“தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது”: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

“தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கிவிட்டது” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியிருப்பதாவது:

ஈரப்பதம் மிகுந்த காற்று கிழக்கு திசையில் இருந்து வீசியதால் தென் இந்திய பகுதிகளான தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. தற்போது தென்மேற்கு பருவமழை முற்றிலுமாக முடிவடைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று முன்தினம் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது. இதனால், தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் இன்று நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் 18 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. நுங்கம்பாக்கம் 16 செ.மீ, பாபநாசம், பாண்டிச்சேரி, அண்ணா பல்கலைக்கழகம், சீர்காழி, பரங்கிப்பேட்டையில் தலா 13 செ.மீ, தூத்துக்குடி, வேதாரண்யம், ராமநாதபுரம் 12 செ.மீ, காஞ்சிபுரம், தூத்துக்குடி துறைமுகம் 11 செ.மீ, நாங்குநேரி, சேத்தியா தோப்பு தலா 10 செ.மீ மழை பெய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.