“திருச்சி சிவா கன்னத்தில் 4 முறை அறைந்தேன்”: சசிகலா புஷ்பா ஒப்புதல்!

டெல்லி விமான நிலையத்தில், தி.மு.க எம்.பி. திருச்சி சிவாவின் கன்னத்தில் அ.தி.மு.க எம்.பி. சசிகலா புஷ்பா ஓங்கி நான்கு முறை அறைந்த சம்பவம், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியிலிருந்து சென்னைக்கு செல்ல தி.மு.க எம்.பி திருச்சி சிவாவும், அ.தி.மு.க எம்.பி சசிகலா புஷ்பாவும் இன்று பிற்பகல் விமான நிலையத்துக்கு வந்தனர். அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒருவொருக்கொருவர் ஒருமையில் பேசிக் கொண்டனர். அப்போது திருச்சி சிவா கன்னத்தில் சசிகலா புஷ்பா ஓங்கி நான்கு முறை அறைந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விமான நிலைய காவலர்கள் இருவரையும் சமரசப்படுத்தினர். இதனால் இருவரும் பயணத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் டெல்லியில் உள்ள தங்களது வீடுகளுக்கு சென்றுவிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து சசிகலா புஷ்பாவிடம் விகடன் டாட்காம் நிருபர் தொலைபேசியில் கேட்டதற்கு, “விமான நிலையத்தில் நான் வந்தபோது, அங்குள்ள காவலர்களிடம் அம்மாவையும் (ஜெயலலிதா) தமிழக அரசையும் சிவா கிண்டலடித்துக் கொண்டு இருந்தார். இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. அவரது கன்னத்தில் ஓங்கி நான்கு முறை அறைந்தேன். இதற்குள் அங்குள்ளவர்கள் இருவரையும் விலக்கி விட்டனர். இந்த சம்பவத்துக்குப் பிறகு டெல்லியில் உள்ள என்னுடைய வீட்டை அடித்து நொறுக்கியுள்ளதாக எனக்கு தகவல் வந்தது. இதனால் பயணத்தை ரத்து செய்துவிட்டு அவர்களுக்கு பதிலடி கொடுக்க உள்ளேன்” என்றார். இதற்கான ஆடியோ:-

https://youtu.be/J8oBa_0UkWE

திருச்சி சிவாவிடம் பேசியபோது, எதிரில் வந்த தன்னை திடீரென்று சட்டையைப் பிடித்து ஒரேயொரு முறைதான் கன்னத்தில் அறைந்தார் என்றும், நான்கு முறை இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

திருச்சி சிவாவுக்கும், சசிகலா புஷ்பாவுக்கும் இடையில் அரசியலுக்கு அப்பாற்பட்டு, வேறு ஏதோவொரு பிரச்சனை இருக்குமோ என்ற சந்தேகத்தை இச்சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.