ஈட்டி – விமர்சனம்

தடகள விளையாட்டையும், ‘ராங்-கால்’ இளம்பெண்ணையும் ஒருசேர காதலிக்கும் சாகச இளைஞன் பற்றிய விறுவிறுப்பான படம் ‘ஈட்டி’.

தலைமை போலீஸ்காரரான ஜெயப்பிரகாஷ் தஞ்சாவூரில் தனது மனைவி, மகன் அதர்வா மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகிறார். மகன் அதர்வாவுக்கு பிறப்பிலிருந்தே ஓர் அரிய நோய். ‘பிளீடிங் டிஸ்ஆர்டர்’ எனப்படும் ‘ரத்த உறைவுத் திறனின்மை’ நோய். உடம்பில் ஒரு குண்டூசி குத்தினால்கூட ரத்தம் நிற்காமல் வெளியேறிக்கொண்டே இருக்கும். கொஞ்சம் ஆழமாக குத்தினால் அவருக்கு மரணம் நிச்சயம்.

அதர்வா சிறு வயதில் இருக்கும்போதே இதை தெரிந்துகொண்ட ஜெயப்பிரகாஷ், தன் மகனை கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார். தன் மகன் பெரிய விளையாட்டு வீரனாகி, தேசிய மற்றும் உலக அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு, பதக்கங்கள் வென்று, விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு மூலம் போலீஸ் துறையில் உயர்அதிகாரி ஆக வேண்டும் என விரும்பும் ஜெயப்பிரகாஷ், அதர்வாவை விளையாட்டில் அதிக ஆர்வம் காட்ட வைக்கிறார். ‘ரிடில்ஸ்’ எனப்படும் தடையோட்ட விளையாட்டு வீரராக வளர்கிறார் அதர்வா.

கல்லூரியில் படிக்கும் அதர்வா, தடகள விளையாட்டுப் பயிற்சியாளர் ஆடுகளம் நரேன் மூலம் சிறந்த தடகள விளையாட்டு வீரராக உருவெடுக்கிறார்.

இந்நிலையில், அதர்வாவுக்கு ராங்-கால் மூலம் சென்னையில் இருக்கும் நாயகி ஸ்ரீதிவ்யாவுடன் தொலைபேசி தொடர்பு ஏற்படுகிறது. தவறான தொலைபேசி அழைப்பால் ஏற்படும் குழப்பமும் சண்டையும் பின்னர் நட்பாகி, அதன்பின்னர் நேரில் பார்க்காமலே காதலாகிறது.

இந்த சமயத்தில் தடகள விளையாட்டின் இறுதிப் போட்டியில் கலந்துகொள்வதற்காக சென்னைக்கு வருகிறார் அதர்வா. சென்னை வந்தவுடன் ஸ்ரீதிவ்யாவை சந்திக்கச் செல்கிறார்.

இதற்கிடையில், ஸ்ரீதிவ்யாவின் அண்ணனான திருமுருகனுக்கும், கள்ள நோட்டு கும்பலுக்கும் விரோதம் ஏற்படுகிறது. காதலி ஸ்ரீதிவ்யாவிற்காக இந்த பிரச்சனையில் அதர்வா தலையிடுகிறார். இதனால் கள்ள நோட்டு கும்பல் அதர்வாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்கிறது. மேலும், சிறு காயம் பட்டால்கூட அதர்வா உயிரிழந்து விடுவார் என்பதையும் அந்தக் கும்பல் தெரிந்துக் கொள்கிறது.

இறுதியில், அதர்வா அந்த கும்பலிடம் தப்பித்து திட்டமிட்டபடி தடகள விளையாட்டுப் போட்டியில் கலந்துக் கொண்டாரா? அவரது தந்தையின் லட்சியம் நிறைவேறியதா? என்பது மீதிக்கதை.

படத்தின் நாயகனாக நடித்திருக்கும் அதர்வா யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தடகள விளையாட்டு வீரருக்கு உண்டான உடலமைப்புக்காக அதிகமாக உழைத்திருக்கிறார் என்பது பிரேமுக்கு பிரேம் தெரிகிறது. அந்த உழைப்புக்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது என்றே சொல்லலாம். அப்பாவின் லட்சியத்தை நிறைவேற்றுவதற்காக போராடுவது, காதலிக்காக கள்ள நோட்டு கும்பலுடன் மோதுவது என இரண்டு முனைகளிலும் சிறப்பாக நடித்து பாராட்டு பெறுகிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீதிவ்யா ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பொறுப்பான அப்பாவாக ஜெயப்பிரகாஷ், ஊக்கம் கொடுக்கும் விளையாட்டு பயிற்சியாளராக ஆடுகளம் நரேன் ஆகியோர் கொடுத்த கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள்.

விளையாட்டை மையப்படுத்தி பல படங்கள் வெளியாகியிருந்தாலும், இந்த படத்தை சற்று வித்தியாசமான கோணத்தில் இயக்கி சபாஷ் பெற்றிருக்கிறார் இயக்குனர் ரவி அரசு. சிறந்த கதாபாத்திரங்களை உருவாக்கி, அதற்கு பொருத்தமான நடிகர் – நடிகையரை தேர்வு செய்து, அவர்களிடருந்து அற்புதமான நடிப்பை வெளிக்கொணர்ந்து, முழுப் படத்தையும் ரசிக்கும் வகையில் படைத்திருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் ரசிக்கும் விதம். பின்னணி இசையை சிறப்பாக கொடுத்திருக்கிறார். சரவணன் அபிமன்யுவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.

‘ஈட்டி’ – வெற்றிப் பாய்ச்சல்!