ஸ்கெட்ச் – விமர்சனம்

வன்முறை நிறைந்த கதைக்களம் என்றால் மதுரைக்கு அடுத்தபடியாக திரைப்பட இயக்குனர்கள் தேர்வு செய்வது வடசென்னையைத் தான். அந்த வகையில் விஜய்சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘ஸ்கெட்ச்’ ஒரு வடசென்னை திரைப்படம்.

வடசென்னையில் இரு சக்கர வாகனங்கள், கார்கள் ஆகியவற்றை தவணை முறையிலான கடனுக்கு விற்பனை செய்யும் சேட்டு ஹரீஷ் பெராடி. அவரிடம் வேலை பார்க்கிறார் நாயகன் விக்ரம். ஒழுங்காக தவணை கட்டாத கடனாளிகளிடமிருந்து, தனது கூட்டாளிகளான ‘கல்லூரி’ வினோத், ‘கபாலி’ விஷ்வநாத், ஸ்ரீமன் ஆகியோரின் உதவியுடன், வாகனங்களை ‘ஸ்கெட்ச்’ போட்டு தூக்கிவந்து சேட்டிடம் ஒப்படைப்பது விக்ரமின் வேலை.

இதுபோல் நாயகி தமன்னாவின் தோழியான பிரியங்காவின் இரு சக்கர வாகனத்தை ஸ்கெட்ச் போட்டு தூக்குகையில் தமன்னாவை பார்க்கும் விக்ரம், அவரது பிராமண வனப்பில் மயங்கி மனதை பறிகொடுக்கிறார். சிலபல சந்திப்புகள், தவறான புரிதல்கள் ஆகியவற்றுக்குப்பின் தமன்னாவும் விக்ரம் மீது காதல் கொண்டுவிடுகிறார்.

இதற்கிடையில், பிரபல ரவுடி பாபுராஜாவின் காரை, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஸ்கெட்ச் போட்டு தூக்குகிறார் விக்ரம். இதனால் விக்ரமும் அவரது கூட்டாளிகளும் பாபுராஜாவின் கோபத்துக்கு ஆளாகிறார்கள். இதனையடுத்து, விக்ரமின் கூட்டாளிகள் ஒருவர்பின் ஒருவராக கொலை செய்யப்படுகிறார்கள். ஆனால், இக்கொலைகளை பாபுராஜா செய்யவில்லை. எனில் வேறு யார்? விக்ரம் – தமன்னா காதல் என்ன ஆயிற்று? என்பது சஸ்பென்சும் விறுவிறுப்பும் நிறைந்த மீதிக்கதை.

காதல், ஆக்சன் என இரண்டிலும் கலந்துகட்டி விளையாடியிருக்கிறார் விக்ரம். இந்த வயதிலும் இளமை துள்ள ஒவ்வொரு ஃப்ரேமிலும் அசத்தியிருக்கிறார். இளைப்பது, கூன் போடுவது என உடலை வருத்திக்கொள்ளும் எந்த இம்சையும் தேவைப்படாத ஒரு கதாபாத்திரத்தில், படம் முழுக்க தாடி, கட்டம் போட்ட சட்டை என சிம்பிளாக வந்து அனாயசமாக நடித்து மனதை கொள்ளை கொள்கிறார். கையை விரித்து, அப்படியே விரல்களைச் சுருக்கி கண்ணடிக்கும் அவரது மேனரிசம் ‘ஜெமினி’ படத்தை நினைவூட்டினாலும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது.

நாயகியாக வரும் தமன்னாவின் அழகு இந்தப் படத்தில் கொஞ்சம் பூசினாற்போல் மெருகேறி இருக்கிறது. தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் காதலிக்கும் கடமையை கச்சிதமாக செய்து ஸ்கோர் பண்ணியிருக்கிறார். “உன்னை எனக்கு எவ்வளவு பிடிக்கும்னு, உன்கூட வாழ்ந்து காட்ட ஆசை” என உருகும்போது காதல் தேவதையாக கவருகிறார்.

சேட்டாக வரும் ஹரீஷ் பெராடி, விக்ரமின் மாமாவாக வரும் அருள்தாஸ், வில்லன்களாக வரும் ஆர்.கே.சுரேஷ், பாபு ராஜா ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். சூரி இப்படத்தில் இருக்கிறார் என்பதை தவிர அவரது கதாபாத்திரமும், காமெடியும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை.

விக்ரமை வைத்து ஒரு ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு படம் கொடுத்திருக்கிறார் இயக்குனர் விஜய்சந்தர். விக்ரம் ரசிகர்களுக்கு என்னென்ன பிடிக்கும் என்று யோசித்து, அவர்களை கவரும் வகையில் திரைக்கதை அமைத்திருக்கிறார். எந்த கொம்பனாலும் யூகிக்க முடியாத கிளைமாக்ஸ் ட்விஸ்டுக்காகவும், அதிலுள்ள நீதிபோதனைக்காகவும் இயக்குனரை நிச்சயம் பாராட்டலாம்.

தமன் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை. பின்னணி இசையையும் பிரமாதப்படுத்தி இருக்கிறார். சுகுமாரின் ஒளிப்பதிவு, படத்துக்கு கூடுதல் பலம்.

ஸ்கெட்ச் – குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம்!