“பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து பிரச்சினை செய்யக் கூடாது!” – உயர் நீதிமன்றம்

பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தக் கூடாது என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறினர்.

திருச்செந்தூர் காயமொழியைச் சேர்ந்த பாரதிய வியாபாரிகள் சங்க கூட்டமைப்பின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் வி.பி. சக்திவேல், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில்,

‘விநாயகர் சதுர்த்தியை ஒட்டி திருச்செந்தூர் மற்றும் மெய்ஞானபுரம் காவல் சரகப்பகுதியில் செப்டம்பர் 18-ல் 7 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யவும், அந்த சிலைகளை செப்டம்பர் 21-ல் ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்கவும் அனுமதி வழங்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ”பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து தேவையில்லாமல் சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடாது. சிலையைப் பாதுகாக்கும் பணியில் போலீஸார் இரவு பகலாக பணிபுரிய வேண்டியுள்ளது. இதெல்லாம் தேவையா?

ஒரு சாதாரண விஷயத்தை ஏன் இப்படி பெரிதாக்க வேண்டும். மனுதாரர் விநாயகர் சிலை வைக்க முடிவு செய்து இடங்களுக்கு அனுமதி கோரி போலீஸாரிடம் தனித்தனியாக மனு அளிக்க வேண்டும். அந்த மனுவை பரிசீலித்து போலீஸார் அனுமதி வழங்க வேண்டும். போலீஸார் விதிக்கும் நிபந்தனைகளை முறையாக பின்பற்ற வேண்டும்” என உத்தரவிட்டனர்.