தாமிரபரணி வழக்கு: கோக், பெப்சி நிறுவனங் களுக்கு சாதகமாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
பன்னாட்டு நிறுவனங்கள் குளிர்பானம் தயாரிக்க தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கான தடையை நீக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தாமிரபரணி ஆற்றில் இருந்து கோகோ கோலா மற்றும் பெப்சி நிறுவனங்கள் தண்ணீர் எடுக்க தடை கோரி பரமசிவம் மற்றும் ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் எம்எல்ஏ எம்.அப்பாவு ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
“நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆறு வற்றாத ஜீவநதியாகும். நெல்லை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் முப்போகம் விளையும் விளைநிலங்களுக்கு நீராதாரமாகவும் பயன்பட்டு வருகிறது.
இந்நிலையில், நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட்டில் கோகோ கோலா நிறுவனத்துக்கு குடிநீர் மற்றும் குளிர்பானம் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க 30.1.2004-ல் 31.54 ஏக்கர் நிலம் 99 ஆண்டு குத்தகைக்கு வழங்கப்பட்டது. இந்நிறுவனம் தாமிரபரணி ஆற்றில் இருந்து ரூ.37.50-க்கு ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீதம் தினமும் 9 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது.
தற்போது பெப்சி குளிர்பான தொழிற்சாலைக்கு 99 ஆண்டு குத்தகைக்கு 36 ஏக்கர் நிலமும், தாமிரபரணியில் இருந்து ரூ.37.50-க்கு ஆயிரம் லிட்டர் வீதம் தினமும் 15 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கவும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கோடையில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும். பிசான பருவ சாகுபடிக்கு தேவைப்படும் தண்ணீர் கிடைக்காமல் விவசாயம் நடைபெறாத நிலை ஏற்படும்.
இதனால் பெப்சி நிறுவனத்துக்கு குளிர்பானம் மற்றும் மினரல் வாட்டர் தயாரிக்க தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் வழங்கக் கூடாது என தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” என மனுக்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
குளிர்பான ஆலை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “தாமிரபரணியில் இருந்து வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை மட்டுமே பயன்படுத்துகிறோம். இதற்காக ஆட்சியரிடம் முன் அனுமதி பெற்றுள்ளோம். சிப்காட் வளாகத்தில் உள்ள பல்வேறு ஆலைகளும் தாமிரபரணி ஆற்று நீரையே பயன்படுத்துகின்றன. அப்படியிருக்க எங்கள் மீது மட்டும் வழக்கு தொடர்ந்திருப்பதில் உள்நோக்கம் இருக்கிறது” என நிறுவன தரப்பு வாதத்தை முன்வைத்திருந்தார்.
இந்த மனுக்கள் இன்று (வியாழக்கிழமை) நீதிபதிகள் செல்வம், கலையரசன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், “தாமிரபரணியில் இருந்து முறையாக அனுமதி பெற்றே குளிர்பானம் தயாரிக்கப்படுகிறது. அதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் உள்நோக்கம் இருக்கிறது. எனவே, குளிர்பானம் தயாரிக்க தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கான தடை கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன” எனத் தெரிவித்தனர்.
இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால், குளிர்பான நிறுவனங்கள் தாமிரபரணியிலிருந்து தண்ணீர் எடுப்பதற்கான தடை நீங்கியிருக்கிறது.