தமிழக மீனவர்களை நாவால் சுட்ட நிர்மலா சீதாராமனுக்கு திண்டுக்கல் சீனிவாசன் ஆதரவு!

நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது ‘பாரத திருநாட்டு’ கடலோர காவல் படை துப்பாக்கி சூடு நடத்தியதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் கொதித்தெழுந்த மீனவர்கள் நீதி கேட்டு போராட்டத்தை தொடங்கினார்கள். அவர்களை நேரில் சந்தித்த கடலோர காவல் படை அதிகாரிகள், “தவறுதலாக இச்சம்பவம் நடந்துவிட்டது” என வருத்தம் தெரிவித்ததோடு, “இனி இப்படி நடக்காது” என உறுதியும் அளித்ததால் மீனவர்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டார்கள்.

இந்நிலையில், சென்னை வந்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், “தமிழக மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல் படை துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை” என்று வார்த்தைகளால் கொடூரமாக தமிழக மீனவர்களை சுட்டார். இதனால் மீனவர்கள் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்துள்ளார்கள்.

இது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு இன்று திண்டுக்கல்லில் அமைச்சர் சீனிவாசன் பதிலளிக்கையில், ”தமிழக மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல் படை துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது சரிதான். அவர் சொன்ன கருத்து தான் எனது கருத்தும். ஆனால் தமிழக மீனவர்கள் மாறுபட்ட கருத்தை கூறி வருகின்றனர்” என்றார்.

“நாயும் பிழைக்கும் இப்பிழைப்பு!” – பாரதியார்.