“பொறுப்பேற்ற நாள்முதல் சர்ச்சை: தமிழக ஆளுநரை டிஸ்மிஸ் செய்க!” – முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடுமையான சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது மிகவும் கவலைக்குரியது. உயர் பொறுப்பு வகிக்கும் ஆளுநர், தமிழகத்தில் தாம் பொறுப்பேற்ற நாள் முதல் சர்ச்சைக்குரியவராக உள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்று ஒன்று இருக்கும் நிலையில் ஆய்வு செய்ய தனக்கு அதிகாரம் உள்ளது எனக் கூறி, மாவட்டம் தோறும் சென்று ஆய்வு மேற்கொண்டார். கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்ட நிலையில், தான் ஆய்வு செய்யச் செல்லவில்லை, மனு வாங்கச் செல்கிறேன் என்று தெரிவித்தார்.

பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம் செய்ததில் பல கோடி லஞ்சம் பெறப்பட்டது தனக்கு மிகுந்த கவலை அளிப்பதாக தெரிவித்தார். தற்போது, தான் அவ்வாறு குறிப்பிடவில்லை, பொதுவாக கேள்விப்பட்டதை தெரிவித்தேன் என விளக்கமளித்து, துணைவேந்தர்கள் நியமனத்தில் நடைபெற்ற ஊழல் முறைகேடுகளை மூடி மறைத்து, தவறு செய்தவர்களைக் காப்பாற்ற முயல்கின்றார்.

காவல்துறை மீதும், நீதிமன்றம் குறித்தும் தரம் தாழ்ந்த முறையில் பேசியதற்காக பல்வேறு பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டு காவல்துறையால் தேடப்படும் நபர் என அறிவிக்கப்பட்ட ஹெச்.ராஜாவை ஆளுநர் மாளிகையில் சந்தித்து உரையாடுகின்றார்.

நிர்மலா தேவி விவகாரத்தில் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தை நக்கீரன் இதழ் வெளியிட்டுள்ளது. அச்செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கும் செய்தியாக உள்ளது. அச்செய்திகளை வெளியிட்டதற்காக, ஆளுநர் தனது அதிகாரத்தை மிக தவறான முறையில் பயன்படுத்தி நக்கீரன் ஆசிரியர் கோபாலை கைது செய்து, கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார். தொடர்ந்து சர்ச்சைக்கு ஆளாகி வரும் ஆளுநர், அவர் வகிக்கும் மிக உயர்ந்த பொறுப்பிற்கு மிகப் பெரும் இழிவு ஏற்படக் காரணமாகியுள்ளார்.

ஆளுநர், உயர் பொறுப்புக்குரிய கவுரவத்தைக் காக்கும் விதமாக அவர் தாமாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்திடல் வேண்டும், அல்லது அவரை நியமனம் செய்த குடியரசுத் தலைவர், அவரைப் பதவி நீக்கம் செய்து, உயர் பொறுப்புக்குரிய கவுரவத்தைக் காத்திட வேண்டும்” என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

 

Read previous post:
0a1b
சிறைக்கு அனுப்ப நீதிபதி மறுப்பு: நக்கீரன் கோபால் விடுதலை

இன்று காலை புனே செல்ல சென்னை விமான நிலையம் வந்த நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபாலை, தமிழக ஆளுநரின் துணைச் செயலர் அளித்த புகாரின்பேரில், திருவல்லிக்கேணி உதவி

Close