“சுவாதியை கொன்ற குற்றவாளியை விரைவில் அறிவிப்பேன்!” – ராம்குமார் வழக்கறிஞர்

“சுவாதியை கொலை செய்தது யார் என்பது குறித்து தெரிய வந்துள்ளது. விரைவில் கொலையாளியை அறிவிப்பேன்”’ என்று ராம்குமார் வழக்கறிஞர் ராமராஜ் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், மென் பொறியாளர் சுவாதி, கடந்த மாதம் 24ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற வாலிபரை, காவல்துறையினர் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து  காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும், ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இதனிடையே, ராம்குமாரை அழைத்து வந்து ரத்த மாதிரி பரிசோதனையை, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் காவல்துறையினர் நடத்தினர். இதைத் தொடர்ந்து ராம்குமார் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், புழல் சிறையில் ராம்குமாரை அவரது வழக்கறிஞர் ராமராஜ் இன்று சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் ராமராஜ்,, “சுவாதியை கொலை செய்தது யார் என்பது குறித்து தெரிய வந்துள்ளது. விரைவில் கொலையாளியை அறிவிப்பேன். ராம்குமாரிடம் காவல்துறையினர் இன்று ரத்த மாதிரி சேகரித்தது சட்டத்திற்கு புறம்பானது. ராம்குமாரை குற்றவாளியாக்க ஒரே கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்துகிறார்கள். சுவாதி குறித்து காவல்துறையினர் முழுமையாக விசாரிக்கவில்லை. இந்த கொலை வழக்கில் சிபிஐ விசாரணை கேட்டு, வரும் 3ஆம் தேதியன்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய உள்ளேன்” என்று கூறினார்.