குலேபகாவலி – விமர்சனம்

பழைய வெற்றிப்படத்தின் தலைப்பில் புதிய படம் எடுப்பது என்ற இன்றைய தமிழ் திரையுலக ட்ரெண்டுக்கு ஏற்ப, 1955ஆம் ஆண்டு எம்ஜிஆர் நடிப்பில், டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த ‘குலேபகாவலி’ என்ற படத் தலைப்பில், தற்போது பிரபு தேவா, ஹன்சிகா நடிப்பில், கல்யாண் இயக்கத்தில் புதிய படம் வெளியாகியிருக்கிறது.

ஒரு ரகசியமான இடத்தில் இருக்கும் புதையலைத் தேடி பல் நபர்கள் போட்டி போட்டுக்கொண்டு பயணித்து நாயாய் பேயாய் அலைவது என்பது அருதப்பழசிலும் அருதப்பழசான கதைக்கரு தான். எனினும், அதில் கொஞ்சம் நகைச்சுவையை தூவிவிட்டு புத்தம் புதிதாய் ஆக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.

1945ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு கப்பலில் வெளியேறும் ஒரு ஆங்கிலேயரிடமிருந்து வைர குவியலை நைசாக அபேஸ் செய்கிறார் ஒரு தமிழர். அப்படி அபேஸ் செய்த வைர குவியலை குலேபகாவலி என்ற ஊரில் உள்ள ஒரு கோயில் அருகே யாருக்கும் தெரியாமல் ரகசியமாக புதைத்து வைக்கிறார். தற்காலத்தில் வாழும் அவரது பேரனும் கேங்ஸ்டருமான ஆனந்தராஜ், அந்த வைர குவியலை கைப்பற்ற விரும்புகிறார். இதற்காக நாயகி ஹன்சிகாவின் தங்கையை பிணைக்கைதியாக பிடித்து வைத்துக்கொண்டு, ஹன்சிகாவை குலேபகாவலி ஊருக்குச் செல்ல நிர்பந்திக்கிறார்.

ஹன்சிகா, அவரது காதலரும் கோயில் சிலை திருடருமான பிரபு தேவா, ஆனந்தராஜின் கையாளான முனீஸ்காந்த் ஆகியோர் குலேபகாவலி நோக்கி செல்லுகையில், வைரப்புதையல் பற்றி தெரிந்து வைத்திருக்கும் கார் திருடி ரேவதியும் அவர்களுடன் சேர்ந்துகொள்ளுகிறார்.

ஆனால், வைரப்புதையலை தேடியெடுக்கும் இவர்களது முயற்சிக்கு மொட்டை ராஜேந்திரன், மன்சூர் அலிகான், போலீஸ் அதிகாரி சத்யன், குலேபகாவலி ஊர்க்காரர்கள் என பலரும் தடைக்கற்களாக இருக்கிறார்கள். இத்தடைகளைக் கடந்து வைர புதையலை பிரபு தேவா – ஹன்சிகா கைப்பற்றினார்களா என்பது மீதிக் கதை.

படத்தின் நாயகனாக வரும் பிரபுதேவா நடனம், காமெடி, முக பாவனைகள் என அனைத்திலும் கலக்கியிருக்கிறார். நாயகியாக வரும் ஹன்சிகா கவர்ச்சியை தாராளமாகக் காட்டி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். ரேவதி வழக்கத்துக்கு மாறான, வித்தியாசமான கதாபாத்திரத்தில் வந்தாலும், க்ளோசப்பில் “ப்ப்ப்ப்ப்பாஆஆஆ” என அலறும் அளவுக்கு பயங்கரமாக இருக்கிறார்.

மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ், முனிஸ்காந்த், யோகிபாபு, சத்யன் ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உணந்து காமெடியாக நடித்து, அப்ளாஸை அள்ளுகிறார்கள்.

முழுநீள காமெடி படம் கொடுக்க முயன்றிருக்கிறார் இதன் இயக்குனர் கல்யாண். ஆனால், அதற்கு ஏற்ற பக்கா திரைக்கதை அமைக்காததால், ஒரு சில காட்சிகளில் சிரிக்க முடிந்தாலும், முழுநீளத்துக்கு ரசித்து சிரிக்க முடியவில்லை.

ஆனந்த் குமாரின் ஒளிப்பதிவு ஓகே ரகம். மெர்வின் சாலமன் – விவேக் சிவா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம் என்றாலும், படத்துக்கு வேகத்தடை.

‘குலேபகாவலி’ – பார்க்கலாம்.