உப்புக்கருவாடு – விமர்சனம்

இது ஒரு மெட்டா வகைப் படம். சினிமாக்காரர்களை கதாபாத்திரங்களாகக் கொண்டு, சினிமாவுக்குள் சினிமா எடுப்பது போல் கதையம்சம் கொண்ட மெட்டா வகைப்படம், தமிழுக்கு புதியதல்ல. ஸ்ரீதரின் ‘காதலிக்க நேரமில்லை’, பாரதிராஜாவின் ‘கல்லுக்குள் ஈரம்’,  ராதாமோகனின் ‘அழகிய தீயே’, பார்த்திபனின் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’, கார்த்திக் சுப்பராஜின் ‘ஜிகிர்தண்டா’, லட்சுமணனின் ‘மசாலா படம்’ என அந்த பட்டியல் ரொம்ப நீளம். சினிமாக்காரர்கள் என்ற சாதியாருக்கு இத்தகைய படங்கள் கண்டிப்பாகப் பிடிக்கும். ஆனால், சினிமாக்காரர்களுக்கு மட்டுமே பிடித்த படங்கள் தோல்வியைத் தழுவும் என்பதும், சினிமாக்காரர்களைத் தாண்டி பொதுவெளி மனிதர்கள் ரசிப்பதற்கென்று ஏதோ உள்ள மெட்டா வகைப் படங்கள் தான் வெற்றி பெறும் என்பதும் கடந்தகால அனுபவப் பாடம். ‘உப்புக்கருவாடு’ எப்படி? பார்க்கலாம்…

படத்தில் திரைப்பட இயக்குனராக வருகிறார் நகைச்சுவை நடிகர் கருணாகரன். அவர் எடுத்த முதல் படம் படுதோல்வி. இரண்டாவது படம் பாதியில் நின்றுபோனது. அடுத்து புதிதாக ஒரு படம் எடுக்கும் முயற்சியில் இருக்கிறார். இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையில் மீடியேட்டராக இருந்து இரு தரப்பையும் கோர்த்துவிடும் பணியை செய்துவரும் மயில்சாமி, மீனவ தாதாவான எம்.எஸ்.பாஸ்கரிடம் கருணாகரனை கோர்த்துவிடுகிறார்.

எம்.எஸ்.பாஸ்கரின் இரண்டாவது மனைவி, சினிமா கதாநாயகியாக ஆசைப்பட்டு, அது முடியாமல் துணை நடிகையாக தரைதட்டிப் போனவர். அவர் தன் மகள் நந்திதாவை கதாநாயகி ஆக்க ஆசைப்படுகிறார். அவரது ஆசையை பூர்த்தி செய்வதற்காக ஒரு படம் தயாரிக்க முன்வந்த எம்.எஸ்.பாஸ்கர், அந்த படத்துக்கு கருணாகரனை இயக்குனர் ஆக்குகிறார்.

கருணாகரன் தன் உதவி இயக்குனர்களை வைத்து கதை விவாதம் நடத்தி, சிரிப்பூட்டும் வகையில் படாதபாடு பட்டு, ஒருவழியாக ‘சமுத்திர ராணி’ என்ற தலைப்பில் ஒரு ஹீரோயின் சப்ஜெக்ட் ரெடி பண்ணுகிறார். அதன்பிறகு தான் தெரிகிறது, நந்திதாவுக்கு சுட்டுப்போட்டாலும் நடிக்க வராது என்ற விஷயம்!

தங்கையின் திருமணத்துக்கு பணம் தேவைப்படுவதால், இந்த படத்தை இயக்கியாக வேண்டிய நிர்ப்பந்தம் கருணாகரனுக்கு. ஆனால் நடிப்பு வராத நந்திதாவை வைத்து ஒரு ஷாட்கூட எடுக்க முடியாது என்ற பரிதாப நிலை. இந்த முடிச்சு ஏற்படுத்தும் பிரச்சனைகளை படுகாமெடியாக சித்தரித்து, இறுதியில் சுபமாக முடிச்சை அவிழ்த்திருக்கிறார்கள்.

‘அழகிய தீயே’, ‘மொழி’, ‘அபியும் நானும்’, ‘பயணம்’ போன்ற தரமான படங்களைக் கொடுத்த இயக்குனர் ராதாமோகனின் மற்றுமொரு தரமான படைப்பு இது. குடும்பத்தோடு  கண்டு களிப்பதற்குரிய நகைசுவை கலந்த, ஆபாசமும் வன்முறையும் துளியும் இல்லாத படமாக இதை கொடுத்ததற்காக ராதாமோகனை பாராட்டலாம். காட்சிக்குக் காட்சி நகைச்சுவையைப் புகுத்தி, அதேநேரத்தில் கதையிலிருந்து இம்மியளவும் விலகாமல் அவர் படத்தை நகர்த்தியிருப்பது சிறப்பு.

கருணாகரன் கதாபாத்திரம் படத்தில் ரொம்ப சீரியசாக இருக்கும். ஆனால் அவர் வரும் காட்சிகளெல்லாம் நம்மை சிரிக்க வைக்கும். ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய காமெடி ஹீரோவாக இதில் புரமோஷன் பெற்றுவிட்டார் கருணாகரன். வாழ்த்துக்கள்.

நன்றாக நடிக்கத் தெரிந்த ஒரு நடிகை, நடிக்கவே தெரியாத பெண்ணாக நடிப்பது மிகவும் சவாலான விஷ்யம். இந்த சவாலில் நந்திதா ஜெயித்திருக்கிறார். அவர் பாடும் “நேரு மாமா…” ரைம்ஸை நினைத்து நினைத்து நாளெல்லாம் சிரிக்கலாம். நந்திதாவுக்கு யார் மீது காதல் வருகிறது என்று தெரிந்தால்… நீங்க அப்படியே ஷாக் ஆயிடுவீங்க…!

இப்படத்துக்குள் வரும் படத்தின் நாயகன் கதாபாத்திரம் ஏற்றுள்ள நடன இயக்குனர் சதீஷ், இயல்பாக சிறப்பாக நடித்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் குமரவேல் பின்னி எடுத்திருக்கிறார்.

எம்.எஸ்.பாஸ்கர், மயில்சாமி, சார்ம்ஸ், டவுட் செந்தில், டவுட் சரவணன் என பெரிய நகைசுவை நட்சத்திர பட்டாளமே ஒன்றுகூடி நகைச்சுவையை உத்திரவாதம் செய்திருக்கிறது.

‘உப்புக்கருவாடு’ – நகைச்சுவைப் பிரியர்களுக்கு செம விருந்து!