தமிழ்நாடு, புதுச்சேரியில் அமைதியாக நடந்து முடிந்தது மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு!

மக்களவைத் தேர்தலில் முதல் கட்டமாக நாடு முழுவதும் 102 தொகுதிகளில் இன்று (19-04-2024) வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் நடந்து முடிந்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு காலை 7:00 மணிக்கு தொடங்கியது. காலையில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக இருந்தது. பல வாக்குச்சாவடிகளிலும் 7 மணிக்கு முன்பே வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்ததை பார்க்க முடிந்தது.

காலை 11 மணிக்குப் பிறகு வெயிலின் உக்கிரம் அதிகமாக இருந்ததால் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களின் வரவு சற்று குறைவாகவே இருந்தது. வெயில் குறைந்த மாலை வேளையில் வாக்காளர்கள் வருகை மீண்டும் அதிகரித்தது.

சரியாக மாலை 6 மணியளவில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு நேரம் நிறைவடைந்தது. அந்த நேரத்தில், தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட ஆவணங்களோடு வாக்குச்சாவடியில் காத்திருந்த அனைவருக்கும் டோக்கன்கள் வழங்கப்பட்டன. அவர்கள் மட்டும் எந்த நேரமானாலும் காத்திருந்து வாக்களிக்க முடியும்.

முக்கிய தலைவர்கள், பிரபலங்கள்:

இந்தத் தேர்தலில் பொதுமக்களுடன், முக்கியத் தலைவர்களும் பிரபலங்களும் வாக்களித்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை எஸ்.ஐ.டி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது மனைவி துர்காவுடன் நடந்தே சென்று வாக்கு செலுத்தினார். அதுபோல், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச்செயலாளர் முத்தரசன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஏனைய அரசியல் கட்சித்தலைவர்களும் தத்தமது வாக்குச்சாவடிகளில் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். அதுபோல், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விக்ரம், சூர்யா, கார்த்தி, சிவகுமார், தனுஷ், வடிவேலு, விஜய் ஆண்டனி, திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஏனைய திரையுலக பிரபலங்களும் தத்தமது வாக்குச்சாவடிகளில் வாக்குகளைப் பதிவு செய்தனர்.