“ஜெயலலிதா உடல்நிலை பற்றிய செய்தியில் மூடுமந்திரம்”: கருணாநிதி எழுப்பும் கேள்விகள்!
“ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய செய்தி யாருக்கும் தெரிந்து விடக்கூடாதென்று மூடு மந்திரமாக வைத்திருப்பதால், ஒரு சிலர் வேண்டுமென்றே விரும்பத்தகாத செய்திகளை எல்லாம் வதந்திகள் மூலமாகப் பரப்பி வருகிறார்கள். அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற வகையிலாவது சிகிச்சை பெற்று வரும் முதல்வரின் புகைப்படத்தை வெளியிட்டிருக்க வேண்டும்” என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒரு வார காலத்திற்கும் மேலாக – கடந்த 22ஆம் தேதி முதல், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைபாடு ஆகியவற்றுக்குச் சிகிச்சை பெற்று குணம் அடைந்து வருவதாகவும், ஆனாலும் இன்னும் சில நாட்கள் மருத்துவமனையிலே இருக்க வேண்டுமென்று அப்போலோ மருத்துவமனை தெரிவிப்பதாகவும் செய்திகள் வருகின்றன.
அதேநேரத்தில் முதல்வர் மருத்துவமனையில் இருந்தவாறே காவிரி பற்றி ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தியதாகவும், டெல்லியில் அவர் ஆற்ற வேண்டிய உரையினை அவரே “டிக்டேட்” செய்ததாகவும் செய்தி வருகிறது.
ஆனால் சாதாரண சந்திப்பையும், அதிகாரிகளுடனான கூட்டத்தையும் புகைப்படம் எடுத்து வெளியிட்டுக்கொண்டிருந்த நிலையில், முதல்வர் அவ்வாறு மருத்துவமனையிலேயே ஆலோசனை நடத்திய புகைப்படம் எதுவும் வெளியிடப்படவில்லை.
மருத்துவமனையிலே அவர் எவ்வாறு இருக்கிறார் என்பதை தெரிந்துகொள்ள, அவருடைய கட்சியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் பரிதவிப்பிலும், குழப்பத்திலும் இருக்கிறார்கள்.
அப்பாவித் தொண்டர்களுக்காகவாவது ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கின்ற புகைப்படம் ஒன்றை எடுத்து வெளியிட்டு குழப்பத்தைப் போக்கிட யாரும் முன்வரவில்லை.
ஒரு வாரத்திற்கு மேல் சிகிச்சை பெற்று வரும் முதல்வரை தமிழக ஆளுநர் இதுவரை நேரில் சென்று பார்க்கவில்லை.
ஏன், அதிமுகவின் தோழமைக் கட்சித் தலைவர்கள் கூட அவரைக் கண்டு பேசியதாக செய்தி வரவில்லை. இவ்வாறு ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய செய்தி யாருக்கும் தெரிந்து விடக்கூடாதென்று மூடு மந்திரமாக வைத்திருப்பதால், ஒரு சிலர் வேண்டுமென்றே விரும்பத்தகாத செய்திகளை எல்லாம் வதந்திகள் மூலமாகப் பரப்பி வருகிறார்கள்.
அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற வகையிலாவது சிகிச்சை பெற்று வரும் முதல்வரின் புகைப்படத்தை வெளியிட்டிருக்க வேண்டும்.
மேலும் முதல்வர் இத்தனை நாட்கள் மருத்துவமனையிலே சிகிச்சை பெறுவது பற்றி மரபுகளை அனுசரித்து முறைப்படி மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய பொறுப்பிலே உள்ள மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரோ, தலைமைச் செயலாளரோ இதுவரை எந்தவிதமான அறிவிப்பும் செய்யவில்லை.
