“2024 மக்களவை தேர்தலிலும் திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடரும்”: மல்லிகார்ஜுன கார்கே பேச்சு

”2024ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலிலும் திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடரும்” என்று சென்னையில் நடந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் இன்று (01.03.2023) மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில், மாவட்டச் செயலாளரும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன் மு.க.ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்தியும் வெள்ளி செங்கோல் வழங்கியும் கவுரவித்தார். தொடர்ந்து, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசு வழங்கினார்.

விழாவில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளில், அவர் நீண்ட ஆயுள், உடல்நலத்தை பெறவும், தமிழக மக்களுக்காக நீண்ட ஆயுளுடன் தொடர்ந்து பணியாற்றவும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவர் பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரின் கொள்கை வாரிசாக உள்ளார்.

திமுகவும், காங்கிரஸூம் கொள்கை ரீதியாக ஒன்றிணைந்திருக்கிறது. 2004, 2009 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை தேர்தல்களின் வெற்றிக்கும், 2006, 2021 சட்டப்பேரவை தேர்தல்களின் வெற்றிக்கும் திமுக – காங்கிரஸ் கூட்டணி வழிவகுத்தது. 2024 மக்களவை தேர்தல் வெற்றிக்கு நமது கூட்டணி தொடரும். அதனை வலுப்படுத்த, ஸ்டாலின் பிறந்தநாளில் அடித்தளம் அமைக்க வேண்டும்.

ஒன்றிய பாஜக அரசின் தோல்வியால் 23 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர். அக்கட்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சமூகங்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துகிறது. ஆனால் அதற்கு தமிழகம் ஒரு அங்குலம் கூட இடம் தராது. பாஜக அரசு, நீதித்துறை, தேர்தல் ஆணையம் உள்ளிட்ட முகமைகளை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள விரும்புகிறது. அரசியலமைப்பு சட்டத்தை மாற்றவும் முயற்சிக்கிறது. அதை தடுக்க அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம்.

இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே பேசினார்.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பேசியதாவது:

தமிழகத்தின் வளர்ச்சிக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக பணியாற்றி வருகிறார். அவர், தான் ஒரு நாத்திகவாதியென வெளிப்படையாக அறிவித்துள்ளார். அதே நேரம், அவர் எந்த மத நம்பிக்கைக்கும் எதிரானவர் கிடையாது எனவும் தெளிவுபடுத்தியுள்ளார். சமூக நீதி, சமத்துவம் மற்றும் மறுமலர்ச்சிக்காக அவர் ஆற்றி வரும் பணிகள் பாராட்டுக்குரியவை.

ஸ்டாலின் பதவியேற்ற ஓர் ஆண்டுக்குள் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்இணைப்பு வழங்கும் திட்டம், உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், குறிப்பாக கொரோனா தொற்று பேரிடர் சமயத்தில் அதைக் கட்டுப்படுத்த சிறப்பாக பணியாற்றியதோடு மக்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார். சமூக நீதியையும், அனைவருக்கும் சமமான நல்லாட்சியை வழங்கவும், தேசிய அளவில் அரசியலில் உயர்ந்த இடத்தை எட்டவும் நான் அவரை வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அகிலேஷ் யாதவ் பேசினார்.

பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பேசியதாவது:

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மட்டுமின்றி பீகார் மாநிலத்தின் முதல்வர் நிதிஷ் குமாருக்கும் இன்று தான் பிறந்தநாளாகும். இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். திமுக தலைமையில் தமிழகத்தில் சமூக நீதி கட்டிக்காக்கப்பட்டு வருகிறது. அத்தகைய மாநிலத்தில், சமூகநீதி கொள்கை கொண்ட கட்சிகள் சந்திக்கும் நாளாக இன்று அமைந்து இருக்கிறது. சமூக நீதிக்கு எதிராக பாஜக செயல்பட்டு வருகிறது. எனவே, நாடு முழுவதும் சமூகநீதி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவையுள்ளது.

சமூகநீதியை போதிக்கும் தமிழகத்தை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும். தற்போது நாட்டின் மிகப்பெரும் பிரச்சினைகளாக வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் இருக்கிறது. பாஜக ஆட்சியில் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது. அறிவிக்கப்படாத அவசரநிலை பிரகடனம் அமலில் இருப்பது போலவே இந்த ஆட்சி இருக்கிறது. அதனால் பாஜகவுக்கு எதிராக அனைத்து கட்சிகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவர வேண்டும். நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த இந்தியாவே ஸ்டாலினை எதிர்நோக்கியுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Read previous post:
0a1a
வீட்டின் மூலையில் ஒரு சமையலறை வேண்டுமா?

1. வீட்டின் மூலையில் ஒரு சமையலறை வேண்டுமா? வேண்டாம், ஏனெனில் 'சலிப்பூட்டும் சமையலறை வேலைகளில் இருந்து பெண்களை விடுதலை செய்ய வேண்டும்' என்று மாமேதை லெனின் கூறியிருக்கிறார்.

Close