள்ளனர்.

லியோன் ஜேம்ஸ் இசையில் பாடல்கள் எதுவும் மனதில் ஒட்டவில்லை. ஆனால், பின்னணி இசை மூலம் படத்தின் உணர்வுகளைப் பார்வையாளனுக்குக் கடத்தியுள்ளார். விது அய்யண்ணா ஒளிப்பதிவு, உறுத்தாவண்ணம் அமைந்துள்ளது. குறிப்பாக, மழைக் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை மெதுவாக நகரும் காட்சிகள், பார்வையாளனை சோர்வடைய வைக்கின்றன. ஒருவரை இன்னொரு கோணத்தில் பார்க்கும்போது, நிச்சயம் அவரைப் பற்றிய நமது கருத்துகள் மாறும். ஆனால், எதார்த்தம் வேறாக இருக்கையில், இன்னொரு கோணத்தில் பார்த்ததை வைத்து எதார்த்த வாழ்க்கையை வாழ நினைக்கும் படத்தின் அடிநாதம் இடிக்கிறது.

வாணி போஜனுடன் அசோக் செல்வன் பழகுவதைத் தவறாக நினைத்து சந்தேகப்படுகிறார் ரித்திகா சிங். சின்ன வயதில் இருந்தே ஒன்றாகப் பழகும் நண்பனை, இந்த அளவுக்குத்தான் புரிந்து வைத்துள்ளாரா ரித்திகா சிங்? என்ற கேள்வி எழுகிறது.

அசோக் செல்வனின் நடிப்பு ஆசை தெரிந்து, முதல் பாதியில் அதைப்பற்றிப் பேசாமல், தன்னுடைய கம்பெனிக்கே ரித்திகா சிங் வேலைக்கு வரச் சொல்லும் இடமும் இடிக்கிறது. வாணி போஜன் முதன்முதலில் ‘பப்’பில் அசோக் செல்வனைச் சந்திக்கும்போது, ரித்திகா சிங், ஷா ரா இருவரிடமும் பேச மாட்டார். அவர்களிடம் ஒரு ‘ஹாய்’ கூட சொல்ல மாட்டார். ஒரே பள்ளியில் படித்து, ஒன்றாகக் கலை நிகழ்ச்சிகளிலும் அவர்களும் பங்கேற்றபோது, அசோக் செல்வனை மட்டும் அவர் நினைவு வைத்திருந்தது எப்படி? என்ற கேள்விக்கும் பதில் தரவில்லை அறிமுக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து.

ரித்திகா சிங்கை ‘நூடுல்ஸ் மண்டை’ எனச் செல்லமாக அழைத்துவரும் அசோக் செல்வன், அவரின் இன்னொரு விதமான குணநலன்களை அறிந்து, ‘உனக்கு கர்லி ஹேர் (சுருட்டை முடி) அழகா இருக்கு’ என்பார். அப்படி இந்தப் படம் சில இடங்களில் நூடுல்ஸ் மண்டையாகவும், சில இடங்களில் அழகான கர்லி ஹேராகவும் இருக்கிறது.

குறைகளைத் தவிர்த்துப் பார்த்தால், காதலர்கள் ஜோடியாகச் சென்று பார்த்து மகிழத்தக்க படம்!