”இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் ‘சாத்தானின் பிள்ளைகள்” என்று சாடிய சீமானுக்கு  தலைவர்கள் கண்டனம்!

“இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் சாத்தானின் பிள்ளைகளாக மாறி விட்டார்கள்” என்று சாடிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை பதிவுசெய்து வருகிறார்கள்.

மணிப்பூர் இனக்கலவரத்தைக் கண்டித்து நேற்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:

”நாம் நினைத்துக் கொண்டுள்ளோம் இஸ்லாத்தையும் கிறிஸ்துவத்தையும் ஏற்றுக்கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று. ஆனால், அவர்கள் சாத்தானின் பிள்ளைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. சும்மா போய் தேவாலயத்தில் தேவரே வாரீர் வாரீர் என்று பாடிவிட்டு, கடைசியில் யார் யாருக்கோ நாட்டை கொடுத்து விட்டார்கள்.

இந்த நாட்டில் நடந்திருக்கும் அநீதி அக்கிரமங்களுக்கு பெரிய பொறுப்பேற்க வேண்டியதே இஸ்லாமியர்களும், கிறிஸ்துவ மக்களும்தான். திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் 18 விழுக்காடு வாக்குகளை போட்டுப் போட்டு இந்த நாட்டை தெருவில் போட்டவர்கள் இவர்கள்தான்” என்று பேசினார்.

சீமானின் இந்த பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பிரமுகர்களும் எதிர்ப்புத் தெரிவித்து தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் வன்னியரசு தனது ட்விட்டர் பக்கத்தில் ”மணிப்பூரில் நடப்பது பாஜகவின் இந்துத்துவ இனப்படுகொலை. முஸ்லீம் கிறித்தவர்களுக்கு எதிரான திட்டமிட்ட இனப்படுகொலை. இதற்கு பொறுப்பேற்க வேண்டியது பாஜக அரசா? முஸ்லீம் – கிறித்தவர்களா? திரு.சீமானின் இந்த கருத்து RSS கருத்தே” என்று குறிப்பிட்டு உள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் கனகராஜ் ட்விட்டரில், சீமான் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்களுக்கு எதிராக பேசிய வீடியோவை பகிர்ந்த,. “மணிப்பூர் வன்முறை வெறியாட்டங்களைக் ‘கண்டித்து’ நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சீமான் 50 நிமிடம் பேசியிருக்கிறார். அதில் அவர் மணிப்பூர் வன்முறைகளைக் கண்டித்து பேசியதை கண்டுபிடிப்போருக்கு பாராட்டுகள்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.