“போலீசார் தீ வைக்கும் வீடியோ பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்”: கமல் பேட்டி!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல லட்சம் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், உலகே வியக்கும் வண்ணம் திரண்டு அறவழியில் நடத்திக் காட்டி வெற்றியை ஈட்டிய போராட்டம் குறித்தும், இதன் நற்பெயரை கெடுக்கும் வண்ணம் இறுதியில் போலீசார் நடத்திய வெறியாட்டம் மற்றும் அதனையடுத்து நடந்த மோதல் குறித்தும் நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

மாடுகளைக் கொல்லலாம், தவறில்லை; ஆனால் மாடுகளோடு விளையாடாதீர்கள் என்று பீட்டா சொல்கிறது. எதையும் தடை செய்ய வேண்டாம். முறைப்படுத்துங்கள். படமோ, காளைகளோ, எந்த வகையான தடைக்கும் நான் எதிரானவன்.

முன்பு நடந்தது கூட இந்தி மொழிக்கு எதிரான எதிர்ப்பல்ல. எங்கள் மீதான இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மோசமாகச் சித்தரிக்க வேண்டாம். அந்த இளைஞர்களால் நான் கவரப்பட்டேன்.

இப்போராட்டத்தில் எனது பெரிய கவலையே பெண்கள் மற்றும் குழந்தைகள் தான். காந்தியின் கனவு நிஜமானது. ஆரோக்கியமான, சந்தோஷமான நிர்பயாக்கள் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் உட்கார்ந்திருந்ததைப் பார்த்திருப்பீர்கள். இளைஞர்களின் போராட்டத்தில் அரசியல் சாயம் பூசப்படுவதை ஏற்க முடியாது.

சிலர் இதை தலைவனில்லாத இயக்கம் என கேலி செய்கிறார்கள். ஆனால் மக்களின் ஒருங்கிணைப்பைப் பாருங்கள். மக்களைத் தூண்டும் விதமாகத் தான் அனைவரும் ஜல்லிக்கட்டு குறித்து பேசினர். இந்த போராட்டமே அப்படித்தான் ஆரம்பமானது.

எம்ஜிஆர் நம்மிடையே இருந்திருந்தால் மெரினாவுக்கு வந்து போராட்டாக்காரர்களிடம் பேசியிருப்பார். முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் பேசினேன். அமைதியாக இருந்ததற்கு என்னிடம் நன்றி கூறினார். மக்களைத் தூண்டுமாறு நான் எதையும் பேசவில்லை என நினைக்கிறேன். நான் அமைதியாகவே இருந்தேன்.

போலீஸார் தீ வைக்கும் வீடியோவை பார்த்ததும் அதிர்ச்சியுற்றேன். நம்மை தெளிவுபடுத்த ஏதாவது ஒரு விளக்கம் தரப்படும் என நம்புகிறேன். இளைஞர்களில் மோசமானவர்கள் சிலர் இருந்தது போல காவல்துறையிலும் கெட்டவர்கள் இருக்கலாம்.

எல்லாமும் மாறி வருகிறது. நாமும் மாறி வருகிறோம். போராட்டக்காரர்கள் பல கோரிக்கைகள் எழுப்பினார்கள். குமுறல்களின் பட்டியல் அது. கேட்பது நம் கடமை. செய்தியாளர்களும் தமிழர்கள் தான். இந்தியர்கள் தான். அவர்கள் உரிய கேள்வியை உரியவர்களிடம் கேட்க வேண்டும்.

தமிழர்களின் பிரச்னை நம் பிரச்னை. இந்தியாவின் பிரச்னை நம் பிரச்னை. உலகத்தின் பிரச்னை நம் பிரச்னை. தமிழ்நாட்டை தனித் தீவாக மாற்றக் கூடாது.

நான் 1924-ல் பிறந்திருந்தால் காந்தியின் முன் உட்கார்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே ஒற்றுமை வேண்டும் என கேட்டிருப்பேன். நான் பாகிஸ்தானை வெறுக்க மாட்டேன் என்றுதான் சொன்னேன். எனக்கு அந்த எல்லைகளை அழிக்க வேண்டும். நாம் தான் அதை உருவாக்கினோம்.

ஜல்லிக்கட்டு, மரண தண்டனை என இரண்டு முக்கிய பிரச்சனைகளைப் பற்றி படமெடுத்த ஒரே நடிகன் நான்தான். எனக்கு தெரிந்த தொழிலான சினிமாவில் கவனம் செலுத்தவே உள்ளேன். அரசியலில் அல்ல. நடிகர் சங்கத்துக்கு நான் ஆலோசகர் இல்லை.

என்னைப் பின் தொடராதீர்கள். என்னால் உங்களை வழிநடத்த முடியாது. என்னை வழிநடத்தாதீர்கள். நான் உங்களைத் தொடர முடியாது. எல்லோரும் ஒன்றாக நடப்போம். எதையும் தடை செய்யாதீர்கள். ஒழுங்குபடுத்துங்கள்.

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.