“நட்டு வைத்த வேலுக்கு பொட்டு வைத்தது போல் நிமிர்ந்து நிற்கும் நிர்மலா சீதாராமன்”: வைரமுத்து ஆயில்!

பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மொழியில் எழுதிய கவிதைகள் தொகுப்பு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ‘சிந்தனைக் களஞ்சியம்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது. மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட இதற்கான நிகழ்ச்சியில் வைரமுத்து பேசியதாவது:–

இந்திய பிரதமர் மோடியை நான் 3 காரணங்களுக்காக பாராட்டுகிறேன்.

இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரான கருணாநிதியைத் தேடிப்போய் நலம் கேட்டார் மோடி. அந்த அரசியல் பண்பாட்டுக்கு என் முதல் பாராட்டு. நட்டு வைத்த வேலுக்கு பொட்டு வைத்தது போல் நிமிர்ந்து நிற்கும் நிர்மலா சீதாராமனை இந்திய பாதுகாப்புத் துறை மந்திரியாக நியமித்திருக்கிறார். இந்திய பெண் குலத்திற்கு பெருமை சேர்த்ததற்காக என் இரண்டாம் பாராட்டு.

இன்று வெளியிடப்படும் இந்த நூலுக்கு ‘நரேந்திர மோடியின் கவிதைகள்’ என்று பெயர் சூட்டாமல் ‘சிந்தனைக் களஞ்சியம்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். அந்த இலக்கிய நேர்மைக்கு என் மூன்றாம் பாராட்டு.

‘நான் கவிஞனுமல்ல; காவியம் படைப்பவனுமல்ல; நான் கலைமகளின் பக்தன்’ என்று தன்னடக்கம் காட்டுகிற மோடி, விளைந்த கதிர் வளைந்து நிற்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் திகழ்கிறார்.

இந்த சிந்தனைக் கவிதைகளுக்குள் நான் ஒரு பிரதமரை பார்க்கவில்லை. இதயம் உள்ள மனிதனைப் பார்க்கிறேன். இயற்கையின் காதலனைப் பார்க்கிறேன். நல்லிணக்கம் பேணத் துடிக்கும் ஓர் நல்லுள்ளத்தைப் பார்க்கிறேன். நர்மதை நதியை குஜராத்தின் கைரேகை என்று காணும் ஒரு கவிஞனைப் பார்க்கிறேன்.

அந்நாள் பிரதமர் வாஜ்பாயின் கவிதைகளை, பிரதமர் இல்லத்தில் 2001ஆம் ஆண்டு வெளியிட்டேன். அப்போது பிரதமரைப் பார்த்துச் சொன்னேன். ‘‘நீங்கள் விரும்பினால் என்றாவது ஒருநாள் முன்னாள் பிரதமர் ஆகலாம்; ஆனால் ஒருபோதும் முன்னாள் கவிஞராக முடியாது’’. அந்நாள் பிரதமருக்கு சொன்ன அதே வரியைத்தான் இந்நாள் பிரதமருக்கும் சொல்கிறேன். ஒரு கவிஞனுக்குள் இருக்கும் ஒரு தலைவன் விமர்சனத்திற்கு உட்பட்டவன். ஆனால் ஒரு தலைவனுக்குள் இருக்கும் கவிஞன் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவன். கவிஞர் நரேந்திர மோடியை வாழ்த்துகிறேன்.

இவ்வாறு வைரமுத்து செம ஆயில் அடித்து பேசினார்.

வைரமுத்துவுக்கு ஒரு தேசிய விருது பார்சல்…!

 

Read previous post:
0a1d
‘பிக்பாஸ்’ புகழ் ஹரிஷ் கல்யாண் – ரெய்சா இணையும்  ‘பியார் பிரேமா காதல்’ 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண் - ரெய்சா ஜோடியாக நடிக்க, முழுக்க முழுக்க காதல் கதையாக ‘பியார் பிரேமா காதல்’ என்ற படம் உருவாகிறது.

Close