“அரசு இறுதி வரை பிழை மட்டும் தான் செய்து கொண்டிருந்தது…”

மாணவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் மற்றும் பொது மக்களின் போராட்டம் வெற்றி போராட்டமாக மாறி மகிழ்ச்சியுடன் முடித்து வைப்பதற்கும், போராடும் இளைஞர்களை, மாணவர்களை வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபடுத்துவதற்கும் அரசுக்கு பல வாய்ப்புகள் இருந்தன. இருந்தும் காவல் துறையை வைத்தே அராஜகம் செய்து அமைதியான போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வர அரசுகளுக்கு எப்படி எண்ணம் வருகிறது என்றே தெரியவில்லை.

என்ன செய்து இருக்க வேண்டும்? என்னுடைய எண்ணங்கள்:

  1. அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன், அதன் நகலை பொது வெளியில் வைத்து, எந்த எந்த உட்பிரிவுகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று மக்களுக்கு தெரிவித்து இருக்க வேண்டும். அந்த நகலை மக்கள் புரிந்து கொள்ளுவதற்கும், போராடும் மாணவர்களுக்கும் போதிய அவகாசம் கொடுத்து இருக்க வேண்டும். (“அவசர சட்டம் போட்டாச்சு, நாளை காளைகள் துள்ளி குதித்து ஓடும்” என்று சொல்லுவதற்கு, இது அ.தி.மு.க. கட்சி போராட்டம் இல்லை)
  2. போராடும் மக்களும், மாணவர்களும் ஏற்றுக்கொண்ட பிறகு தான் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அறிவித்து இருக்க வேண்டும். இன்று காலை மெரீனாவிற்கு, காவல் துறை வந்து அவசர சட்டத்தை மாணவர்களிடம் கொடுத்து, நீங்கள் எல்லோரும் கலைந்து சென்று விடுங்கள் என்று சொல்வது அநியாயம். குறைந்தபட்சம் அவர்கள் கேட்ட 4 மணி நேர அவகாசத்தை கொடுத்து இருக்க வேண்டும்.
  3. அவசர சட்டத்தின் நகலை ஓய்வு பெற்ற நீதிபதிகள் சந்துரு, ஹரி பரந்தாமன் போன்றவர்களிடம் கொடுத்து அவர்களுடைய கருத்துக்களை பொது வெளியில் வைத்திருக்கவேண்டும். முடிந்தால் ஊடகங்களிடம் சொல்லி ஓய்வு பெற்ற நீதிபதிகளின் கருத்துக்களை ஒளிபரப்ப செய்து இருக்க வேண்டும்.
  4. மெரினா கடற்கரைக்கு போராடும் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகளை அனுப்பி இருக்க வேண்டும். முடிந்தால் அமைச்சர்களும் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி இருக்க வேண்டும். காவல்துறையை பேச்சுவார்த்தைக்கு அனுப்பியது இமாலய தவறு. மக்களுக்கு எப்பவுமே காவல் துறை மீது நம்பிக்கை இருந்தது கிடையாது.

5.இந்த நேரத்தில் சட்டமன்றத்திலும் அந்த சட்டம் நிறைவேறுவதற்கு வழிவகை செய்து, அதை முதல்வர் தொலைக்காட்சியில் தோன்றி மகிழ்ச்சியோடு அறிவித்து, மாணவர்களிடமும் மக்களிடமும், தான் ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு பொறுப்பு ஏற்பதாகவும், அப்படி நடைபெறாவிட்டால் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து விடுவதாகவும் சொல்லி மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்க வேண்டும்.

ஆனால் என்ன செய்தார்கள்? “தேச விரோதிகள் உட்புகுந்து விட்டார்கள்”, “இஸ்லாமிய தீவிரவாதிகள் இருக்கிறார்கள்”, “இந்திய இறையாண்மையை எதிர்ப்பவர்கள் இருக்கிறார்கள்”, “தேசிய கொடியை எரிக்கிறார்கள்” என்று முழு பொய்களை கட்டவிழ்த்து, 7 நாட்களாக மிக அமைதியாக நடைபெற்ற போராட்டத்திற்கு வன்முறை சாயம் பூசி முழுவதும் கலவர பூமியாக்கி இருக்கிறது தமிழக அரசு.

எத்தனை குடும்பங்கள், குழந்தைகள், பெண்கள், பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள் எவ்வளவு பெரிய நம்பிக்கையோடு இந்த களத்திற்கு வந்தார்கள்?

ஒட்டுமொத்தமாக அரசின் மீதும், ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி உள்ளது அரசின் இந்த அராஜகம்.

SUNDAR RAJAN

 # # #

(யார் இந்த SUNDAR RAJAN?

“அரசு இறுதிவரை பிழை மட்டும் தான் செய்து கொண்டிருந்தது. நீதியரசர் ஹரிபரந்தாமன் பேச்சுதான் களேபரங்களை கட்டுக்குள் கொண்டு வந்தது. ஆனால் அவரை அழைத்து வந்தது அரசு அல்ல. தனிப்பட்ட ஒருவரின் முயற்சியால்தான். அழைத்து வரப்பட்டார். அவர் வேறு யாரும் அல்ல, ‘பூவுலகின் நண்பர்கள்’ பொறியாளர் சுந்தர் ராஜன் அண்ணன் Sundar Rajan. இவர் உச்சநீதிமன்றத்தில் அணுக்கரு உலை சம்பந்தமாக வழக்கு தொடுத்து வழக்கு நடத்திவருபவர். கஷ்டப்பட்டு அவசர சட்டத்தின் பிரதியை ஐயா நீதியரசர் ஹரிபரந்தாமனிடம் சேர்த்து அமைதியை நிலைநாட்டியவர். மிக்க நன்றி.” – R..Sethoo Raman)