கோ 2 – விமர்சனம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்களம் சூடு பிடித்திருக்கும் இந்த நேரத்தில், தமிழக முதலமைச்சரை கடத்தும் பரபரப்பான கதையம்சத்துடன் வெளிவந்திருக்கிறது ‘கோ 2’.

தமிழக உள்துறை அமைச்சராக இருக்கும் இளவரசு, அதிகாலையில் கடற்கரையோரம் உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கையில், முதலமைச்சர் பிரகாஷ்ராஜை யாரோ கடத்திவிட்டார்கள் என்று போன் வருகிறது. உடனே பதறித் துடிக்கும் அவர், முதலமைச்சரை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிடுகிறார். காவல்துறை அதிகாரியான ஜான் விஜய் தலைமையிலான குழு, சம்பவ இடத்துக்கு விரைகிறது.

முதலமைச்சர் கடத்தப்பட்ட சம்பவம் மீடியா மூலம் பொதுமக்களுக்குத் தெரிய வர, தமிழகம் முழுவதும் கலவரம் வெடிக்கிறது. தொலைக்காட்சி நிருபரான பாபி சிம்ஹாதான் முதலமைச்சர் பிரகாஷ்ராஜை துப்பாக்கி முனையில் கடத்தி வைத்திருக்கிறார். பாபி சிம்ஹாவின் பின்னணி என்ன? அவர் ஏன் முதலமைச்சரை கடத்தி வைத்திருக்கிறார்? என்ற கேள்விகளுக்கு விடை சொல்லுகிறது மீதிக்கதை.

தொலைக்காட்சி நிருபராக வரும் பாபி சிம்ஹா, தனக்கான கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார். தன் பிடியில் இருக்கும் முதலமைச்சருடன் இவர் நடத்தும் விவாதங்கள் ரசனையானவை. ஆனால், வழக்கம் போல இவர் ரஜினிகாந்த் பாணியில் முகபாவனைகள் காட்டுவதும், வசனங்கள் பேசுவதும் ஏமாற்றத்தைத் தருகிறது. இதே பாணியை இவர் தொடர்ந்தால், ரஜினிகாந்தாக அல்ல, நளினிகாந்தாகக்கூட ஆக முடியாது. சுதாரித்துக்கொள்ளுங்கள் பாபி சிம்ஹா!

தொலைக்காட்சி பெண் நிருபராக வரும் நிக்கி கல்ராணிக்கு இந்த படத்தில் பெரிய அளவில் வாய்ப்பு இல்லாவிட்டாலும், கொடுத்த கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்.

முதலமைச்சராக வரும் பிரகாஷ்ராஜ் படம் முழுக்க வருகிறார். தனது அனுபவ நடிப்பால் ரசிகர்களை எளிதாக கவர்கிறார். இளவரசுக்கு இப்படத்தில் பல திருப்பங்கள் நிறைந்த முக்கியமான கதாபாத்திரம். அதை அவர் சிறப்பாக செய்து ரசிக்க வைக்கிறார்.

பாலசரவணனுக்கும் இப்படத்தில் மிகப் பெரிய கதாபாத்திரம். இதுவரையிலான படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இவர், இப்படத்தில் ஒரு குணச்சித்திர கதாபாத்திரமாகவும் நடிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்.

சமூக சேவகராக வரும் நாசர் ஒரே காட்சியில் வந்தாலும் மனதில் நிற்கிறார். மனநிலை பாதிக்கப்பட்டவராக வரும் கருணாகரனின் நடிப்பு பிரமாதம். போலீஸ் அதிகாரியாக வரும் ஜான் விஜய் தனக்கே உரித்தான நக்கல் ஸ்டைலில் நடித்து கைதட்டல் பெறுகிறார்.

இயக்குனர் சரத் பழிவாங்கும் ஒரு கதையை வித்தியாசமான கோணத்தில் படமாக்கி இருக்கிறார். போரடிக்காமல் கதையை சாமர்த்தியமாக நகர்த்திச் சென்றிருக்கிறார்.

பிரகாஷ் ராஜும், பாபி சிம்ஹாவும் தொடக்க கட்டத்தில் பேசும் வசனங்கள் எல்லாம் இன்றைய அரசியல் நிலவரங்களை அப்பட்டமாக தோலுரித்து காட்டியிருக்கின்றன. எனினும், படத்தின் ஆரம்பத்தில் கலகக்காரனாக காட்டப்பட்ட பாபி சிம்ஹா, படத்தின் முடிவில் “கூன்முதுகர்”களாக இருக்கும் தமிழக அமைச்சர்களுக்கு இணையாகப் பணிந்து, முதலமைச்சருக்கு லாலி பாடுவது ஏமாற்றம் அளிக்கிறது.

இந்த படத்துக்கு ‘கோ 2’ என பெயரிட்டதைவிட, சேரனின் ‘தேசியகீதம் – பார்ட்2’ என பெயரிட்டிருந்தால் மிக மிகப் பொருத்தமாக இருந்திருக்கும்.

லியோன் ஜேம்ஸ் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. பிலிம் ஆர் சுந்தரின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

‘கோ-2’ – பார்க்கலாம்!