வீட்டின் மூலையில் ஒரு சமையலறை வேண்டுமா?

1. வீட்டின் மூலையில் ஒரு சமையலறை வேண்டுமா?
வேண்டாம், ஏனெனில் ‘சலிப்பூட்டும் சமையலறை வேலைகளில் இருந்து பெண்களை விடுதலை செய்ய வேண்டும்’ என்று மாமேதை லெனின் கூறியிருக்கிறார்.
2. வீட்டின் மூலையில் ஒரு சமையலறை வேண்டுமா?
வேண்டாம். ‘பெண்களின் கைகளில் இருந்து கரண்டிகளைப் பிடுங்கி விட்டுப் புத்தகத்தைக் கொடுங்கள்’ என்று தந்தை பெரியார் கூறி இருக்கிறார்.
3. வீட்டின் மூலையில் ஒரு சமையலறை வேண்டுமா?
வேண்டாம். ஒரு பெண் தன்னுடைய 24 மணி நேரத்தில் குறைந்தது பத்து மணி நேரத்தைச் சமையல் அறையிலேயே கழிக்கிறாள் அல்லது உணவு சார்ந்த எண்ணங்களிலேயே அவளுடைய நேரம் கழிகிறது.
4. வீட்டின் மூலையில் ஒரு சமையலறை வேண்டுமா?
வேண்டாம். சமூக சமையலறையின் மூலம் அனைவருக்குமான உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து விட முடியும். அதில் வயதானவர்கள், நோயாளிகள் என்று பிரித்துச் சமையல் செய்து விட முடியும்.
5. வீட்டின் மூலையில் ஒரு சமையலறை வேண்டுமா?
வேண்டாம். தனித்தனியே சமையலறை, சமையல் பொருட்கள், சமையலுக்கான பாத்திரங்கள், அதற்கான நேரம், அதன் விளைவாக நேர்கிற சமூகப் பிரச்சனைகள் (உப்பில்லை உறைப்பில்லை) என்று செலவு செய்வதைக் கணக்கிட்டுப் பார்க்கும்போது சமூகச் சமையல் அறையில் இவற்றில் எல்லாம் ஏராளமாக மிச்சப்படுத்த முடியும்.
6. வீட்டின் மூலையில் ஒரு சமையலறை வேண்டுமா?
வேண்டாம். சமூக சமையலறை என வரும்பொழுது அத்துணைப் பெண்களும் கல்வி கற்பதற்கும் பணி செய்வதற்கும் தங்களுக்கான சுய பொருளாதாரத்தை ஏற்படுத்திக் கொள்வதற்குமான வாய்ப்புகள் உருவாகும்.
7. வீட்டின் மூலையில் ஒரு சமையலறை வேண்டுமா?
வேண்டாம். வீடு தோறும் உள்ள சமையலறைகளை நூலகமாக மாற்ற முடியும். மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கும் பெண்கள், புத்தகங்களை வாசிக்கும்போதே அவர்கள் மதம் சார்ந்த சடங்குகளில் இருந்தும் மூடப் பழக்க வழக்கங்களில் இருந்தும் விடுதலை பெறுவார்கள்.
8. வீட்டின் மூலையில் ஒரு சமையலறை வேண்டுமா?
வேண்டாம். பெண்களின் பங்களிப்பின்றிச் சமூக விடுதலையோ, பொருளாதார விடுதலையோ அடைந்து விட முடியாது. சமையலறை ஒரு சிறையாக, சமையல் வேலைகள் அவர்களைக் கட்டிப் போடும் சங்கிலிகளாக இருக்கும் வரை நாம் சமூக விடுதலையைப் பற்றி கனவு காண்பது கூட இயலாது.
9. வீட்டின் மூலையில் ஒரு சமையலறை வேண்டுமா?
வேண்டாம். எல்லா மதங்களும் பெண்களை அடக்கி வைப்பதிலேயே தங்களுடைய முழு சக்தியையும் செலவழித்துக் கொண்டிருக்கின்றன. சாதித் தூய்மை, மத நம்பிக்கை, சடங்குகளின் வழியாக அனைத்து மூட நம்பிக்கைகளையும் பாதுகாப்பது, குடும்ப உறுப்பினர்களின் உடல் நலத்தைப் பேணுவது என்று எல்லாவற்றிற்கும் பெண்களைப் பொறுப்பாக்குவது என்று இந்தச் சமூகம் இன்னமும் பெண்களை சமையலறைக்குள் சிறைப்படுத்துவது ஏற்கத்தக்கதல்ல.
10. வீட்டின் மூலையில் ஒரு சமையல் அறை வேண்டுமா?
வேண்டாம். இப்போது நவீன முதலாளித்துவம் பெரு நகரங்களில் தன்னுடைய தேவைக்காகச் சமையல் வேலைகளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகப் பெண்களை விடுதலை செய்து கொண்டிருக்கிறது. ஆனால் அதனுடைய நோக்கம் சமூகம் சார்ந்ததல்ல. மக்களைச் சுரண்டுகிற இன்னொரு புதிய வடிவமாகவே ஆயத்த உணவுத் தயாரிப்புகளை வீடுகளிலேயே கொண்டு வந்து கொடுக்கிற ஏற்பாடுகளைச் செய்கின்றது. ஆனால் அவற்றிற்கு மக்களின் சுகாதாரம் பற்றியோ ஆரோக்கியம் பற்றியோ எந்த அக்கறையும் கிடையாது. மற்றுமொரு சுரண்டல் வடிவமாகவே அது திகழ்கிறது. ஆனால், சமூக சமையல் அறையின் மூலமாக சுகாதாரம், ஆரோக்கியம், தனி நபர் உடல் நலன்கள் எல்லாவற்றையும் பேணிப் பாதுகாக்கும் அனைத்துவித ஏற்பாடுகளையும் செய்ய முடியும்.
11. வீட்டின் மூலையில் ஒரு சமையலறை வேண்டுமா?
வேண்டாம். இருண்டு , அழுக்கடைந்து, எண்ணெய்க்கறை படிந்து, சிறிய குறுகிய சமையலறைக்குள்ளே எப்போதும் பாத்திரங்களுடனும் சமையலறைப் பொருட்களுடனும் பேசிக்கொண்டே வாழ்நாளைக் கழிக்கும் பெண்களின் உடல் நலத்தையும் மன நலத்தையும் சமையலறையை அகற்றுவதன் மூலம் மட்டுமே மீட்டெடுக்க முடியும்.
இனி வீடுகளில் பெண்களும் சமைக்க வேண்டாம்; ஆண்களும் சமைக்க வேண்டாம். இனி சமூகம் சமையலுக்கான பொறுப்பைத் தன் கைகளில் எடுத்துக் கொள்ளட்டும்.
-Udhaya Sankar