“அதிமுக – பாஜக கூட்டணி முறிவு நீண்ட நாள் நீடிக்காது”: ஜவாஹிருல்லா கருத்து

அதிமுக மற்றும் பாஜக இடையிலான கூட்டணி முறிவு நீண்ட நாள் நீடிக்காது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை அன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வதாக அதிமுக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் ஆகியவற்றை அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து சந்தித்தது. 2024 மக்களவைத் தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்று இரு கட்சிகளும் அறிவித்திருந்தன. மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், நாடு முழுவதும் அனைத்துக் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இந்த சூழலில் 2 கோடி தொண்டர்களின் எண்ணத்துக்கும், விருப்பத்துக்கும் மதிப்பளித்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி கொள்வதாக அதிமுக அறிவித்தது.

“இந்த கூட்டணி முறிவு நீண்ட நாள் நீடிக்காது என நான் கருதுகிறேன். இது அதிமுக தரப்பில் பாஜகவுக்கு கொடுக்கப்பட்டுள்ள அழுத்தம் என பார்க்கிறேன். அண்ணாமலையை நீக்கிவிட்டு தங்களுடன் இணக்கமாக இயங்கும் யாரையேனும் அப்பொறுப்பில் நியமிக்க வேண்டும் என்பதுதான் அதிமுக போட்டுள்ள கணக்கு. இது அனைத்துக்கும் மேலாக பாஜக உடனான கூட்டணியை நிரந்தரமாக முறித்துக் கொள்ளும் தைரியம் அதிமுகவுக்கு இல்லை” என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.