அரசுக்கு மிகவும் சார்பான ஒரு வார இதழிலே கூட வெளியிட்டுள்ள செய்தியில், “1984இல் எம்.ஜி.ஆர். அப்பல்லோவில் சிகிச்சை பெற்ற போதும் வதந்திகள் றெக்கை கட்டின. அப்போது சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த டாக்டர் ஹண்டே மூலமாக தினமும் உண்மை நிலவரங்களை வெளிப்படுத்த அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதே போன்ற ஒரு நடைமுறையைக் கடைப்பிடித்தால், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்கிறார்கள், விவரமான அதிகாரிகள். அது நல்ல யோசனை தான்” என்று குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஜெயலலிதாவைப் பார்க்க மருத்துவமனைக்கே சென்றதாகத் செய்தி வந்ததே தவிர, அவர் முதல்வரை நேரில் பார்த்து நலம் விசாரித்ததாகச் செய்திகள் இல்லை. அவரைப் போலவே வேறு பலரும் மருத்துவமனைக்குச் சென்றார்கள் என்று செய்தி வருகிறதே தவிர, யாரும் ஜெயலலிதாவை நேரில் பார்த்து நலம் விசாரித்ததாகச் செய்தி இல்லை.
அ.தி.மு.க.வின் அவைத்தலைவரே, செய்தியாளரிடம் இதுவரை யாரும் முதல்வரைப் பார்க்கவில்லை என்று சொல்லியிருக்கிறார்.
இதன் காரணமாக வேண்டாதவர்கள் தேவையில்லாமல் சமூக வலைதளம் உள்ளிட்டவற்றின் மூலமாக வீண் வதந்திகளைப் பரப்பி, அதை நம்பிக் கொண்டு அவருடைய கட்சித் தொண்டர்களே வேதனையடைகின்றனர்.
இந்த வதந்திகளுக்கு முடிவு கட்டிடும் வகையிலாவது தமிழக அரசின் சார்பில் முதல்வரின் உடல் நிலை குறித்து தக்க ஆதாரங்களோடு செய்தியாளர்கள் வாயிலாக நல்ல தகவலை நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க முன் வர வேண்டும்.
முதல்வருக்கு கடந்த ஒரு வார காலமாக காய்ச்சல் நீடிக்கிறது என்றால், முறைப்படி மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழுவில் யார் யார் இடம் பெற்றிருக்கிறார்கள் என்பது நாட்டிற்கு இதற்குள் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.
அந்த மருத்துவக் குழுவின் சார்பில் அடிக்கடி முதல்வரின் உடல் நிலை குறித்து உண்மைத் தகவலை மக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.
முதல்வரின் உடல் நிலை குறித்து, ஜெயலலிதாவே காணொலி மூலமாக மக்களுக்கு காட்சி தர வேண்டுமென்று ஒரு சில நாட்களுக்கு முன்பு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கையே கொடுத்திருந்தார்.
அதற்கும் அரசின் சார்பில் எந்தவிதமான விளக்கமும் தரப்படவில்லை. அரசு அலுவல்களை எல்லாம் முதல்வர் மருத்துவ மனையிலிருந்தே ஆற்றி வருகிறார் என்பது போன்ற செய்திகள் வருவதால், அவருடைய புகைப்படத்தை எடுத்து ஏடுகளில் வெளியிடுவதில் எந்தத் தவறும் இருக்க முடியாது.
“சசிகலாவும், ஷீலா பாலகிருஷ்ணனும், ஜெயலலிதாவின் நிழல்கள்தான். நிழல், நிஜம் ஆகாது. நிழல் ஆள மக்கள் வாக்களிக்கவில்லை” என்று மற்றுமொரு வார இதழ் சுட்டிக் காட்டியிருப்பதை அலட்சியப்படுத்தலாகாது; அரசியல் சட்டம் தவறான வழியில் பயன்படுத்தப் படுமானால், அதை அனுமதிக்கலாகாது.
நான் ஏற்கனவே என்னுடைய அறிக்கையில் தெரிவித்தவாறு, எனக்கும் அவருக்கும் இடையே கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும், அவர் விரைவில் முழு நலம் பெற்று, எப்போதும் போலத் தனது பணிகளைத் தொடர்ந்திட வேண்டும் என்பது தான் எனது உளப்பூர்வமான விருப்பமாகும்.
எனவே அவர் விரைவிலே முழு உடல் நலம் பெற வேண்டுமென்ற எனது விழைவினைத் தெரிவிக்கும் அதே நேரத்தில், வதந்திகளுக்கு உடனே முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழக அரசின் நிர்வாகம் செயல்பட வேண்டுமென்றும்; அதற்கேற்ற ஏற்பாடுகளைத் தமிழக ஆளுநர் கையிலெடுக்க வேண்டுமென்றும்; தமிழக மக்கள் விரும்புகிறார்கள் என்பதால் அதனை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.