தானா சேர்ந்த கூட்டம் – விமர்சனம்

1987ஆம் ஆண்டு மும்பை நகைக்கடையில், யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாத ‘ஒயிட் காலர் க்ரைம்’ சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. சுவாரஸ்யமான இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து, அக்ஷய் குமார், காஜல் அகர்வால், அனுபம் கெர் நடிப்பில், நீரஜ் பாண்டே இயக்கத்தில் ‘ஸ்பெஷல் 26’ என்ற இந்தி படம் 2013ஆம் ஆண்டு வெளியானது. ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்று, வசூலை வாரிக்குவித்த இந்த இந்திப் படத்தின் தமிழ் ரீமேக் தான் சூர்யா, கீர்த்தி சுரேஷ், கார்த்திக் உள்ளிட்டோர் நடிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ என்ற பெயரில் 2018ஆம் ஆண்டின் பொங்கல் பண்டிகைப் படமாக வெளிவந்திருக்கிறது.

உண்மைச் சம்பவம் நிகழ்ந்த அதே காலகட்டத்தில், 1980களின் பிற்பாதியில் கதை நடக்கிறது. சிபிஐ அலுவலகத்தில் எழுத்தராக பணிபுரிகிறார் தம்பி ராமையா. அவரது மகன் சூர்யாவும், நண்பர்களும் வேலையில்லாத் திண்டாட்டத்தில் சிக்கித் தவிக்கிறார்கள். போலீஸ் அதிகாரியாக ஆசைப்படும் நண்பர் கலையரசன், லஞ்சம் கொடுக்க இயலாமல் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்கிறார்.

சிபிஐ அதிகாரி வேலைக்கான இண்டர்வியூவுக்குப் போகிறார் சூர்யா. நேர்மையான அவரது அப்பா தம்பி ராமையா மீது செம காண்டில் இருக்கும் நேர்மையற்ற சிபிஐ தலைமை அதிகாரி சுரேஷ் மேனன், சூர்யாவுக்கு அந்த வேலை கிடைக்காதவாறு தடுத்துவிடுகிறார்.

இப்படி அயோக்கியத்தனம் புரையோடிக் கிடக்கும் அதிகார வர்க்கத்தை, அயோக்கியத்தனத்தின் மூலமே தூய்மைப்படுத்த வேண்டும் என்று வெகுண்டெழுகிறார் சூர்யா. அவர் ரம்யா கிருஷ்ணன், செந்தில், சத்யன் உள்ளிட்டோரை தன்னுடன் சேர்த்துக்கொண்டு, சிபிஐ அதிகாரிகள் போல நடித்து, சிபிஐ தலைமை அதிகாரி சுரேஷ் மேனனின் பெயரை தவறாக பயன்படுத்தி ‘போலி சோதனைகள்’ நடத்தி, செல்வந்தர்களிடமிருந்து பணத்தை கொள்ளையடிக்கிறார்.

சுரேஷ் மேனன் பெயரால் இக்கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுபவர் யார் என்பதை கண்டுபிடிக்க கார்த்திக் தலைமையில் சிபிஐ ஒரு குழுவை நியமிக்கிறது. கொள்ளை அடித்த பணத்தை சூர்யா என்ன செய்தார்? அவரை கார்த்திக் குழு கண்டுபிடித்ததா? என்பது மீதிக்கதை.

நாயகனாக வரும் சூர்யா ஃபிரஷ்ஷாக இருக்கிறார். அவரது தோற்றப் பொலிவும், நடிப்பும் கண்ணுக்கு விருந்தாக இருக்கிறது. கதாபாத்திரத்துக்கு தேவையான கச்சிதமான நடிப்பை வழங்கி, படம் முழுக்க ஆக்கிரமித்திருக்கிறார். இயக்குனர் ஹரி படங்களில் வருவது போல் செயற்கையாக ஆக்ரோஷம் காட்டாமல், இயல்பாகவும் கலகலப்பாகவும் அவர் நடித்திருப்பது சிறப்பு.

கீர்த்தி சுரேஷுக்கு சஸ்பென்ஸ் கலந்த குடும்பப் பாங்கான கதாபாத்திரம். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து அசத்தியிருக்கிறார்.

கார்த்திக், சுரேஷ் மேனன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோரின் நடிப்பு கவனத்தை ஈர்க்கிறது. செந்தில், சத்யன் காமெடி சிரிக்க வைக்கிறது.

ஆனந்த்ராஜ், தம்பி ராமையா, ஆர்.ஜே.பாலாஜி, கலையரசன், பிரம்மானந்தம், சிவசங்கர் மாஸ்டர், யோகிபாபு, நந்தா  உள்ளிட்டோர் தங்கள் பாத்திரம் உணர்ந்து தேவையான உறுதுணை நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

 ‘ஸ்பெஷல் 26’ இந்திப் படத்தை அப்படியே ரீமேக் செய்யாமல் கதை, திரைக்கதையில் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு சில மாற்றங்கள் செய்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். பழைய நாளிதழ்கள், கடைகளில் விறகப்படும் லாட்டரி சீட்டுகள், பெல்பாட்டம் போட்ட நாயகன் – நாயகியின் ஆடல் பாடல்கள், சில்க் சுமிதா, பழைய மவுண்ட் ரோடு இவற்றை வைத்து 1980களின் காலகட்டத்தைக் காண்பித்திருப்பது அருமை..

திறமையானவனுக்கு மரியாதை இல்லாதது, நீட் தேர்வு காரணமாக அனிதா தற்கொலை செய்துகொண்டது, தலித் அரசியல் என ஆங்காங்கே பஞ்ச் தெறித்திருக்கிறது. “ஒருத்தன் பணக்காரனா இருக்க ஒரு கோடி பேரை பிச்சைக்காரனா ஆக்குறானுங்க”’, “நெஞ்சுல நேர்மையும், செய்யுற செயல்ல நியாயமும் இருந்ததுன்னா நாம எதுக்குமே பயப்படத் தேவையில்லை’” என்பது போன்ற வசனங்கள் கவனிக்க வைக்கின்றன. எனினும், “நான் வெறும் ஆம்பள இல்லை, ஆம்பள சிங்கம்”, “இது சேர்த்த கூட்டம் இல்ல, தானா சேர்ந்த கூட்டம்” என்பன போன்ற வழக்கமான வக்கணை வசனங்களை தவிர்த்திருக்கலாம்,

தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம். அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் பட்டையை கிளப்பியிருக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு வலுசேர்க்கிறது.

தானா சேர்ந்த கூட்டம் – ரசிகர்களுக்கு சர்க்கரை பொங்கல்!