சிறைக்கு அனுப்ப நீதிபதி மறுப்பு: நக்கீரன் கோபால் விடுதலை

இன்று காலை புனே செல்ல சென்னை விமான நிலையம் வந்த நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபாலை, தமிழக ஆளுநரின் துணைச் செயலர் அளித்த புகாரின்பேரில், திருவல்லிக்கேணி உதவி ஆணையர் தலைமையிலான போலீஸார் கைது செய்து சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையம் அழைத்து வந்தனர். அங்கு அவரிடம் விசாரணை செய்தபின், அல்லிக்குளம் எழும்பூர் 13-வது குற்றவியல் நீதிமன்ற நடுவர் கோபிநாத் முன் ஆஜர்படுத்தினர்.

நக்கீரன் கோபால் சார்பில் ஆஜரான அவரது வழக்கறிஞர் பி.டி.பெருமாள் தனது வாதத்தில், 124-பிரிவு சட்டத்தின் கீழ் நக்கீரன் கோபாலை கைது செய்ய முகாந்திரம் இல்லை என்றும், பிரசுரித்த கட்டுரையில் ஆளுநரை எந்த வகையிலும் கோபால் மிரட்டவில்லை என்றும், கட்டுரை மூலம் ஆளுநர் பணியில் தலையிடுவது என்ற புகாரை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் வாதம் செய்தார். ஏப்ரல் மாதம் வெளியான கட்டுரைக்கு இப்போது வழக்குப் போட்டு கைது செய்வது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

‘தி இந்து’ குழுமத்தின் தலைவரும், மூத்த பத்திரிகையாளருமான என்.ராம் ஊடகங்கள் சார்பில் ஆஜராகி வாதாடினார். இதையடுத்து குற்றவியல் நடுவர் கோபிநாத், பிரிவு 124-ன் கீழ் நக்கீரன் கோபால் மீது போடப்பட்ட வழக்கில் அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட முடியாது என மறுத்து விட்டார்.. இதனையடுத்து நக்கீரன் கோபால் விடுவிக்கப்பட்டார்.

விடுவிக்கப்பட்டு வெளியில் வந்த நக்கீரன் கோபால் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கருத்து சுதந்திரத்தின் பக்கமும், பத்திரிகை சுதந்திரத்தின் பக்கமும் நீதிமன்றம் நின்றதை வரவேற்கிறேன். ராஜ்பவன் பற்றி ஒரு செய்தி எங்களுக்கு வந்தது. அதைப் புலனாய்வு செய்து நக்கீரன் பத்திரிகையில் வெளியிட்டோம். அச்செய்திக்காக என்னைக் கைது செய்திருப்பதாக இங்கு வந்தவுடன் தான் எனக்கு தெரியும். காலையில் என்னைக் கைது செய்தபோது, எதற்காக பண்ணினார்கள் என்று எனக்கு தெரிவிக்கவில்லை.

புனே செல்வதற்காக என்னோடு சேர்த்து 3 பேர் விமான நிலையத்திற்குச் சென்றோம். போர்டிங் பாஸ் வாங்கிவிட்டு மீதி இருவரை உட்கார வைத்துவிட்டு நான் ரெஸ்ட் ரூமிற்குச் சென்றேன். என் பின்னால் காவல்துறை ஏசி விஜயகுமார் வந்தார். ‘என்ன விஷயம்’ என்றவுடன் ‘துணை ஆணையர் உங்களைப் பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்’ என்றார்.

‘என்னங்க புதுசா இருக்கே’ என்று கேட்டேன். அப்படியே தாமதமாக்கிக்கொண்டே இருந்தார்கள். அடையாறு துணை ஆணையர் வரும்போது அவருடன் 15 காவலர்கள் வந்தார்கள். ‘உங்களை விசாரிக்க அழைத்துச் செல்கிறோம்’ என்று என் போனைப் பிடுங்கினார்கள். ‘என்ன, போனை எல்லாம் பிடுங்குகிறீர்கள்’ என்றவுடன், ‘இல்ல சார், பேசிக்கிட்டே கீழே போவோம்’ என்றார்.

‘என்னோடு வந்தவர்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்கள் புனே செல்ல வேண்டும். அவர்களைத் திரும்ப வரச் சொல்லுங்கள்’ என்றேன். அதற்கு அனுமதிக்கவே இல்லை. அதுதான் மிகவும் மன உளைச்சலைக் கொடுத்தது. என்னை யாருடனும் பேசவே அனுமதிக்கவில்லை. நேராக சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தார்கள்.

அங்கும் என்ன வழக்கு என்று எதுவுமே சொல்லவில்லை. எழும்பூர் நீதிமன்றம் வந்தபிறகு தான் என்ன வழக்கு போட்டிருக்கிறார்கள் என்றே தெரியும். ஆளுநரைப் பற்றி செய்தி போட்டதற்கு தான் கைது செய்திருப்பதாகச் சொன்னார்கள்.

ஒரு செய்தி கிடைத்தவுடன், அதனைப் புலனாய்வு செய்து மக்களிடையே கொண்டு போய் சேர்க்கும் பணியைத்தான் செய்தோம். அதில், ஏதேனும் தவறு இருந்தால் மறுப்பு சொல்லியிருக்கலாம். இல்லையென்றால் வெவ்வேறு வழிகள் உள்ளன. ஆனால், எவ்வித விவரமும் சொல்லாமல், கொலை குற்றவாளியைக் கைது செய்வது போல் கைது செய்து நீதிமன்றம் கொண்டு வந்தார்கள். உண்மை எப்போதுமே நிற்கும்.

