மத்திய அமைச்சருக்கு விஜயகாந்த் ‘பெப்பே’: பா.ஜ.க. அதிர்ச்சி!

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சனிக்கிழமை மாலை சென்னை வந்தார். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜவடேகர், ‘‘நாடாளுமன்ற தேர்தலின்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகளின் தலைவர்களுடன் கூட்டணி தொடர்பாக பேசுவதற்காக சென்னை வந்துள்ளேன். கூட்டணி தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை” என்றார்.

பின்னர் அவர் விமான நிலையம் அருகே தனியார் நட்சத்திர ஹோட்டலில், இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம், அனைத்திந்திய முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் சதக்கத்துல்லா, இந்திய மக்கள் கட்சித் தலைவர் தேவநாதன் ஆகியோரை சந்தித்துப் பேசினார். அத்துடன் அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து சமீபத்தில் விலகிவந்துள்ள அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமாரையும் சந்தித்துப்பேசினார். இந்த உதிரிக்கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் பா.ஜ.க. கூட்டணியில் இணைந்து சட்டப் பேரவைத் தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாக கூறினார்கள்.

இதனால் உற்சாகமடைந்த ஜவடேகர், இன்று மதியம் தே.மு.தி.க. தலைவர் விஜகாந்தை சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின்போது பா.ஜ.க. சார்பில் அதன் தமிழகத் தலைவர் தமிழிசை செளவுந்திரராஜன், மோகன்ராஜுலு, தே.மு.தி.க. சார்பில் பிரேமலதா ஆகியோர் உடன் இருந்தனர்.

இச்சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஜவடேகர், விஜயகாந்துடனான சந்திப்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும், பயனுள்ள வகையில் இருந்ததாகவும் தெரிவித்தார். மேலும், தே.மு.தி.க.வுடன் பா.ஜ.க. கூட்டணியா என்பது குறித்து அடுத்த வாரம் தெரிய வரும் என்றார். விஜயகாந்துடன் பேசியது குறித்து பிரதமர் மோடி மற்றும் கட்சித் தலைவர் அமித்ஷாவுடன் ஆலோசித்துவிட்டு மீண்டும் விஜயகாந்தை சந்திப்பேன் என்றும் ஜவடேகர் தெரிவித்தார்.

ஜவடேகர் பேட்டியளித்த அரைமணி நேரத்திற்குள் தே.மு.தி.க.விடமிருந்து வெளியான அறிக்கை, பா.ஜ.க.வினரை தூக்கி வாரிப்போடச் செய்வதாக அமைந்தது. அந்த அறிக்கையில்,விஜயகாந்தை மத்திய அமைச்சர் ஜவடேகர் மரியாதை நிமித்தம் சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்துடன் ஜவடேகர் கூட்டணி குறித்து பேசியதாக தகவல் வெளியான நிலையில், அதை அவசர கதியில் தே.மு.தி.க. மறுக்கும் வகையில் இந்த அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது பா.ஜ.க.வுடன் கூட்டு சேர விஜயகாந்துக்கு சம்மதம் இல்லாததையே காட்டுவதாகத் தெரிகிறது. விஜயகாந்த் தரப்பு தி.மு.க. மற்றும் மக்கள் நலக் கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதை பா.ஜ.க. அமைச்சருடனான பேச்சுவார்த்தை பற்றிய செய்தி கெடுத்துவிட கூடாது என்ற கவனத்தோடு தே.மு.தி.க. இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.