பாலாவின் / இளையராஜாவின் ‘தாரை தப்பட்டை’ பாடல்கள் – விமர்சனம்

இளையராஜாவின் ஆயிரமாவது திரைப்படம் + பாலாவின் திரைப்படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ராஜா நிச்சயம் ஏமாற்றவில்லை.

நாட்டார் இசைதான் அவரது துவக்க மற்றும் அழுத்தமான அடையாளம் என்பதால் ‘தாரை தப்பட்டைகள்’ கிழிந்து தொங்க வேண்டாமா’ என்று வடிவேலு சொல்வது போல் தீம் பாடல்களில் சுழன்று சுழன்று அடித்திருக்கிறார். Hero intro theme- துவக்கத்திலேயே களை கட்டி விடுகிறது. வதன வதன வடிவேலனே வில் வரும் சற்று ஆண்மை கலந்த பெண் குரல் அத்தனை கனகச்சிதம்..

முதல் கவனிப்பில் என்னை ரொம்பவும் கவர்ந்தது. பாருருவாய பிறப்பற வேண்டும் –

மாணிக்க வாசகரின் திருவாசகப் பாடல்களுக்கு முன்பு இசையமைத்த திருப்தியை இன்னும் ராஜா அடையவில்லையோ என்னவோ, அது சார்ந்த ஏக்கத்தை தொடரும் வகையில் இந்த ஆல்பத்திலும் ஒரு திருவாசகப் பாடலுக்கு இசை.

பாருருவாய பிறப்பற வேண்டும் பத்திமையும் பெற வேண்டும்

சத்யபிரகாஷூம் சுர்முகியும் மிக அற்புதமாகப் பாடியிருக்கிறார்கள். பாடலின் துவக்க இசைத்துணுக்கே அத்தனை உன்னதமாக இருக்கிறது. வெளியில் அலைந்து ஓடியாடி விளையாடிய பிள்ளை வீட்டுக்குள் நுழைந்தவுடனே அவனை அடக்கி ஒடுக்கி பூஜையில் உட்கார வைப்பதைப் போல மனம் எத்தனை துள்ளலாகவும் விலகலாகவும் இருந்தாலும் இதைக் கேட்டவுடனேயே தன்னையும் அறியாமல் ஓரிடத்தில் குவிந்து ஒன்ற ஆரம்பிக்கிறது. இந்தப் பாடலை அப்படியே தூக்கி திருவாசகம் ஆல்பத்தில் சேர்த்து விடலாம் போல அத்தனை உன்னதம். இது போன்ற இசையைத் தருவதற்கு சமகால சூழலில் இந்த ஆசாமியை விட்டால் வேறு எவருமில்லை என்பதை மனச்சாட்சியோடு ஒப்புக் கொள்ள வேண்டும்.

***

அடுத்தது தாரை தப்பட்டை தீம்.

இதைக் கேட்கும் போது அமானுஷ்ய உணர்வும் தலைச்சுற்றலும் வரலாம். முள்ளும் மலரும் திரைப்படத்தில் ;ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ பாடலின் இடையிசையில் லேலே.. என்று ஒரு இடையிசை வரும். அதன் வனப்பு என்னை எப்போதுமே கவரும், பிரமிக்க வைக்கும். ஆனால் கேட்க கேட்க மிதமான தலைச்சுற்றல் வரும்.

அப்படியொரு உணர்வைத் தருகிறது இந்த தீம் இசை. பாலா ஏற்கெனவே சும்மாவே ஆடுவார். இப்படியொரு ரணகளமான இசையை எப்படிக் காட்சிப்படுத்துவார் என்பதை கற்பனிக்கவே பயமாகவும எதிர்பார்ப்புடன் கூடிய சுவாரசியமாகவும் இருக்கிறது.

***

இடரினும் என்றொரு பாடலை ராஜாவே எழுதியிருக்கிறார். துவக்கச் சொற்களைக் கேடடு ‘யாராவது இது மாணிக்க வாசகர் எழுதியது’ என்றால் கண்ணை மூடிக் கொண்டு நம்பி விடலாம் போல.. அத்தனை சுத்தமான தமிழ். அற்புதமாகப் பாடிய சரத் ஓரிடத்தில் கீதம்.. என்பதை க்க்கீதம்.. என்று அழுத்தமாக உச்சரிப்பது நெருடல். இளையராஜா முன்பு இசையமைத்த, மிகவும் புகழ் பெற்ற பாடலான ‘ஜனனி. ஜனனியில்…பக்தி பீடமும் நீ என்பதை பீட்டடடமும் என பாடியதை தவறு என்று பொதுவான விமர்சனம் எழுந்தது நினைவுக்கு வருகிறது.

மற்ற பாடல்கள் எல்லாம் ராஜாவின் வழக்கமான முத்திரைகளைக் கொண்டவை. சிலது ராமராஜன் பாடல்கள் போன்றவற்றில் கேட்டிருக்கலாம். இருந்தாலும் இடையில் பிரசன்னா, மானசி பாடிய ஆட்டக்காரி மாமன் பொண்ணு .. தனியாக கவனிக்கத்தக்க வகையில் வசீகரிக்கிறது.

இன்னும் சில முறை கேட்ட பிறகு விடுபட்டவற்றை எழுத முடியும்.

– சுரேஷ் கண்ணன்