என்னைப் பார்க்க வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை இன்னும் விடுதலை செய்யாமல் வைத்திருக்கிறார்கள். அது மிகவும் வருத்தத்தைக் கொடுக்கிறது. வைகோவுக்கு நன்றி.

கோஷா மருத்துவமனையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், ஆ.ராசா உள்ளிட்ட அனைவரும் வந்து சந்தித்தார்கள். ‘கருத்து சுதந்திரம் பக்கம் நிற்போம்’ என்று ஆறுதல்படுத்திவிட்டுப் போனார்கள்.

எழும்பூர் நீதிமன்றத்தில் திருமாவளவனும், முத்தரசனும் சந்தித்தார்கள். அவர்கள் கடந்த 4 மணி நேரமாக வழக்கு நடக்கும்போது என்னுடனே இருந்தார்கள். இந்து ராம் என் மீது போடப்பட்டிருந்த 124-வது பிரிவை எதிர்த்துப் பேசினார். நீதிபதி கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவர் பேசினார்.

கருத்து சுதந்திரத்திற்கும், பத்திரிகையாளர்களுக்கும் இந்தத் தீர்ப்பு ஒரு ஆறுதலைக் கொடுக்கும். கைது செய்யப்பட்டதிலிருந்து அச்செய்தியைக் கொண்டுபோய் சேர்த்த அனைத்து ஊடகங்களுக்கும் நன்றி.

கடுமையான வாதங்களை எனக்காக முன்வைத்த பி.டி.பெருமாள், இளங்கோ, சிவக்குமார் என அனைவருமே இந்த வழக்கிற்காக திறமையாக வாதாடினார்கள். அவர்களை நக்கீரன் வணங்குகிறது. பத்திரிகை சுதந்திரம், கருத்து சுதந்திரம் ஆகியவற்றுக்கு ஒரு நம்பிக்கை கிடைத்திருக்கிறது” என்றார் நக்கீரன் கோபால்.

இந்த விவகாரத்தில், நீதிமன்ற நடுவர் முன் ஊடகங்கள் சார்பில் ஆஜராகி வாதாடியது ஏன் என்பது குறித்து இந்து குழுமத் தலைவரும், மூத்த பத்திரிகையாளருமான என்.ராம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆளுநர் பதவியைத் தவறான சர்ச்சையில் புகுத்தக்கூடாது என்பதற்காகவும், 124 பிரிவு தவறான முன்னுதாரணமாக ஆகிவிடக் கூடாது என்பதற்காகவும் நீதிமன்ற நடுவர் முன் நேரில் ஆஜராகி வாதாடினேன்.

124-க்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை. 124 சட்டம் பற்றி கேள்விப்பட்டதே இல்லை. 124.ஏ பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அது தேசத்துரோக வழக்கு ஆகையால் இந்த வழக்கு புதியதாக உள்ளது. இதற்கும் வழக்குக்கும் சம்பந்தமே இல்லை.

வாதத்தில் மூன்று பாயிண்டுகளை வைத்தேன். முதலாவதாக, 124-வது பிரிவை அனுமதித்தால் இது அபாயகரமான விஷயம். இதை அனுமதித்தால் தமிழகத்துக்கு மட்டுமல்ல, இந்தியா முழுவதுக்குமே மோசமான முன்னுதாரணமாக மாறிவிடும் என்று சொன்னேன்.

இரண்டாவதாக, நீதிபதி என்னிடம், ‘இது போன்ற போட்டோக்களை பிரசுரிக்கலாமா?’ என்று கேட்டார். நான் சொன்னேன், ‘நான் போட்டிருக்க மாட்டேன். ஆனால் பலபேர், பல விதமான ஜர்னலிசத்திலே இது இருக்கிறது. ஆனால், அதற்கெல்லாம் பாதுகாப்பு என்னவென்றால், 19(1)a சட்டப்பிரிவு ஆகும். நியாயமான கட்டுப்பாடுகள் இருந்தாலும், இது எந்தக் கட்டுப்பாட்டிலும் வராது. இதைவிட நிறைய பல ஆங்கிலப் பத்திரிகைகளில் படங்களைப் பிரசுரித்துள்ளார்கள், என்னால் காட்ட முடியும்’ என்று சொன்னேன்.

மூன்றாவதாக, ஆளுநரின் பதவியை இந்த சர்ச்சையில் புகுத்துவது சரியாக இருக்காது. இது மோசமாக இருக்கும் என்ற பாயிண்டைச் சொன்னேன். நான் வழக்கறிஞர் அல்ல. ஒரு ஜர்னலிஸ்டாக வாதம் செய்தேன். நான் நீதிமன்ற நடுவரை வாழ்த்துகிறேன் என் வாதத்தை அனுமதித்ததற்கு.

ஒருவேளை நிபுணர் என்கிற முறையில் என் வாதத்தைக் கேட்டிருப்பார். அங்கு பல நிபுணர்கள் இருந்தார்கள். நான் உடன் இணைப்பு மட்டுமே. வழக்கறிஞர் பி.டி.பெருமாள், அவரது குழுவினர் வலுவாக வாதாடினார்கள்.

இது முதன் முறை. எனக்குத் தெரிந்து 124-வது பிரிவை ஒரு இதழுக்கு எதிராக அமல்படுத்தியுள்ளனர். அதனால் தான் இது மோசமான முன்னுதாரணமாக மாறிப் போய்விடும் என இதை எதிர்த்து வாதம் செய்தேன்.

இவ்வாறு ‘இந்து’ என்.ராம் தெரிவித்தார்.

#