மெரினாவில் இன்றும் போராட்டத்தை தொடரும் இளைஞர்களின் கோரிக்கைகள்!

ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, நிரந்தர சட்டமாக நிறைவேற்றப்பட்டு விட்டதாலும்,  இச்சட்டம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹரி பரந்தாமன் அளித்த விரிவான விளக்கம் திருப்தி அளித்ததாலும், சென்னை மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கில் திரண்டிருந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்களில் பெரும்பாலோர், போராட்டத்தை கைவிட்டு நேற்று (23ஆம் தேதி) இரவு கலைந்து சென்றுவிட்டார்கள்.

எனினும், சில நூறு இளைஞர்கள் மட்டும் கலையாமல் மெரினாவில் இன்னும் தொடர்ந்து போராடி வருகிறார்கள். காளைகளுக்கு விதிக்கப்பட்டு  உள்ள தடையை  நீக்க மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும்,  அரசியலமைப்புச் சட்டத்தின் 9-வது அட்டவணையில் ஜல்லிக்கட்டு சட்டத்தைச் சேர்க்க வேண்டும் என்று கோரியும், போலீசார் நடத்திய அராஜக வெறியாட்டத்தை கண்டித்தும், அதற்கு நிவாரணம் தர வலியுறுத்தியும் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

இது குறித்து இப்போராட்டக்காரர்களில் ஒருவரான டாக்டர் நந்தகுமார் கூறுகையில், ‘நேற்று காலையில் இருந்து எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல், இங்கு இருந்தவாறே எங்களது போராட்டத்தை தொடர்கிறோம். எங்களது முக்கிய கோரிக்கையான, காளைகளுக்கு விதிக்கப்பட்டு  உள்ள தடையை  நீக்க மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும் என்பது எங்களது முக்கிய கோரிக்கை. இக்கோரிக்கை நிறைவேறாமல் இங்கிருந்து வெளியேற மாட்டோம்’’ என்றார்.

ஜான் என்பவர் கூறுகையில், ‘‘ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் வரும் வரை எங்களது போராட்டம் ஓயாது. இங்கு இருந்து வெளியே போகவும் மாட்டோம். அரசியலமைப்புச் சட்டத்தின் 9-வது அட்டவணையில் ஜல்லிகட்டு சட்டத்தைச் சேர்க்க வேண்டும். ஏனெனில், நீதிமன்றங்களின் மறுபரிசீலனைக்கு அப்பாற்பட்ட சட்டங்களைப் பற்றி விவரிப்பதுதான் 9-வது அட்டவணையாகும். தமிழ்நாட்டில் 69 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் சட்டம் 9-வது  அட்டவணையில் வைக்கப்பட்டுள்ளதால் தான், நீதிமன்றத்தால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதையே, ஜல்லிகட்டுக்கும் மத்திய அரசு செய்துதர வேண்டும். அப்படியிருந்தால் மட்டுமே இனி எந்த காலத்திலும் யாராலும் ஜல்லிகட்டுக்கு, தடைவிதிக்க முடியாத நிலை உருவாகும்” என்றார்..

வேலூர் கணேஷ் என்பவர் கூறுகையில், “அமைதியாக சென்றுகொண்டிருந்த மெரினா போராட்டதை போலீஸார் திசைதிருப்பி விட்டு விட்டனர். கலைந்து போக சிறிது நேரம் அவகாசம் கேட்டோம். அதற்குள் இளைஞர்களை விரட்டி அடித்தனர். ஆண்களுக்கு அடிபட்டதை பற்றி கூட நாங்கள் கவலைப்படவில்லை. ஆனால், பெண்களிடம் சிறிதும் இரக்கம் இல்லாமல் காட்டுமிராண்டித்தனமாக போலீஸார் நடந்துகொண்டார்கள். ஆண் போலீசார் நடந்து கொண்ட அத்துமீறல்களுக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். இப்போதுதான் பெண்கள் போராட்டக் களத்துக்கு வருகிறார்கள். அவர்களிடம் இப்படியா நடந்து கொள்வது? ஆண்கள் என்றால் எங்கே அடிபட்டிருக்கிறது என்று காட்டி நியாயம் கேட்க முடியும். ஆனால் பெண்களால் அப்படி முடியுமா? திருவல்லிக்கேணி கோஷா ஆஸ்பத்திரியில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்களை நேரில் சென்று பாருங்கள். அப்போது தெரியும் அவர்கள் படும் வேதனைகள். ஜல்லிக்கட்டுக்கு நியாயம் கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் ஓயாது. எங்களுக்கு தேவையான உணவுகளை, இங்குள்ள மக்கள் தந்து கொண்டிருக்கிறார்கள். மீனவ மக்களின் ஆதரவு எங்களை உற்சாகப்படுத்திக்கொண்டு இருக்கிறது. இந்தப் போராட்டத்தில் நிச்சயம் வெற்றி பெறுவோம்’’ என்றார்..

இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ள பெண் ஒருவர் கூறுகையில், “இந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் அரசு ரத்து செய்ய வேண்டும். இந்த ஜல்லிக்கட்டுக்காக போராடி, இறந்துபோனவர்கள் குடும்பத்துக்கு நஷ்டஈடும், அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் கொடுக்க வேண்டும். அதேபோல், போராட்டக்காரர்களின் சேதமடைந்த வாகனங்களுக்கு அரசு நஷ்டஈடு வழங்க வேண்டும். படுகாயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையும், நிவாரண உதவியும் வழங்கப்பட வேண்டும். இதை உடனே முதல்வர் பன்னீர்செல்வம் அறிவிக்க வேண்டும்” என்றார்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இவர்கள் கலைந்து செல்வதற்கு இன்று (24ஆம் தேதி) மாலை வரை போலீசார் கெடு விதித்துள்ளார்கள். அதன் பிறகும் கலையவில்லை என்றால், இவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்துவார்கள் என தெரிகிறது.

.

 

Read previous post:
0a
“அரசு இறுதி வரை பிழை மட்டும் தான் செய்து கொண்டிருந்தது…”

மாணவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் மற்றும் பொது மக்களின் போராட்டம் வெற்றி போராட்டமாக மாறி மகிழ்ச்சியுடன் முடித்து வைப்பதற்கும், போராடும் இளைஞர்களை, மாணவர்களை வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபடுத்துவதற்கும் அரசுக்கு

Close