“மக்களின் முதல்வர்” ஆனார் ஓ.பி.எஸ்!

ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5ஆம் தேதி மரணம் அடைந்தார். அன்று இரவே ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக ஆளுநர் மாளிகையில் பதவியேற்றார்.

ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த டிசம்பர் 29ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் அடுத்த பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். அவர் டிசம்பர் 31-ல் அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

முதல்வர் பொறுப்பையும் சசிகலா ஏற்க வேண்டும் என சில அமைச்சர்களும், அதிமுக நிர்வாகிகளும் வெளிப்படையாகவே கோரிக்கை வைத்து வந்தனர். கட்சியும், ஆட்சியும் ஒருவரிடமே இருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி, சசிகலாவை முதல்வராக்கும் முயற்சி நடந்தது.

இந்நிலையில், இன்று (ஞாயிறு) பிற்பகல் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலாவை தேர்வு செய்யும் தீர்மானத்தை ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். இதையடுத்து, சசிகலா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

முன்னதாக, தமிழக முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். இது தொடர்பாக ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு அவர் ராஜினாமா கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.

அதில், ”தனிப்பட்ட காரணங்களுக்காக முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன். எனது ராஜினாவை ஏற்றுக்கொள்ள வேண்டும். எனது தலைமையிலான அமைச்சரவையையும் விடுவிக்க வேண்டும்” என்று ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு சுமார் 60 நாட்கள் மட்டுமே ஓ.பி.எஸ். முதலமைச்சராக இருந்திருக்கிறார் என்றாலும், இந்த 60 நாட்களில் அவர் ஜெயலலிதாவை போல் அல்லாமல், தானொரு வித்தியாசமான முதல்வர் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.

பொதுவாக ஜெயலலிதா பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமலும், செய்தியாளர்களை சந்திக்க பயந்து கொண்டும், தன்னை ஒரு மர்ம மனுஷி போல் பொய்யாக காட்டிக்கொள்வார். அவர் போல் இல்லாமல் ஓ.பி.எஸ். காட்சிக்கு எளியோனாக இருந்தார். பொதுவெளியில் எங்கு செய்தியாளர்கள் சந்தித்தாலும் முகம் சுளிக்காமல் பேட்டி கொடுத்தார். மு.க.ஸ்டாலின் உட்பட எதிர்க்கட்சி தலைவர்கள் யார் சந்திக்க விரும்பினாலும் அவர்களுக்கு நேரம் ஒதுக்கினார். எதிர்க்கட்சியை எதிரிக்கட்சியை போல் பாவிக்காமல், அதனுடன் இணக்கமான உறவு வைத்து அரசை நடத்திச் சென்றார். வார்தா புயல் சென்னையை புரட்டிப் போட்டபோது, புயல் வீசிக்கொண்டிருந்தபோதே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்றார். சென்னை குடிநீர் பஞ்சத்தை போக்க, ஆந்திராவுக்கு நேரில் சென்று முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்துப் பேசி, தண்ணிர் திறந்துவிட ஏற்பாடு செய்தார். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் வரலாற்று சிறப்பு மிக்க போராட்டம் நடத்தியபோது (இப்போராட்டத்தின் இறுதியில் போலீசாரின் அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டது என்ற விமர்சனம் உள்ளது, எனினும்), போராட்டத்தின் வீச்சை புரிந்துகொண்டு, ஐந்தே நாட்களில் ஜல்லிக்கட்டு விளையாட்டை அனுமதிக்கும் சட்டத்தை நிறைவேற்றினார்.

இப்படி ஜெயலலிதா பாணியிலிருந்து முற்றிலும் வேறுபட்டு செயல்பட்டுவந்த ஓ.பி.எஸ்., தற்போது “தனிப்பட்ட காரணங்களுக்காக” ராஜினாமா செய்வதாக கூறியிருந்தாலும்,. முதல்வராக வேண்டும் என்ற பேராசையில் இருக்கும் சசிகலாவின் நெருக்குதல் காரணமாகவே அவர் ராஜினாமா செய்திருக்கிறார் என்பது அனைவரும் அறிந்தது தான்.

இதனால், அ.தி.மு.க.வினர் மத்தியில் மட்டுமல்ல, எதிர்கட்சியினர் மத்தியிலும் இன்று மிகுந்த அனுதாபத்தையும், மரியாதையையும் சம்பாதித்துள்ளார் ஓ.பி.எஸ். எனவே, சசிகலாவின் பேராசை காரணமாக முதல்வர் பதவியை இழந்துள்ள ஓ.பி.எஸ்., தற்போது மெய்யான “மக்களின் முதல்வர்” ஆக கவனம் பெற்றுள்ளார்.