உன்னோடு கா – விமர்சனம்

நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன், குடும்பப் பாங்கான படமாக வெளிவந்திருக்கிறது ‘உன்னோடு கா’.

பிரபுவும் தென்னவனும் சிவலிங்க கிராமத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் குடும்பம்தான் ஊரிலேயே பெரிய குடும்பம். 5 தலைமுறைகளாக இவர்கள் குடுபத்திற்குள் பகை இருந்து வருகிறது. ஆனால், பிரபுவும் தென்னவனும் ஊருக்குள் பகையாளிகளாக இருந்துக் கொண்டு யாருக்கும் தெரியாமல் நெருங்கிய நண்பர்களாக பழகி வருகிறார்கள்.

இந்த கிராமத்தில் இருந்தால் நட்பாக பழக முடியாது என்ற காரணத்தால் பிரபுவும் தென்னவனும் சண்டை போடுவது போல் நடித்து சென்னை வந்து செட்டிலாகிறார்கள். சென்னையில் எதிரெதிர் வீட்டிலேயே குடியிருக்கும் இவர்கள் நல்ல நட்பாக பழகி வருகிறார்கள்.

இந்நிலையில், பிரபு-ஊர்வசியின் மகனான ஆரியும், தென்னவன் – ஸ்ரீரஞ்சனியின் மகளான மாயாவும் போட்டா போட்டி போட்டுக்கொண்டு வளர்கிறார்கள். வளர்ந்து பெரியவர்களான இவர்களுக்கு திருமணம் செய்து வைத்தால் குடும்ப பகையை தீர்த்து விடலாம் என்று பிரபுவும் தென்னவனும் நினைக்கிறார்கள். ஆனால், ஆரியும் மாயாவும் எலியும் பூனையுமாக சண்டை போட்டு கொண்டிருக்கிறார்கள்.

இதே சமயம், ஊரில் பிரபுவின் உறவினர்களும், தென்னவனின் உறவினர்களும் சண்டை போட்டுக்கொள்கிறார்கள். மேலும் தென்னவனை சந்திக்க அவரது உறவினர்கள் சென்னைக்கு வருகிறார்கள். பிரபுவும் தென்னவனும் உறவினர்கள் வந்தால், சென்னையில் நாம் நட்பாக பழகி வருவது தெரிந்து விடும் என்ற பயத்தில் இருக்கிறார்கள். பிரபுவின் உறவினர்கள் தென்னவனை கடத்திக் கொண்டு ஊருக்கு சென்று விடுகிறார்கள். மேலும் பிரபுவுக்கு தகவலை சொல்லி ஊருக்கு அழைக்கிறார்கள்.

இரண்டு தரப்பு உறவினர்களும், குடும்ப பகை காரணமாக பிரபுவையும் தென்னவனையும் நேருக்கு நேர் மோதச் சொல்கிறார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் இவர்களில் யார் வென்றது? எப்படி இந்த பிரச்சனையை சமாளித்தார்கள்? ஆரி, மாயாவுக்கு திருமணம் நடந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தின் நாயகனாக நடித்திருக்கும் ஆரி, தான் நடித்த முந்தைய படங்களில் இருந்து இதில் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் மாயா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆரிக்கும், மாயாவுக்கும் இடையே காதல் காட்சிகள் இல்லாமல் மோதல் காட்சிகளை வைத்தே படமாக்கியிருக்கிறார்கள். இருவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து நன்றாகவே நடித்திருக்கிறார்கள்.

பிரபு- ஊர்வசி, தென்னவன் – ஸ்ரீரஞ்சனி ஆகியோர் நடிப்பும் படத்திற்கு பலம் சேர்ந்திருக்கிறது. மன்சூர் அலிகான், மனோ பாலா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அனைவரும் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

பல நட்சத்திரங்களை வைத்து குடும்ப பொழுதுபோக்கு படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஆர்.கே. நகைச்சுவையை மையமாக வைத்தே படம் நகர்கிறது. ஆனால், சிரிப்பதற்கு வாய்ப்பு குறைந்தளவே அமைந்திருக்கிறது. சுவாரஸ்யமான காட்சிகள் படத்தில் இல்லாதது வருத்தம்.

சத்யா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணியும் சிறப்பாக செய்திருக்கிறார். சக்தி சரவணனின் ஒளிப்பதிவு படத்திற்கு கை கொடுத்திருக்கிறது.

‘உன்னோடு கா’ – பொழுதுபோகும்!