“ஜெயலலிதா சிகிச்சையில் மர்மம்: ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்வேன்!” – சசிகலா புஷ்பா
முதல்வர் ஜெயலலிதா இப்போது எங்கே உள்ளார், எப்படிப்பட்ட நிலையில் உள்ளார் என்று தெரியாமல் தொண்டர்கள் கவலையில் இருப்பதாகவும், தேவைப்பட்டால் தானே ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்போவதாகவும், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட எம்.பியான சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேட்டியளித்துள்ள சசிகலா புஷ்பா, “மருத்துவமனையில் முதல்வர் அனுமதிக்கப்பட்டு பல நாட்கள் ஆகியும் அவர் முகத்தைக் காட்டவில்லை. அவர் குரலைக் கேட்க முடியவில்லை. அவர் பூரண குணமடைய வேண்டும் என்று எதிர்க்கட்சி முதற்கொண்டு அனைத்துக் கட்சியினரும் வேண்டியுள்ளனர். முதலமைச்சர் நலமாக இருக்கிறார் என்றால், அவரைக் காட்ட வேண்டும். இல்லை என்றால், ‘நான் நன்றாகத்தான் இருக்கிறேன். தமிழக மக்கள் கவலைப்பட வேண்டாம்’ என்று வாட்ஸ் அப் மூலம் முதலமைச்சரே பேசி வெளியிடலாம்.
லட்சக்கணக்கான தொண்டர்களுக்காக, அவர்களின் நிம்மதிக்காக வாட்ஸ் அப்பில் அரை நிமிடம் பேசி, அவரது குரலைத் தொண்டர்கள் கேட்டால் நிம்மதி அடைவார்கள். ஏன் அவர்கள் அதைச் செய்யவில்லை என்றுதான் தெரியவில்லை.
தமிழ்நாட்டின் முதலமைச்சரை இத்தனை நாட்களாகப் பார்க்க முடியவில்லை. அவர் யாருடைய பிடியின் கீழ் இருக்கிறார்? முதலமைச்சருக்குப் பிடித்த எத்தனையோ தலைவர்கள் இருக்கிறார்கள். ஏன் இவர்கள் எல்லாம், முதலமைச்சர் முன்பு செல்லக்கூட அனுமதிக்கப்படவில்லை? ஏன் உள்ளே செல்ல அனுமதிக்கக் கூடாது? ஒரு சிலரது கஸ்டடியில் வைத்துக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற கட்டளை எதற்காக? முதலமைச்சரை என்ன செய்யப் போகிறார்கள்? முதலமைச்சர் என்ன நிலையில் இருக்கிறார்? இது தொண்டர்களுக்கு உள்ள வருத்தம், கவலையாகும்.
இப்போது கொடுக்கப்படும் மருத்துவம் ஏன் இப்படி ஒளித்து வைக்கப்படுகிறது? என்ன நடக்கிறது? அந்த பயம் பொதுமக்கள் மத்தியிலும் தொண்டர்கள் மத்தியிலும் இருக்கிறது. முதலமைச்சருடன் அவரது தோழி இருப்பதாகத்தான் சொல்கிறார்கள். அவர் விருப்பத்துடன்தான் வைத்துக் கொள்ளப்படுகிறாரா அல்லது கட்டாயப்படுத்தி அவரது கண்காணிப்பில் இருக்கிறாரா? என்பது என் கேள்வி.
கட்டாயத்தின் பேரில் அவரது பிடியில் வேறுவழியில்லாமல் முதல்வர் இருக்கிறார் என்றால், அதை என்னால் மட்டும் அல்ல, தமிழ்நாட்டு மக்களாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இவை எல்லாம் தமிழகத்தில் ஒரு பயத்தை ஏற்படுத்தி உள்ளன. ஒரு குடும்பத்தின் பிடியில் உள்ளார் என்ற அச்சம் அனைவருக்கும் ஏற்பட்டு உள்ளது” என்று கூறியுள்ளார் சசிகலா புஷ்பா.
”முதலமைச்சர் தமிழக மக்களுக்குப் பொதுவானவர். அவருக்கு என்ன நோய் என்பதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். இதை மருத்துவமனை நிர்வாகம் புரிந்துகொள்ள வேண்டும். மருத்துவமனை நிர்வாகம் எதையோ மூடிமறைக்கிறது என்ற சந்தேகம் பொதுமக்களுக்கும், முதல்வர் நலனில் அக்கறை உள்ளவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால், நான் பிரதமரைச் சந்தித்து ‘தமிழக முதல்வர் எங்கே இருக்கிறார்? நீங்கள் கொண்டுவந்து தாருங்கள்’ என்று மனுக் கொடுக்க உள்ளேன். உள்துறை அமைச்சரையும் சந்தித்து மனுக் கொடுப்பேன். குடியரசுத் தலைவரையும் சந்திப்பேன்” என்று கூறியுள்ள சசிகலா புஷ்பா, தேவைப்பட்டால், முதல்வரைக் கண்டறிய வேண்டி ஒரு ஆட்கொணர்வு மனுவை தானே தாக்கல் செய்ய போவதாகவும் கூறியுள்ளார்.