கீழடியில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்க நிதி ஒதுக்கிடு: பொதுமக்கள் ‘கேக்’ வெட்டி கொண்டாட்டம்

கீழடியில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்க தமிழக பட்ஜெட்டில் 12.21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதை வரவேற்று கீழடிவாழ் பொதுமக்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை 5 கட்டங்களாக அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது.

முதல் 3 முறை மத்திய தொல்லியல் துறையும், 4-வது மற்றும் 5-ம் கட்ட அகழாய்வினை தமிழக தொல்லியல் துறையும் நடத்தியது.

இதில், அகழ்வாராய்ச்சியின் முடிவில் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தொன்மையான தமிழர்கள் பயன்படுத்திய தங்க ஆபரணங்கள், மண்பாண்ட பொருட்கள், சுடுமண் உருவம், சுடுமண் மனித முகம், தமிழி எழுத்து பொறித்த பானை ஓடு, சுடுமண் காதணி உள்ளிட்ட 15,500 தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் தொன்மையான நாகரிகங்களை அறியும் வகையிலான இதுவரை கிடைக்கப்பெற்ற 15.500 பொருட்களை காட்சிப்படுத்துவதற்காக கீழடியில் சர்வதேச தரத்தில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதனையேற்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் 12.21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார்.

அதன்படி இன்றைய தமிழக பட்ஜெட்டில் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க 12.21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள அக்கிராம மக்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கீழடியில் கேக் வெட்டியும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்தனர்.