இலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்ச வெற்றி!

இலங்கையில் புதிய அதிபரைத் தேர்வு செய்யும் பொதுத்தேர்தல் நேற்று நடந்தது. 12 ஆயிரத்து 875 வாக்குப்பதிவு மையங்களில் காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. 80 சதவீத வாக்குகள் பதிவாகின. மொத்தமுள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் ஒரு கோடியே 20 லட்சம் மக்கள் வாக்களித்தனர்.

மொத்தம் 35 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் கோத்தபய ராஜபக்ச (முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் தம்பி), ஆளும் ஜனநாயக தேசிய கட்சி சார்பில் சஜித் பிரேமதாசா (முன்னாள் அதிபர் பிரேமதாசா மகன்) ஆகியோர் இடையேதான் கடும் போட்டி இருந்தது.

தேர்தல் முடிந்தபின் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் தொடக்கத்தில் இருந்தே கோத்தபய ராஜபக்சதான் முன்னிலை வகித்து வந்தார். தபால் வாக்குகள்தான் கோத்தபயவின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல் சிங்களர்கள் வசிக்கும் தெற்கு மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் பெரும்பகுதியான வாக்குகள் கோத்தபயவுக்கு கிடைத்தன.

0a1aஆனால், சஜித் பிரேமதாசாவுக்கு தமிழர்கள் அதிகம் வசிக்கும் கிழக்கு, வடக்கு மாவட்டங்களில் இருந்து 90 சதவீத வாக்குகள் கிடைத்தன. இந்தப் பகுதியில் கோத்தபயவுக்கு வெறும் 5 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தன. விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரை முன்நின்று நடத்தியவர் கோத்தபய ராஜபக்ச என்பதால், அவருக்கு தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்தது.

இந்நிலையில், தோல்வியை ஒப்புக்கொண்டுள்ள சஜித் பிரேமதசா வெளியிட்ட அறிக்கையில் “தீவிரமான தேர்தல் பிரச்சாரம், கடினமான போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. மக்கள் அளித்த முடிவை, தீரப்பை தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறேன்.வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சவுக்கு எனது வாழ்த்துக்கள். மிகவும் அமைதியாகத் தேர்தல் நடந்து முடிந்தது.

கடந்த 5 ஆண்டுகளாக ஜனநாயக ரீதியான பலன்களும், பல்வேறு சீர்திருத்தங்களும் செய்யப்பட்டன புதிய அதிபருக்கு நான் விடுக்கும் கோரிக்கை என்னவென்றால், ஜனநாயக அமைப்புகளை பாதுகாத்து, வலிமைப்படுத்தி, அதன் மாண்புகளைக் காப்பாற்றுங்கள். தேர்தலுக்குப்பின் நாட்டில் அமைதி நிலவட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.