“ராகுலுக்கு எதிராக பொய்களை பரப்புவதில் ஒட்டுமொத்த பாஜகவும் தீவிரம்!” – பிரியங்கா காந்தி

“ராகுல் காந்திக்கு எதிராக ஒட்டுமொத்த பாஜகவும் பொய்களைப் பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது” என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “பாஜக சாதி, மதம் மற்றும் கோயில் – மசூதி பற்றி பேசுகிறது, ஆனால் மக்கள் தொடர்பான உண்மையான பிரச்சினைகளைப் பற்றி பேசவில்லை. ரேபரேலி மக்கள்  அரசியல் கட்சி தலைவர்களை நன்கு புரிந்து கொண்டுள்ளனர். இம்மக்கள் இந்திராஜியின் (இந்திரா காந்தி) சில கொள்கைகள் பிடிக்காதபோது, அவரையும் தோற்கடித்தனர். இந்திரா காந்தி அதை கோபப்படாமல், சுயபரிசோதனை செய்துகொண்டார். இதன் தொடர்ச்சியாக, நீங்கள் மீண்டும் அவரை தேர்ந்தெடுத்தீர்கள். தலைவர்களைப் புரிந்துகொள்வது ரேபரேலி மக்களின் சிறப்பு.

பாஜக அரசியல் சாசனத்தை மாற்ற விரும்புகிறது. ஆனால், தோல்வி பயம் காரணமாக தங்களிடம் அப்படிப்பட்ட எந்தவொரு திட்டமும் இல்லை என பிரதமர் மோடி கூறுகிறார். ராகுல் காந்திக்கு எதிராக ஒட்டுமொத்த பாஜகவும் பொய்களைப் பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ரேபரேலி மக்கள் மீண்டும் காங்கிரஸ் தலைமையை ஏற்க தயாராக உள்ளனர்” என்றார்.

உ.பி.யில் அமேதி, ரேபரேலி தொகுதிகள் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய தொகுதிகளாக உள்ளன. இங்கு நேரு – காந்தி குடும்பத்தினர் தொடர்ந்து போட்டியிட்டு வருகின்றனர். அமேதியில் இருந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2004 முதல் 3 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019-ல் அவர் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வி அடைந்தார். எனினும் அவர் 2-வது தொகுதியாக போட்டியிட்ட, கேரளாவின் வயநாட்டில் வெற்றி பெற்றார். தற்போதைய தேர்தலில் ரேபரேலியில் ராகுல் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. அமேதி, ரேபரேலி இரண்டு தொகுதிகளுக்கும் ஐந்தாவது கட்டமாக மே 20-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது கவனிக்கத்தக்கது.