சம்மன் அனுப்பியும் ஆஜராகாத ராமமோகன ராவ் தனியார் மருத்துவமனையில் தஞ்சம்!

வருமான வரித்துறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திடீர் உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளது இன்று (சனிக்கிழமை) தெரியவந்துள்ளது.

முன்னதாக, பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரரும், தொழிலதிபருமான சேகர் ரெட்டியின் வீடு, அலுவலகம் என 8 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 8-ம் தேதி சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் காட்டப்படாத ரூ.144 கோடி பணம், 178 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின்பேரில், அவரது கூட்டாளிகள், நண்பர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்ந்து தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த பி.ராமமோகன ராவின் அண்ணா நகர் வீடு, தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலக அறை, அவரது மகன் விவேக்குக்கு சொந்தமான திருவான்மியூர் வீடு, ஆந்திராவில் உள்ள அவரது மனைவி ஹர்சினியின் பெற்றோர் வீடு, உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் என மொத்தம் 14 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 21-ம் தேதி 25 மணி நேரம் சோதனை நடத்தினர்.

ராம மோகன ராவ் வீட்டில் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள தங்கம், ரூ.30 லட்சம், அவரது மகன் விவேக் வீட்டில் இருந்து பணம், 10 கிலோ தங்கம், வைர நகைகள், பல கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து, தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து ராமமோகன ராவ் விடுவிக்கப்பட்டார்.

சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், விசாரணையில் கிடைத்த தகவல்கள் அனைத்தையும் வருமான வரித்துறை அதிகாரிகள் அறிக்கையாக தயாரித்துள்ளனர். சேகர் ரெட்டி குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள்தான் முதலில் விசாரணை தொடங்கினர். அதன் பின்னர்தான், சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவினர் வழக்கு பதிவு செய்து சேகர் ரெட்டி மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்களை கைது செய்தனர். ராமமோகன ராவ் விவகாரத்திலும் அதே பாணி கடைபிடிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, ராமமோகன ராவ், அவரது மகன் விவேக், நண்பர்கள் உள்ளிட்டவர்களும் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

ராமமோகன ராவின் அண்ணா நகர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, அவர் பாதுகாப்பாக வைத்திருந்த ரகசிய டைரி ஒன்று சிக்கியுள்ளது. அதில் பல முக்கிய தகவல்களை அவர் எழுதி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. ஆளும் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகள், முக்கியப் பொறுப்பில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் என பல பிரமுகர்களின் பெயர்கள் அந்த டைரியில் உள்ளதாக தகவல் பரவிவருகிறது.

அவர்கள் அனைவரும் ராம மோகன ராவுடன் ஒரு வலைப் பின்னல் போல செயல்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் அதில் இருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. எந்த வகையில் அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது? பரஸ்பரம் அவர்கள் எவ்வளவு லாபம் அடைந்தார்கள் என்ற விவரங்களையும் ராமமோகன ராவ் விளக்கமாக அதில் எழுதி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இது சம்பந்தமாக அவர்களிடையே ஏற்கெனவே நடந்துள்ள தொலைபேசி உரையாடல்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

படிப்படியாக அவர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்த வியூகம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த காலக்கட்டத்தில் என்னென்ன உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன? அதனால், ஆதாயம் அடைந்தவர்கள் யார் யார்? என்பது குறித்த விசாரணையும் தொடங்கியுள்ளது கவனிக்கத்தக்கது.