எழுத்தாளர் ஜெயமோகனின் மகன் அஜிதன் திருமண வரவேற்பு விழா: பிரபலங்கள் நேரில் வாழ்த்து!

தமிழ்த் திரையுலகில் நான் கடவுள், அங்காடித் தெரு, நீர்ப்பறவை, கடல், 6 மெழுகுவத்திகள், காவியத் தலைவன், பாபநாசம், சர்கார், 2.0, வெந்து தணிந்தது காடு, பொன்னியின் செல்வன், விடுதலை பாகம் 1 போன்ற படங்களுக்கு வசனம் எழுதி, திரைக்கதையிலும்  பங்களிப்பு செய்தவர் எழுத்தாளர் ஜெயமோகன்.

இவர் மணிரத்னம், ஷங்கர், பாலா, கௌதம் வாசுதேவ் மேனன், வஸந்த், ஏ.ஆர்.முருகதாஸ், வசந்தபாலன், சீனு ராமசாமி, வெற்றிமாறன் போன்ற முன்னணி இயக்குநர்களின் படங்களில் பணியாற்றியவர். மலையாளப் படங்களிலும் இவ்விதத்தில் பணியாற்றி  வருபவர்.

இப்போது இயக்குநர் ஷங்கரின் இந்தியன் 2, சீனு ராமசாமியின் இடிமுழக்கம் போன்ற படங்களில் பணிபுரிந்து வருகிறார்.

எழுத்தாளர் ஜெயமோகன் நாவல்கள், சிறுகதைகள், அரசியல், ஆன்மிகம், தத்துவம் என்று 150-க்கும் மேற்பட்ட படைப்புகளை எழுதி பல்வேறு விருதுகள் பெற்றவர். சுமார் 25 ஆயிரம் பக்கங்களில் இவர் எழுதிய வெண்முரசு நாவல் வாசகர்களிடம் புகழ்பெற்ற, உலகின் நீளமான தமிழ்ப் படைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்தாளர் ஜெயமோகன் -அருண்மொழி நங்கை தம்பதியரின்  மகன் அஜிதனுக்கும், கோவை B. ரமேஷ் -சுந்தரி தம்பதியரின் மகள் மீனாட்சி என்கிற தன்யாவுக்கும் கோவையில் திருமணம் நடைபெற்றது. இவர்களின் வரவேற்பு விழா சென்னை ஹயாத் ஓட்டலில்  24.02.2024 மாலை நடைபெற்றது.

இந்த வரவேற்பு விழாவில்  நடிகர்கள் சிவகுமார், விஜய் சேதுபதி, குமாரவேல், இயக்குநர்கள் மணிரத்னம், ஷங்கர், பாலா, வஸந்த், ஏ.ஆர். முருகதாஸ், கௌதம் வாசுதேவ் மேனன், லிங்குசாமி, வசந்தபாலன், மிஷ்கின், சீனு ராமசாமி, சுப்பிரமணிய சிவா, மித்ரன் ஜவஹர், சுகா, தனா, ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன், பொன்னியின் செல்வன் படப் பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன், இணை, துணை இயக்குநர்கள் உள்ளிட்ட ஏராளமான திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.

எழுத்தாளரும் மதுரை பாராளுமன்ற உறுப்பினருமான சு. வெங்கடேசன், கவிஞர்கள் மனுஷ்ய புத்திரன், ரவி சுப்பிரமணியன், எழுத்தாளர்கள் எஸ். ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, யுவன் சந்திரசேகர், அ.வெண்ணிலா, இரா.முருகன், பா.ராகவன், லட்சுமி சரவணகுமார்,  ஷாஜி,  சந்திரா தங்கராஜ், பத்திரிகையாளர்கள் அந்திமழை கா.அசோகன், ஆனந்த விகடன் நா.கதிர்வேலன், வழக்கறிஞர் ஆர்.சுமதி ,மொழிபெயர்ப்பாளர் லதா அருணாசலம், ஆட்சிப்பணி அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமான பல்துறை பிரபலங்களும் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.

விழாவுக்கு வருகை தந்தவர்களை எழுத்தாளர் அகரமுதல்வன், குறிஞ்சி பிரபா குழுவினர்  வரவேற்றனர்.

திருமணம் ஆகி இருக்கும் அஜிதன் தனது தந்தை ஜெயமோகனைப் போலவே ஓர் எழுத்தாளர்,  இரண்டு நாவல்களை எழுதி இருக்கிறார். அது மட்டுமல்ல,இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.