ஜெயலலிதா உடல்நிலை பற்றி அவதூறு பரப்பியதாக தமிழச்சி மீது வழக்குப்பதிவு!

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி தமிழச்சி தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார்.

இது அவதூறு என்றும், இது தொடர்பாக தமிழச்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் ராமச்சந்திரன், சென்னை சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார்.

இதனையடுத்து, முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி அவதூறு பரப்பியதாக, தமிழச்சி மீது போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழச்சி பிரான்சில் வசிப்பவர். எழுத்தாளர். சமூக செயல்பாட்டாளர். முகநூலில் தீவிரமாக இயங்குபவர். சுவாதி கொலை வழக்கு தொடர்பாக பல அதிர்ச்சிகரமான தகவல்களை தொடர்ந்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.